ராஜா ராணி

No comments
விபத்தில் காதலியை பலிகொடுத்த ஆர்யாவுக்கும், தற்கொலையில் காதலனை இழந்த நயன்தாராவுக்கும் கட்டாய திருமணம் நடக்கிறது. விருப்பம் இல்லாத அந்த திருமண பந்தத்திலிருந்து வெளியில் வர இருவருமே ஒருவரை ஒருவர் டார்ச்சர் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஒருவரின் காதல் கதை மற்றவருக்கு தெரியவர, ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பிக்கிறார்கள். 

ஆனால் ஈகோ புகுந்து விளையாட, இருவரும் எப்படி கணவன் மனைவியாக இணைகிறார்கள் என்பது மீதி கதை. கதை பழசுதான். ஆனால் அதை தந்திருக்கும் விதம் ஃபிரஷ். ஆர்யாநயன்தாரா ஜோடி சென்டிமென்டாகவும், ஆர்யாநஸ்ரியா, ஜெய்நயன்தாராவின் காதலும், முடிவும் செம ஜாலியாக தொடங்கி சோகத்திலும் முடிகிறது. எல்லா உணர்வுகளையும் சரியான விகிதத்தில், விதத்தில் தந்து முதல் படத்திலேயே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் அட்லீ. கார் கம்பெனியில் வேலை செய்யும் இளைஞராக ஆர்யா அசத்துகிறார்.

 நஸ்ரியாவை நைட்டியில் பார்த்ததில் காதல் தொடங்க, அவர் பிரதர் பிரதர் என்று வெறுப்பேற்ற காதல் வந்த பிறகு அதே பிரதரை லவ்மூடில் உச்சரிப்பதுமாக ஆர்யா, நஸ்ரியா காதல் ஜாலி ஏரியா. அதற்குள் புகுந்து சந்தானம் பண்ணும் அலப்பறைகள் ஜாலியை அதிகப்படுத்துகிறது. ஜெய், நயன்தாரா காதல் அதிரி புதிரி ஆட்டம். கால் சென்டரில் வேலை பார்க்கும் ஜெய்யின் அழுவாச்சி காதலும், நயன்தாரா, ஜெய்யை போட்டு வாங்கும் காட்சிகளில் எல்லாம் தியேட்டர் குலுங்குகிறது. ‘

ஏங்க நானும் ஐ லவ்வுதாங்க’ என ஜெய் அலறுவது வரை நயன்தாராவின் ராஜ்ஜியம்தான். அப்பா சத்யராஜை டார்லிங் டார்லிங் என்றே அழைப்பது அவருக்கு பீர்வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணுவது, துக்கம் தாளாமல் அவர் மடியில் கிடந்து கதறுவது, திருமணத்துக்கு பிறகு ஆர்யாவை எரிக்கும் கண்களுடன் பார்ப்பது, அவர் கதையை கேட்டதும் உருகுவது, பின்னர் ஈகோவால் பொறுமுவது, வலிப்பு ஏற்படும்போதெல்லாம் வாயில் நுரை தள்ளி விழுவது என நயன்தாரா முழுமையாக ஆக்கிரமிக்கிறார். 

பின்புறம் வழியாக அறிமுகமாகும் அந்த காட்சியிலிருந்து காரின் மீது விழுந்து ரோட்டில் இழுத்து செல்லப்பட்டு ரத்த சகதியில் மிதப்பது வரை நஸ்ரியா, அழகு. ஆர்யா வழக்கம்போல. ஜெய் நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறார். சத்யராஜ் விசாலமான மனம் கொண்ட தந்தையாகவே மாறி இருக்கிறார். சத்யன், ஜெய் ஏரியாவில் கலகலப்பூட்டுகிறார். ஜி.வி.பிரகாசின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் காதுக்கு சென்று விட்டது. 

பின்னணி இசையும் ஓகே. வில்லியம்சின் கேமரா படத்தின் தரத்தை உயர்த்திப் பிடிக்கிறது. என்னதான் நயன்தாராவை ஆர்யாவுக்கு பிடிக்காவிட்டாலும் அவர் பெயர், போன் நம்பர் தெரியாது என்று சொல்வதெல்லாம் ஓவர். ஜெய்யின் தற்கொலையை, நயன்தாரா ஒரு போன்காலில் நம்பி விடுவாரா என்ன? வெளிநாட்டுக்கு போன் பண்ண மாட்டாரா? அவர் வீட்டுக்கு சென்று பார்க்க மாட்டாரா? படத்தின் அடுத்தடுத்த காட்சிகளை எளிதில் கணித்து விட முடிவது அதன் பலவீனம் என்றால், அந்த காட்சியை புதுமையாகவும் அழகாகவும் தந்துவிடுவது அதன் பலம்.

No comments :

Post a Comment