Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

சச்சின் பல கோடி கனவுகள் திரை விமர்சனம்....

No comments

இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின். இந்தியா மட்டுமின்றி உலகமே தலையில் தூக்கி கொண்டாடும் ஒரு சரித்திர நாயகன் சச்சின். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிரிக்கெட் என்ற ஒரு சொல் தெரியும் என்றால் அதற்கு பெரும்பங்கு சச்சின் என்ற பெயருக்கே உள்ளது. சாதனைகளே அசந்துவிடும் இவரின் சாதனைகளை அறிந்தால், அவரின் வாழ்க்கையை நாம் அறிய சரியான தருணம் தான் இந்த சச்சின் திரைப்படம்.

சச்சின் பல கோடி கனவுகள் இப்படத்தின் கதை, படத்தை பற்றிய அலசல் என்பதை எல்லாம் தாண்டி சச்சின் என்ற ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையில் கடந்து வந்த சாதனைகள் மற்றும் சோதனைகள் என்ன என்பதன் ஒரு டாக்குமெண்ட்ரி என கூறிவிடலாம்.

இந்தியா 1983-ம் ஆண்டு உலக கோப்பை வெற்றி பெற்ற போது கிரிக்கெட் மீது ஒரு சிறுவனுக்கு ஆர்வம் வர, அதன் பின் தன் அண்ணன் அஜித்தின் மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாட தொடங்குகின்றார்.

இதை அனைத்தும் 10-ம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் நாம் படித்தே தெரிந்து கொண்டிருப்போம். ஆனால், இதில் என்ன புதியதை காட்டப்போகிறார்கள் என்றால், கிரிக்கெட் என்றாலே நமக்கு சச்சின் என்று தெரியும். ஆனால், சச்சினுக்கு கிரிக்கெட் எத்தனை முக்கியத்துவம் என்பதை இயக்குனர் James Erskine அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்.

சச்சின் என்றாலே அமைதி என்று நமக்கு தெரிந்த முகம். இதற்கு அப்படியே எதிர்மறையாக தன் சிறுவயதில் செம்ம கலாட்டா செய்யும் சுட்டி. அந்த தருணத்தில் அவரை கிரிக்கெட் எப்படி நல்வழிப்படுத்துகின்றது என்பதை காட்டியவிதம் ரசிக்க வைக்கின்றது.

அவரை கிரிக்கெட் மைதானத்தில் பார்த்து வந்த நமக்கு, சச்சின் தன் குடும்பத்தினரிடம் எப்படி நடந்துக்கொள்வார், அவர்களுக்காக நேரம் ஒதுக்குவாரா? தன் நண்பர்களுடன் எப்படி நேரத்தை செலவிடுவார் என நமக்கு தெரியாத பல முகங்களை படம்பிடித்து காட்டியுள்ளனர்.

அதிலும் யாருமே பார்த்திராத, தன் குழந்தைகளுடன் சச்சின் விளையாடுவது, அர்ஜுனிடம் அடிவாங்குவது, நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் கலாட்டா செய்வது என சச்சின் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் விஷயங்கள் அடங்கியிருக்கும்.

அதேபோல் தனக்கு கேப்டன் பதவி எத்தனை பாரமாக இருந்தது. இதனால், தன் அணிக்கு வந்த பிளவுகள் என பல விஷயங்களை தைரியமாக காட்டியுள்ளனர். கிரேக் சாப்பலின் கோச்சிங் நேரம் தான் இந்தியாவின் மிக மோசமான தருணம்.

அவரின் குண நலன்கள் குறித்தும், சீனியர் வீரர்களை அவர் ஒதுக்கியது குறித்தும் பலருக்கும் தெரியாத தகவல்களை காட்டியுள்ளனர். ஆனால், தோனியை கேப்டன் ஆக்கியதே சச்சின் தான்.

இவை தோனி படத்தில் வரவில்லை, ஒருவேளை சச்சின் படத்தில் வரும் என்று நினைத்தால், இதிலும் அதைப்பற்றி ஒரு இடத்தில் கூட காட்டவில்லை. 24 வருட கனவாக சச்சின் உலககோப்பையை கையில் ஏந்துவதுடன் படம் நிறைவடைகின்றது.

சச்சினின் கிரிக்கெட் மட்டுமின்றி அவருடைய வாழ்க்கையையும் மிக அருகில் இருந்து பார்த்தது போன்ற உணர்வு. இப்படி பல சாதனைகளை இந்தியாவிற்காக படைத்த ஒரு ஜாம்பவானின் படம், தோனி படத்தை போல் கொஞ்சம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி எடுத்திருக்கலாம். டாக்குமெண்ட்ரி போல் எடுத்தது வருத்தம் தான். இதன் காரணமாகவே ரகுமான் இசையும் பெரிதும் கவரவில்லை.

எது எப்படியோ மைதானம் மட்டுமின்றி அரங்கமும் அதிர்கின்றது சச்சின்...சச்சின் என்ற வார்த்தையால். மார்க் (Rating) மொத்தத்தில் இந்த படம் என்ன என்பதை எல்லாம் தாண்டி சாதனை நாயகனை கொண்டாட இதுவே சரியான தருணம், கண்டிப்பாக சச்சினின் வாழ்க்கை பயணத்தில் நீங்களும் பங்கு பெறலாம்.

கபாலி - திரைவிமர்சனம்

No comments

25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார்.

அப்போது, 43 கேங்க் என்ற கேங்ஸ்டர் கும்பல் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதையும், அதுமட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளை செய்துவருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார். முதலாவதாக 43-வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார்கள். அவனது கும்பலை அடித்து துவம்சம்செய்துவிட்டு, தான் வெளியில் வந்துவிட்டதாக அவனின் பாஸிடம் தெரியப்படுத்துமாறு சொல்லிவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்கிறார்.

அங்கு ‘கபாலி’ பெயரில் போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு கூடம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் போதைக்கு அடிமையான ரித்விகாவும் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த கூடத்துக்கு ஆசிரியராக கலையரசன் இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரஜினி, தனது பெயரில் நல்லது நடப்பது நினைத்து பூரித்து போகிறார். அப்போது மாணவர்களிடையே நடக்கும் உரையாடும் நிகழ்ச்சியில் தான் கேங்ஸ்டராக எப்படி மாறினேன் என்பதை எடுத்துக் கூறுகிறார். இதன்பிறகு பிளாஸ்பேக் விரிகிறது.

பிளாஸ்பேக் காட்சியில், ரஜினி ஜெயிலுக்கு போகும்போது, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி ராதிகா ஆப்தே, குண்டு காயத்துடன் கிடப்பதை பார்த்துவிட்டுத்தான் செல்கிறார். இதனால், தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் தனது மனைவி உயிருடன் இருக்கிறாளா? தனது குழந்தை என்னவாயிற்று? என்ற குழப்பத்திலேயே இருக்கிறார். இந்நிலையில், கிஷோரின் கும்பலில் போதை மருந்து சப்ளை செய்துவரும் மைம் கோபியை ரஜினி கொன்றுவிடுகிறார். இதையடுத்து, கிஷோர், இனி ரஜினியால் தனது தொழிலுக்கு இடைஞ்சல் இருக்கும் என்றுகூறி அவரை தீர்த்துக்கட்ட பார்க்கிறார்.

இதன்பின்னர், ரஜினி தனது மனைவியையும் குழந்தையையும் கண்டுபிடித்தாரா? கிஷோரின் அராஜகத்தை அடித்து ஒடுக்கினாரா? என்பதுதான் மீதிக்கதை.

படத்தின் மிகப்பெரிய பலமே சூப்பர் ஸ்டார் ரஜினிதான். வழக்கமான மாஸ் காட்சிகள் மட்டுமில்லாது சென்டிமெண்ட் காட்சிகளிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சிறைச்சாலையில் வெளிவரும்போதே இவர் தமிழர்களுக்காக பாடுபட்டவர் என்று தெரியவருகிறது. இவர் படத்தில் பேசும் முதல் வசனமே ‘மகிழ்ச்சி’ என்று சொல்லும்போது நமக்கே மகிழ்ச்சி வருகிறது.

அந்த மாஸ் காட்சியை தொடர்ந்து, லிங்கேஷை அடித்து துவம்சம் செய்து, டீசரில் வரும் டயலாக்கை பேசிவிட்டு, கடைசியில் நக்கலாக ‘கோழிக்கறி’ என்று சொல்லிவிட்டு செல்லும் காட்சிகளில் எல்லாம் மாஸ் காட்டுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் இன்னமும் தன்னுடைய அதே ஸ்டைலில் நடித்து கலக்கியிருக்கிறார். வயதானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல என்ற படையப்பா வசனம்தான் நமக்கு ஞாபகம் வருகிறது. அதேபோல், பள்ளி மாணவர்களிடம் தான் எப்படி கேங்ஸ்டராக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.

ரஜினியின் நண்பராக கூடவே வரும் ஜான் விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவருக்கான வசனங்கள் எல்லாம் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. அதை எதார்த்தமாக செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார். தன்ஷிகாவுக்கு இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம். ஸ்டைலான பெண்ணாகவும் அழகாக இருக்கிறார். இடைவேளைக்கு பிறகு இவரது கதாபாத்திரம் அப்படியே மாறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுக்கும். பிளாஸ் பேக் காட்சியில் வரும் நாசரின் நடிப்பும் அற்புதம்.

கிஷோர் மிரட்டலான வில்லனாக அசத்துகிறார். கலர் கலரான உடையில் ஹைடெக் வில்லனாக தெரிந்தாலும், லோக்கல் ரவுடிபோல்தான் நமக்கு தெரிகிறார். லிங்கேஷ், ரஜினிக்கு இணையாக அவருக்கு எதிரில் அமர்ந்து பேசும் காட்சிகளில் கெத்து காட்டுகிறார். மெட்ராஸ் படத்தில் பார்த்த கலையரசன், இப்படத்தில் அப்படியே நேர் எதிராக வந்து நிற்கிறார். குழந்தைதனமான முகத்தில் எதார்த்தம் கலந்து நடித்திருக்கிறார். தினேஷ், ரஜினிக்கு பாடிகார்டாக வந்திருக்கிறார். படம் முழுக்க ‘ரோபோ’ படத்தில் வரும் சிட்டி போல் படத்தில் ரஜினி செய்யும் கட்டளைகளை செய்துவருகிறார். இருந்தாலும், இறுதிக்காட்சிகளில் தனது நடிப்பால் ரசிகர்களை செண்டிமென்டால் கவர்கிறார்.

சூப்பர் ஸ்டாரின் மனைவியாக வரும் ராதிகா ஆப்தே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வயதான கெட்டப்பிலும், ரஜினியுடன் இவர் செய்யும் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. 25 வருடத்திற்கு பிறகு தனது கணவனை பார்த்து கண்கலங்கி நிற்கும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.

படத்தில் 43 கேங்கின் தலைவராக வரும் மலேசியா நடிகர் வின்ஸ்டன் சா, தோற்றத்திலேயே மிரட்டுகிறார். இவருக்கும் ரஜினிக்கு இணையான மாஸ் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். போதைக்கு அடிமையான பெண்ணாக வரும் ரித்விகாவின் கதாபாத்திரத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர் ரஜினியை எதிர்த்து பேசும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினிக்கு ஏற்ற கதையை உருவாக்கி, அதை தனது பாணியில் உருவாக்கியிருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே எதார்த்தமான வசனங்கள்தான். ஆங்காங்கே, ரஜினி பேசும் வசனங்கள், பஞ்ச் டயலாக்காக இல்லாவிட்டாலும், ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளது. ஆனால், ஒருசில காட்சிகளால் படத்திற்கு தொய்வு இருக்கிறது. ரஞ்சித் இயக்கியிருந்த இரண்டு படங்களும் ரஞ்சித் பெயரைச் சொல்லும்படமாக இருந்தது. ஆனால், ‘கபாலி’ முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டுமே குறிப்பிடும். அந்தளவுக்கு ரஞ்சித்தின் பங்கு இதில் குறைவுதான் என்று சொல்லவேண்டும்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாயிருந்தாலும், திரையில் பார்க்கும்போது அந்த பாடல்களுக்கு ஜீவன் பிறந்திருக்கிறது. பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது. முரளியின் ஒளிப்பதிவு மலேசியாவை அழகாக படம்பிடித்திருக்கிறது. செட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக தெரிகிறது. ரஜினிக்கு அமைத்த மாஸ் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா அழகாக வேலை செய்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கபாலி’ ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

சுல்தான் - ஒன் மேன் ஷோ!

No comments

நூறு கோடி, 200 கோடி கிளப்களை கடந்து 500 கோடி கிளப்பை குறிவைத்து இறங்கியிருக்கும் பிரம்மாண்ட சினிமா 'சுல்தான்'.

மல்யுத்தம் மார்ஷியல் ஆர்ட் இரண்டும் கலந்து கட்டி அடிக்கிற மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட் (MMA) பிஸினஸில் தோல்வி அடைந்து துவண்டிருக்கிற ஆகாஷ் ஓபராயிடம் (அமித்) அவர் அப்பா, ‘சும்மா வெளிநாட்டுக்காரங்களை வெச்சு விளையாடிகிட்டிருந்தா இப்படித்தான். இது இந்தியால பிரபலமாகணும்னா ஒரு இந்தியன் இவனுகளை ஜெயிக்கணும். அதுக்கு ஒரே ஒருத்தன்தான் இருக்கான். சுல்தான்!” என்பதில் ஆரம்பிக்கிறது படம்.

ஹரியானாவின் புழுதி படர்ந்த ரெவாரி கிராமத்து இளைஞன் சுல்தான் (சல்மான்கான்). குசும்பும், கேளிக்கையுமாய் திரிபவனை கண்டதும் காதல் கொள்ள வைக்கிறாள் மல்யுத்த வீராங்கனை ஆர்ஃபா (அனுஷ்கா ஷர்மா). அவருக்காக மல்யுத்தம் கற்றுக் கொண்டு ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் என பல பதக்கங்களையும் வேட்டையாடுகிறார் சல்மான். பின் என்ன.. டும்டும்டும்தான். அந்த குஷியில் ஒலிம்பிக் தங்கமும் அவர் வசமாகிறது. வெற்றி கண்ணை மறைக்க, ஒரு கட்டத்தில், மிகப்பெரிய இழப்பு ஒன்றை சந்திக்கிறார்கள் இருவருமே. அதன் காரணமாக இவனை வெறுத்து ஒதுக்குகிறார். அதனாலேயே மல்யுத்த வாழ்வை வெறுத்து ஒதுக்கிவிடுகிறார் சல்மான்.

‘மீண்டும் விளையாட வா.. நல்ல காசு தர்றேன்’ என்று அமித் அழைக்க, இரத்த வங்கி ஆரம்பிக்கும் தன் கனவிற்கு அந்தப் பணம் தேவைப்படுவதால், ஒப்புக்கொண்டு மீண்டும் ரிங்கில் இறங்குகிறார் சல்மான். அதை பயன்படுத்திக் கொண்டானா, கடந்த கால காதல் என்னவானது என பரபர கமர்ஷியல் சினிமாவாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் சல்மான்கான். முரட்டுத்தோல், முறைப்பு பார்வை என ஒற்றை ஆளாய் படத்தை தூக்கி சுமக்கிறார் சல்மான். கண்ணில் காதலுடன் உருகுகிறார். ஷாருக் கானை எனக்குப் பிடிக்கும் என்கிறார். மண்ணை உள்ளங்கையில் தட்டி தொடை தட்டி களமிறங்குகிறார். நிராகரிப்பை நினைத்து கலங்குகிறார். அத்தனை கலகலவென இருந்துவிட்டு அமைதியாகிறார். சல்மானுக்கு இது அடுத்த லெவல் சினிமா. அதிலும் ஹரியானா ஸ்லாங் இந்தியில் அவர் பேசுவது.. ரசிக்க வைக்கிறது.

படத்தில் ஒரு காட்சி. பல வருடங்களுக்குப் பின், சல்மான் பயிற்சி எடுக்கச் செல்வார். ‘இவன் செத்துட்டான். செத்தவனுக்கு டிரெய்னிங்லாம் குடுக்க முடியாது’ என்று ரண்தீப் ஹூடா சொல்லி, ‘ஒரு வாய்ப்பு தர்றேன்.. எங்க ஆள்ல ஒரு ஆளை வீழ்த்திக் காட்டு’ என்பார். கண்ணாடி முன் சட்டையைக் கழட்டுவார். தொப்பையும் தொந்தியுமாக தன்னைப் பார்க்கச் சகிக்காமல் அழுதுகொண்டே சட்டையை மீண்டும் போட்டபடி ரிங்கில் நுழைவார். வாவ் சல்லுபாய்.. லவ் யூ மேன்!


அனுஷ்கா சர்மா - புழுதிக்காட்டு பூ. ஹீரோயினுக்கான க்ளிஷேவை உடைத்து அழுக்கும், அழுத்தமுமாய் பச்சக்கென ஒட்டுகிறார். முதல் பாதியில் சல்மானுக்கு இணையாக ஸ்கோர் செய்யும் அனுஷ்காவை இரண்டாவது பாதியில் கண்டிப்பாய் மிஸ் செய்வோம். கொஞ்சமே கொஞ்ச நேரம் வந்தாலும் முத்திரை பதிக்கிறார் ரண்தீப் ஹூடா.

இயக்குனராய் அலி அப்பாஸுக்கு இது மூன்றாவது படம். சல்மான இமேஜை மனதில் வைத்தே சீனுக்கு சீன் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஹிட் பாடல்கள், கலர்ஃபுல் பிரேம்கள் என பாலிவுட் மசாலா நன்றாகவே கைவருகிறது அவருக்கு. படத்தின் இன்னொரு பெரிய பிளஸ் வசனங்கள். 'நாம தோக்குறதில்ல, எதிரியை ஜெயிக்க வைக்கிறோம்', 'ஜெயிச்சவனை விட தோத்தவனுக்குதான் வெற்றியோட அருமை தெரியும்' என படம் முழுக்க தெறிக்கிறது பளீர் சுளீர் வசனங்கள். அதுவும் ‘நான் ஏன் ரெஸ்ட்லிங்கை தேர்ந்தெடுத்தேன்’ என அனுஷ்கா சல்மானிடம் விளக்கும் காட்சியில் வசனங்கள் மிகச் சிறப்பு. இரண்டாவது பாதியில் டெம்போவை பற்ற வைத்து பி.பி ஏற்றுகின்றன சண்டைக்காட்சிகள். தத்ரூபமாய் விழும் குத்துகள் நம் முகத்தில் அறைகின்றன. ப்ராவோ! டைரூன் வூட்லி போன்ற நிஜ MMA ஃபைட்டர்ஸை சல்மானுக்கெதிராக களமிறக்கி பிரமிக்க வைத்திருக்கிறார்கள். எதிரியை வீழ்த்திவிட்டு, கையெடுத்து அவரைக் கும்பிட்டு ஸாரி கேட்கும்போதெல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறார் சல்மான்.

மல்யுத்தம் பற்றிய சினிமாதான். ஆனால் ஒரே பாடலில் சல்மான் காமன்வெல்த் செல்வதெல்லாம் 'ரஜினி' பார்முலா சாரே! பாடல் முடிந்து ரிலாக்ஸ் ஆவதற்குள் அடுத்த பாடல் என 'பாகவதர்' காலத்து பீல் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஸ்பான்சர்ஷிப் பிடிப்பது, காட்சிக்கு காட்சி கமெண்ட்ரி என்று பலதையும் எடிட் செய்திருந்தால் 30 நிமிடம் மிச்சமாகியிருக்கும். கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பது... ரொ....ம்....ப....வே நீ.....ளம். இடைவேளை வரை ஒரு படமாகவும், இடைவேளைக்குப் பின் வேறு படமாகவும் இருக்கிற திரைக்கதை அலுப்பு.

படத்தின் இரண்டு டெக்னிஷியன்கள் ஸ்பெஷல் பாராட்டு பெறுகிறார்கள். ஒன்று காமராமேன் ஆர்தர் சுராவ்ஸ்கி. இரண்டு பேருக்கு நடக்கும் சண்டையை புகுந்து புகுந்து படமாக்கிய விதம் அருமை. அடுத்து, படத்தின் மல்யுத்த கோச் ஜக்தீஷ் காளிராமன். சல்மானுக்கும், அனுஷ்காவுக்கும் இவர் பயிற்சி கொடுத்ததன் பலன் படம் முழுக்கத் தெரிகிறது.

’ஒரு நிஜமான பயில்வானுக்கு ரிங்குக்குள்ள சண்டை நடக்கறதில்ல.. வாழ்க்கைலதான் சண்டை நடக்குது. வாழ்க்கை அவனை தூக்கிப் போட்டு அமுக்கறப்போ திமிறி எழணும்!” என்ற தத்துவத்தை  கம்பீரமாய் சொன்னதற்காக சுல்தானை ரசிக்கலாம்.



அப்பா படம் விமர்சனம்

No comments
‘சின்னஞ்சிறு ஆத்மாவுக்கும் கனவுகள் இருக்கும். உங்க கனவை அதன் மேல் திணிக்காதீங்க’ என்பதுதான் படம் அழுத்தமாகச் சொல்லும் கரு.
மகன்/மகள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் பிரச்சனையைப் பெற்றோர்கள் காது கொடுக்கக் கேட்க வேண்டிய அவசியத்தையும் படம் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்துகிறது. இல்லையெனில், மேலும் பல வினுப்ரியாக்களை சமூகம் இழக்கக்கூடும். அப்பா – மிகவும் அவசியமான காலத்தில் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளின் மீது வீசிய சாட்டையை, அதனினும் வலுவாகத் தனியார் பள்ளிகளின் மீது வீசியுள்ளார் தயாளன்.

ஒரு லட்சிய தந்தைக்கு எடுத்துக்காட்டாக தயாளன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள சமுத்திரக்கனி. “நாம் இணைந்து நம் மகனை உயர்த்துவோம்” எனக் குழந்தையின் தொப்புள் கொடி மேல் எல்லாம் சபதம் எடுத்துக் கொஞ்சம் கிலியைக் கிளப்புகிறார். பார்வையாளர்களுக்குப் பாடமெடுத்துப் புத்தி புகட்டுவது, நன்னெறியை எடுத்தியம்புவது என்ற அவரது அக்கறை உடல் மொழியிலும், வசன உச்சரிப்பிலும் துருத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால், சில பாடங்களை இப்படி நேரடியாகச் சொன்னால்தான், சிலரையேணும் அது போய்ச் சேரும். பெற்றோர்களின் மனதில் எங்குப் பதியாமல் போய் விடுமோ என, சசிகுமாரை வைத்தும் ஒருமுறை ரிவிஷன் செய்து விடுகிறார் சமுத்திரக்கனி.

‘சின்னஞ்சிறு ஆத்மாவுக்கும் கனவுகள் இருக்கும். உங்க கனவை அதன் மேல் திணிக்காதீங்க’ என்பதுதான் படம் அழுத்தமாகச் சொல்லும் கரு.

பெரிய காக்கா முட்டை விக்னேஷ் சமுத்திரக்கனியின் மகனாக வெற்றீஸ்வரன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மனிதர்கள் மீது நம்பிக்கை வை; மனிதர்களை நேசி’ எனச் சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் வெற்றீஸ்வரன், நீண்ட நாள் கழித்துப் பேசும் தன் உறவினர்களிடம் எடுத்தெறிந்து பேசுகிறான். ‘உறவினர்களை ஒதுக்கி வை’ என சமுத்திரக்கனியும் தன் நண்பனிடம் சொல்வார் (போராளி படத்திலும் இத்தகைய வசனம் வரும்). உறவினர்களை மட்டும் மனிதர்களாகப் பாவிக்க வேண்டாம் போல்.

பசங்க ஒன்று கூடும் இடமாகக் காட்டப்படும் சமுத்திரக்கனியின் வீட்டுத் தோட்டத்தில், மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் நூலகமும், அமர்ந்து பேச அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகளும் கலை இயக்குநர் ஜாக்கியின் கைவண்ணத்தில் பிரமாதமாய் உள்ளன. பதின்மத்தில் இருக்கும் வெற்றீஸ்வரனுக்கு, சஹிரா பானுவிடம் பேச வேண்டுமென்ற ஆவலெழும். ஆனால், அவன் உள்ளமும் கால்களும் பதற்றமுறும். அதை அவன் தந்தையிடம் சொல்வான். சமுத்திரக்கனி அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து மகனிடம் பேச வைப்பார். இது வரை கவித்துவமாகப் போகும் அந்தக் காட்சி முடிந்ததும், சமுத்திரக்கனி தன் மகனிடம், “மனதில் சேரும் அழுக்குகளை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு மனதை ஃப்ரீயா வச்சுக்கணும். இல்லைன்னா முகத்தில் ஆசிட் வீசணும்னு தோணும்” எனச் சொல்வார். படத்தில் இப்படி யதார்த்தம் வழுவி பிரச்சாரம் தூக்கலாகும் கணங்கள் அதிகம். இதை பிரச்சாரம் என்று கூட சொல்ல இயலாது. பதின்மத்தில் ஏற்படும் குறுகுறுப்பை வெளிக்காட்ட இயலாமல் அப்பருவத்தினர் தவிப்பது இயல்பே! அதிலிருந்து மீள, தோளில் கை போட்டு மீள வழிகாட்டுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையே! ஆனால், அவ்வியல்பான விஷயத்தை ஏதோ கொலைக்குற்றம் போல் ஒரு கற்பிதத்தை உருவாக்கிப் பயமுறுத்தும் தொனியில் யோசனை சொல்வதெல்லாம் ஓவர்.

சஹிரா பானுவாக கேப்ரியலா நடித்துள்ளார். “இவன் தான் அங்கிள் பேசவே மாட்டேங்கிறான்” எனச் சொல்லும் பொழுது முகத்தில் தெரியும் குழந்தைத்தனம் அற்புதமாக உள்ளது. படத்தைக் கலகலப்பாக்கி இருப்பது மயில்வாகனமாக நடித்திருக்கும் நசாத். நகரத்துக்குக் கிராமத்துக்கான வேறுபாடென்ன என்ற கேள்விக்கு, ‘மனிதனை நாய் பாதுகாத்தால் அது கிராமம்; நாயை மனிதன் பாதுகாத்தால் அது நகரம்’ என்றெழுதி பரீட்சையில் முட்டை (சுழியம் மதிப்பெண்) வாங்குகிறான் மயில்வாகனம். அவனது விடையைப் பார்த்து அதிசியப்படும், அவனது பரீட்சைத் தாள்கள் அனைத்தையும் வாங்கி, சுழியத்திலிருந்து “எது உயரம்?” என்ற கவிதைத் தொகுப்பைத் தொகுத்து வெளியிட உதவுகிறார். மயில்வாகனம், பத்தாவதில் தேற மாட்டானென ஆசிரியரால் பள்ளியை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் மாணவன். காரணம், அவனது தந்தையான நடுநிலையான் தனது தாழ்வு மனப்பான்மையையும் பயத்தையும் மயில்வாகனத்திற்குப் புகுத்தி விடுவதே! நடுநிலையானாக சமுத்திரக்கனியின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான நமோ நாராயண் நடித்துள்ளார் (சமூக வலைத்தளங்களில் நடுநிலையாளர்கள் எனப் பரவலாகக் கலாய்க்கப்படுபவர்கள் பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதன் குறியீடோ என்னவோ?)

இளையராஜாவிற்கு, ‘இசையின் அப்பா’ என்று படத்தின் தலைப்போடு பொருந்துமாறு அடைமொழி கொடுத்துள்ளார் சமுத்திரக்கனி. அம்மா கணக்கு படத்தில் கலக்கிய யுவஸ்ரீ, இப்படத்தில் தான் நீலநந்தினி எனும் பாத்திரத்தில் யுவலட்சுமியாக அறிமுகம் ஆகியுள்ளார். அம்மாவின் கணக்கோ அப்பாவை முந்திவிட்டது. ஆனால், 4 பேர் புழங்கும் சமூகத்தைப் பார்த்து வெற்றீஸ்வரனின் அம்மா போடும் கணக்கெல்லாம் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளும் கதையெனத் தெளிவாக இடித்துரைத்துள்ளார் சமுத்திரக்கனி. வீட்டுக்குள் நுழையும் விளம்பரங்கள், மனிதனைப் பகட்டை நோக்கி எப்படித் தள்ளுகின்றன என அருமையாகக் காட்டியுள்ளார். அதை எதிர்கொள்ள திணறும் சமுத்திரக்கனியின் இயலாமையும் யதார்த்தத்தின் உச்சம்.

மகனையோ/மகளையோ இஷ்டப்படி விளையாட விட வேண்டும், மனிதர்களை நேசிக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டும், படிப்பைப் பெருஞ்சுமையாக்கித் தலையில் ஏற்றக் கூடாதென முதற்பாகத்திலேயே சொல்ல வேண்டிய அனைத்தையும் வரிசை கிரமமாகச் சொல்லி முடித்து விடுகிறார். அப்படியில்லாவிட்டால், என்ன விபரீதங்கள் நிகழுமென விறுவிறுப்புடன் செல்லும் இரண்டாம் பாதி மனதைக் கவ்வுகிறது. கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படமாய் முடிகிறது.

இப்படம், மூன்று வகை பெற்றோர்களுக்கும், அவர்களது மகன்களுக்கும், மகன்களின் தோழிகளுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களாக நீள்கிறது. நம்பிக்கையை வளர்க்கும் ரோல் மாடல் தந்தை சமுத்திரக்கனி, தாழ்வு மனப்பான்மையைக் கடத்தும் தந்தை நமோ நாராயண்; தன் கனவைத் திணித்து மதிப்பெண்கள் மட்டுமே வாழ்வின் குறியென நம்பும் தந்தை சிங்கபெருமாளாக தம்பி ராமைய்யா. அவரது அதீத நடிப்பையும் மீறி, படத்தின் முடிவில் மனதில் நிற்கும் கதாபாத்திரமாக உள்ளார். மூன்று குடும்பத்திலுமே, கணவன் மட்டுமே வேலைக்குச் சென்று மனைவிமார்கள் வீட்டின் பொறுப்பை நிர்வகிப்பவராக இருக்கின்றனர். கதைக்களமும் நெய்வேலியில் நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் பெருநகரத்தினருக்கு இப்படம் சற்றே அந்நியமாகத் தெரியலாம்.

எனினும், மகன்/மகள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் பிரச்சனையைப் பெற்றோர்கள் காது கொடுக்கக் கேட்க வேண்டிய அவசியத்தையும் படம் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்துகிறது. இல்லையெனில், மேலும் பல வினுப்ரியாக்களை சமூகம் இழக்கக்கூடும். அப்பா – மிகவும் அவசியமான காலத்தில் வெளியாகியுள்ளது.


பாலக்காட்டு மாதவன்

No comments

கருத்து கந்தசாமியாக வலம் வந்த சின்ன கலைவாணர் மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள படம் தான் பாலக்காட்டு மாதவன். தமிழ் சினிமாவில் இதுவரை கலக்கிய அனைத்து காமெடி நட்சத்திரங்கள் எல்லாம் இனி தங்கள் செல்போனில் ‘ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்’ பாடலை தான் வைத்துள்ளார்கள் போல. சந்தானம், வடிவேலுவை தொடர்ந்து இந்த வாரம் களத்தில் இறங்கியிருக்கிறார் விவேக். அதிலும் சோனியா அகர்வால், செம்மீன் ஷீலா, சிங்கமுத்து என பெரிய நட்சத்திர பட்டாளம் மட்டுமின்றி, இசை ஸ்ரீகாந்த் தேவா என வலுவான கூட்டணியுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் சந்திரமோகன். கதைக்களம்  தமிழ் சினிமா என்றாலே செண்டிமெண்ட் தான் முதலில் நியாபகம் வரும், சூப்பர் ஸ்டாரில் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் அவருடைய மருமகன் சுள்ளான் ஸ்டார் வரை அம்மா செண்டிமெண்டை தொட்டு தான் தூள் கிளப்பினார்கள்.

அதேபோல் விவேக்கும் இந்த படத்தில் கொஞ்சம் கூடுதலாகவே தொட்டுப்பார்த்துள்ளார். எந்த வேலையும் செய்யக்கூடாது, ஆனால், பணம் மட்டும் சம்பாதிக்க வேண்டும் என இருப்பவர் விவேக். தன் மனைவி சோனியா அகர்வால் வேலைப்பார்க்கும் அதே கம்பெனியில் இவரும் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க, தன் மனைவியை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என ஈகோ காரணமாக அந்த கம்பெனியிலிருந்து வெளியே வருகிறார். ஒரு கட்டத்தில் செம்மீன் ஷீலா முதியோர் இல்லத்தில் இருக்க, இவரை தத்தெடுத்தால் மாதம் 25,000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதால், விவேக் அவரை தத்தெடுக்க, அதன் பின் என்ன ஆகின்றது, விவேக்கிற்கு எப்படி பொறுப்பு வருகின்றது என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல்  விவேக் நான் தான் பாலா படத்தில் மிகவும் சீரியஸாக நடித்த இவர், மீண்டும் ‘எலே டோண்ட் வொரி பி ஹாப்பி’ என முழு நகைச்சுவை வேடம் ஏற்று கலக்கியிருக்கிறார்.

 வழக்கமான தன் கவுண்டர் வசனங்களால் கலக்கியிருக்கிறார். வண்டியில் வேகமாக செல்லும் போது ‘டேய் 40ல போன 80 வரைக்கு இருப்போம், 80ல போன 40லயே போய்டுவோம்’ன்னு தன் வழக்கமான கருத்து+கவுண்டர். சோனியா அகர்வால் நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் முழுவதும் குடும்பத்து பெண்ணாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். செம்மீன் ஷீலா தன் கதையின் திருப்பம் என்பதால் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

 படத்தில் குறிப்பிடும் படி சொன்னால், விவேக் உப்புமா செய்யும் காட்சி, மொட்டை ராஜேந்திரனுடன் அடிக்கும் லூட்டி போன்ற காட்சிகள் கலை கட்டுகின்றது. க்ளாப்ஸ்  விவேக் தான் ஒன் மேன் ஆர்மியாக படத்தை நகர்த்தி செல்கின்றார். செண்டிமெண்ட் காட்சிகளில் ஷீலா நடிப்பு கவர்கின்றது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை குறிப்பாக விவேக் காட்டும் எக்ஸ்பிரஷன்களுக்கு மிகவும் உதவுகிறது.

பல்ப்ஸ்  ஏதோ பல காட்சிகளில் விவேக்கை தவிர மற்றவர்கள் செய்யும் காமெடி கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது. ஒளிப்பதிவு சற்று நாடக பாணியில் உள்ளது, இதை தவிர்த்து இருக்கலாம். இன்றைக்கு தேவையான நல்ல கருத்தை சொன்னதற்காகவும் மற்றும் விவேக்காகவும் கண்டிப்பாக பாலக்காட்டு மாதவனை ரசிக்கலாம்.

என்றென்றும் புன்னகை

No comments
ஜீ வா, வினய், சந்தானம் மூவரும் பிரண்ட்ஸ். விளம்பர கம்பெனி நடத்துகிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை. காரணம் ஜீவாவின் அம்மா, அப்பாவை விட்டு விட்டு ஓடிப்போக, பெண் இனத்தின் மீதே வெறுப்பு ஜீவாவுக்கு. அதனால் காதல், கல்யாணம் மீது வெறுப்பு. வினய்யும், சந்தானமும், நண்பன் லட்சியத்தை தாங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 

திடீரென்று நண்பர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள, தனிமரமாக நிற்கிறார் ஜீவா. இந்த நிலையில் அவர் கம்பெனிக்கு இன்னொரு கம்பெனியின் பிரதிநிதியாக வருகிறார் த்ரிஷா. படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்து செல்கிறார்கள். பனிமலை குளிரில் ஜீவாவின் லட்சியமும் கரைந்து காதலாகிறது. சென்னை திரும்பும் வழியில் விமான நிலையத்தில் பழைய நண்பன் ஒருவனை சந்திக்க, அவன் ஜீவாவின் பிரம்மசாரியத்தை மெச்ச உடன் வந்த த்ரிஷாவை, சும்மா பிளைட்டில் அறிமுகமானவர் என்று சொல்ல, சுவிஸில் பூத்த காதல் சென்னை ஏர்போர்ட்டில் டமால் ஆகிறது. 

அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதி கதை.கதையை காமெடியும், கவிதையுமாகச் சொல்லியிருப்பதன் மூலம் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். நண்பர்கள் திடீர் திருமணம் செய்து கொள்வதற்கான காரணமும், த்ரிஷா&ஜீவா காதல் முறியும் தருணமும் எதிர்பாராத ட்விஸ்ட்டுகள். ஜீவாவின் லட்சியத்தை சோதிக்கும் சூப்பர் மாடல் ஆண்ட்ரியாவின் கேரக்டரும், அவரது காது கடியும், இவரது கன்னத்தில் அடியும் சீரியசான கிக் மேட்டர்கள். 

சுவிஸ்சில் ஜீவாவை பழிவாங்க நினைக்கும் ஆண்டரியாவிடம், நீ இன்னும் கிளம்பலையா? என்று கேட்டு அதிர வைக்கும் ஜீவாவின் கேரக்டர் ரொம்பவே ஸ்ட்ராங்.காதலை வெறுப்பதும், அம்மாவின் துரோகத்தை நினைத்து வெதும்புவதும். அப்பாவை தள்ளி வைத்திருப்பதுமான கனமான கேரக்டரை ஈசியாக சுமக்கிறார் ஜீவா. காதலை பற்றி பேசும்போது அவர் முகத்தில் கோபம் வெடிப்பதும், தக்க சமயத்தில் உதவும் த்ரிஷா மீது நன்றி பார்வை வீசி, அதையே காதல் பார்வையாக மாற்றுவதுமாக ஸ்கோர் பண்ணுகிறார்.அறிமுக நடிகைபோலவே பிரஷ்சாக இருக்கிறார் த்ரிஷா. தலைமுடி பறக்க அவர் நடந்து வரும் அழகே தனிதான்.சந்தானத்தின் காமெடிதான் படத்துக்கு பலம்.

 போனில் மனைவியிடம் சாப்பிட என்ன வச்சிருக்க? என்று சந்தானம் கேட்க, பதிலுக்கு மனைவி, ‘ஒரு கிளாஸ் விஷம் வச்சிருக்கேன்’ என்று கோபப்பட, அப்ப நீ சாப்பிட்டுட்டு படுத்துக்கோ. நான் வரலேட்டாகும் என்று இவர் சொல்ல, அள்ளு கிறது தியேட்டர்.

நண்பன் வினய், மகனின் அன்புக்கு ஏங்கும் தந்தை நாசர் இருவருமே சரியான நடிப்பை தந்திருக்கிறார்கள்.எப்போதும் குடி குடி என்று நண்பர்கள் கழிப்பது ஒரு கட்டத்தில் வெறுப்படைய வைக்கிறது. அப்பாவுடன் ஜீவா பேசாமல் இருப்பதற்கான காரணத்தில் அழுத்தம் இல்லை.மதியின் ஒளிப்பதிவு, சுவிட்சர்லாந்தின் அழகை அள்ளி வந்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களில் அவரது முந்தைய படப் பாடல்களின் வாசனை. - தினகரன் விமர்சனக்குழு.

தலைமுறைகள் - திரைவிமர்சனம்

No comments

ஜாதி, மத மற்றும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட கடந்த தலைமுறை தாத்தாவை, பேரன் சுத்தப்படுத்தும் கதை. தாத்தாவுக்கு பேரன் மனிதத்தை போதிக்க, பேரனுக்கு தாத்தா மொழியையும், பண்பாட்டையும், கிராமத்தையும் போதிக்க, இப்படியான கொடுக்கல் வாங்கலை அடுத்த தலைமுறைக்கு தந்திருக்கும் படம். வைராக்கியமிக்க முதியவராக பாலுமகேந்திரா வாழ்ந்திருக்கிறார். வார்த்தைகளை வெட்டி வெட்டி பேசும் அவரது இயல்பான பேச்சு, அந்த கதாபாத்திரத்துக்கு யதார்த்தமாகப் பொருந்துகிறது. பேரனை முதன் முதலில் காணும் அந்த தருணத்தில் அவனுக்குள் தன்னைத் தேடும் அந்த பார்வை, அவனுக்கு தமிழ் தெரியவில்லை என்பதை அறிந்து தலையில் அடித்துக் கொள்ளும் சோகம், தூங்கும் பேரன் கையில் இருக்கும் மிட்டாயை எடுத்து தின்னும் குழந்தைதனம் என படம் முழுக்க கைபிடித்து அழைத்துச் செல்கிறார். 

அழகும், வெகுளித்தனமுமாக கவர்கிறான் மாஸ்டர் கார்த்திக்.  முதன் முதலில் ஆற்றை பார்க்கும் ஆவல், கிராமத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் ஆச்சர்யத்தோடு எதிர்நோக்கும் பார்வை, நீயும் செத்துடுவியா தாத்தா என்று கலங்கும்போது நம்மையும் கலங்க வைத்துவிடுகிறான். வடநாட்டு கிறிஸ்தவ மருமகள் கேரக்டரில் ரம்யா சங்கர் கச்சிதமான நடிப்பை தந்திருக்கிறார். பாலுமகேந்திராவின் மகளாக வரும் வினோதினி கிராமத்து தங்கச்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். காட்சிக்குள் வராத அந்த இரண்டாவது மனைவி கேரக்டரும் காட்சிக்குள் வரும் மகள் கேரக்டரும் யதார்த்தமான பதிவு. 

தந்தையை மீறவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவிக்கிற தவிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் சஷிகுமார். பாலுமகேந்திராவின் ஒளி ஓவியத்துக்கு தனது ஒலியால் வண்ணம் சேர்த்திருக்கிறார் இளையராஜா. காக்கைகளின் சத்தமும், குயில்களில் பாட்டுமே அதிக காட்சிகளில் பின்னணியாக ஒலித்திருப்பதும், பல காட்சிகளில் இசை மவுனமாகி இருப்பதும் படத்தை கவிதையாக்கி இருக்கிறது. பேரன் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்த பாலுமகேந்திராவிடம், நீ இந்து குடும்பத்துல பிறந்ததால இந்துவா இருக்கே. நான் கிறிஸ்தவ குடும்பத்தில பிறந்ததால கிறிஸ்தவனா இருக்கேன். இந்த அழுக்கு நம்மோட போகட்டுமே. அதை ஏன் அடுத்த தலைமுறைக்கு கொடுக்குற? என்று அந்த பாதிரியார் கேட்பது இந்த தலைமுறைக்கான பெரும் கேள்வி. 

மருமகள் 8 கிலோ மீட்டர் நடந்து சர்ச்சுக்கு போகிறாள் என்பதற்காக ஏசு படத்தை பூஜை அறையில் மாட்டி இங்கேயே கும்பிட்டுக்கம்மா என்று சொல்வது, அ எழுத கற்றுக் கொள்ளும் பேரன் அதை உச்சா போயி எழுதிப்பார்ப்பதும், அதையே தானும் செய்து பார்ப்பது மாதிரியான பாலுமகேந்திரா டச் நிறைய இருக்கிறது. திருப்பமோ, பரபரப்போ இல்லாத கதை என்றாலும் காட்சிகளாலும் வசனங்களாலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா. ஆனால் தாத்தாவும் பேரனும் ஆறு, குளம், தோட்டம் என சுத்துவது குழுந்தைகளுடன் விளையாடுவது என்று அடிக்கடி வரும் காட்சிகள் கொஞ்சம் அலுப்புத் தட்டத்தான் செய்கிறது. ஆனாலும் இப்படியொரு படத்தை உருவாக்கிய பாலுமகேந்திராவும் அதை தயாரித்த சசிகுமாரும் பாரட்டப்பட வேண்டியவர்கள்.

விடியும்முன் - திரைவிமர்சனம்,

No comments
வீட்டை விட்டு ஓடிவந்து பாலியல் தொழிலாளியாக மாறிய பூஜாவை, ஒரு வேலை செய்து கொடுக்கும்படி புரோக்கர் அமரேந்திரன் மிரட்டி பணிய வைக்கிறார். அதாவது, பாலியல் உறவுக்கு சிறுமிகளை விரும்பும் ஒரு பெரும்புள்ளிக்கு ஒரு சிறுமியை ஏற்பாடு செய்து கொடுக்கும்படி சொல்கிறார். பூஜாவும் தனது முன்னாள் பாஸ் உதவியுடன் ஒரு சிறுமியை அழைத்து வருகிறார். பிறகு அந்த பெரும்புள்ளியின் பங்களாவுக்கு செல்கிறார்.மறுநாள் அந்த பெரும்புள்ளி படுகொலை செய்யப்படுகிறார்.

 பூஜாவும், சிறுமி மாளவிகாவும் ரயிலில் தப்பித்துச் செல்கின்றனர். கொல்லப்பட்ட பெரும்புள்ளியின் மகன் வினோத் கிஷன், சிறுமியை கொடுத்த பாஸ், புரோக்கர் அமரேந்திரன், உள்ளூர் தாதா ஜான் விஜய் ஆகியோர், அவர்கள் இருவரையும் ஆளுக்கொரு பக்கம் துரத்துகின்றனர். இந்த வேட்டை நாய்களிடம் இருந்து அந்த புள்ளிமான்கள் தப்பித்ததா என்பது கிளைமாக்ஸ்.குழந்தை பாலியல் தொடர்பாக, இவ்வளவு பட்டவர்த்தனமாக இப்படியொரு படம் வந்ததில்லை.

 சில கொடூர மனிதர்களின் இன்னொரு வக்கிர முகத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய வகையில், முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.பாலியல் தொழிலாளியின் உடல்மொழியையும், குரலையும் யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் பூஜா. சிறுமியை பாலியல் தொழிலுக்கு அழைத்துச் செல்லும்போது தவிப்பதும், பிறகு சிறுமியின் எதிர்காலத்துக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்க தயாராவதுமாக, நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார். சிறுமி மாளவிகாவின் நடிப்பு ஆச்சரியப்பட வைக்கிறது. 

 தான் ஒரு பெரும்புள்ளிக்கு விருந்தாக அனுப்பி வைக்கப்படுகிறோம் என்று தெரியாமல், என்னை எங்க கூட்டிகிட்டு போறீங்க, பனியன் மில்லுக்கா? தீப்பெட்டி ஆலைக்கா? என்று அப்பாவித்தனமாக கேட்கும்போது, மனசு பதறுகிறது. தன் குடும்பத்தைப் பற்றி சின்னச்சின்ன வார்த்தைகள் மூலமே புரியவைத்து விடுகிறார்.தன் தந்தையை கொன்றவர்களை பழிவாங்கப் புறப்படும் வேட்டைப்புலி வினோத் கிஷன், பார்வையிலும், மவுனத்திலும் கொடூரத்தை வெளிப்படுத்துகிறார்.

 அமரேந்திரன், ஜான் விஜய் இருவரும் கேரக்டராகவே மாறியிருக்கின்றனர். பூஜாவும், மாளவிகாவும் தப்பித்துச் செல்லும் இடத்தை ரூட்டு போட்டு கண்டுபிடிப்பது அபாரம். லட்சுமி ராமகிருஷ்ணனின் பதற்றமும் மனதில் பதிகிறது. கிரைம் திரில்லர் கதைக்கு ஒளிப்பதிவு எந்தளவு முக்கியம் என்பதற்கு சிவகுமார் விஜயனின் கேமரா சாட்சியாக இருக்கிறது. கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை, பலம்.

 பூஜா, மாளவிகா இருவரையும் வில்லன் கூட்டம் நெருங்கிவிடக் கூடாது என்ற பதட்டத்தை, படம் முழுவதும் ஏற்படுத்தி இருப்பது திரைக்கதையின் பலம்.பெரும்புள்ளி வீட்டில் என்ன நடந்தது என்பதை இன்னும் விவரமாக சொல்லியிருக்கலாம். இறுதியில் வினோத் கிஷனின் திடீர் மாற்றத்துக்கு காரணமான பிளாஷ்பேக்கிலும் குழப்பம் ஏற்படுகிறது. அத்தனை குற்றச்செயல்கள் நடக்கும்போது, ஒரு போலீஸ் கூட வராததில் லாஜிக் இடிக்கிறது

கல்யாண சமையல் சாதம் - திரைவிமர்சனம்

No comments
லேகாவை பெண் பார்க்கச் செல்லும் பிரசன்னாவுக்கு அவரை பார்த்த உடனேயே பிடித்துவிடுகிறது. நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்துக்கு எட்டு மாதம் இருக்கிறது. அதற்கு முன் ஒரு நாள் பார்ட்டியில் இருவரும் போதையாகிவிட, ஒன்றாக தங்க நேர்கிறது. அங்கு எல்லை மீற நினைக்கிறார் பிரசன்னா. ஆனால், அவருக்கு அது முடியாமல் போகிறது. ஆண்மையில்லையோ என்று சந்தேகப்படும் பிரசன்னா, மூலிகை டாக்டரில் இருந்து லேகியம் விற்பவர் வரை பார்க்கிறார். இந்தப் பிரச்னைக்கு மன அழுத்தம்தான் காரணம் என்ற உண்மையை கண்டறிந்து அடுத்து என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை. கொஞ்சம் தடுமாறினாலும் பலான பட ரேஞ்சாக வாய்ப்பிருக்கும் கதை என்றாலும் நேர்த்தியான திரைக்கதையால் சரியாக்கி இருக்கிறார் இயக்குனர்.

அந்த பிரச்னையில் சிக்கித் தவிக்கும் கேரக்டரில் நடித்த பிரசன்னாவின் துணிச்சலை பாராட்டலாம். நடிப்பிலும், இயல்பான மேனரிசங்களிலும் கவர்கிறார். பார்ட்டி முடிந்ததும் அறையில் தன் வருங்கால மனைவியிடம் தாராளமாக நடந்துகொள்ளும் அவர், எதிர்பாராமல் பிரச்னையில் சிக்கித் தவிப்பது சிரிப்பை வரவழைத்தாலும், கொஞ்சம் சீரியசாகவும் இருக்கிறது.எப்படியாவது தன்னை வீரியமுள்ளவனாகக் காட்ட வேண்டும் என்று, பாலியல் டாக்டர்களிடம் சென்று அல்லாடும் பிரசன்னா, இறுதியில் கிரேசி மோகனிடம் மாட்டிக்கொண்டு தவிப்பது, ரகளை காமெடி. கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார் லேகா. 

தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பிரசன்னாவை முதலில் நண்பனாக்கிக் கொள்ள அவர் நினைப்பது, பிறகு, பிரசன்னாவின் முடியாத நிலையை பார்த்து, டாக்டர்ட்ட காட்டி சரி பண்ணிக்கோ என்று கேஷுவலாகச் சொல்லுவது என மாடர்ன் பெண் ஆகியிருக்கிறார். அவரது அப்பா டெல்லி கணேஷ், பிரசன்னாவின் பிரச்னையை மோப்பம் பிடித்து, தன் சைடிலும் அட்வைஸ் மழை பொழிகிறார். அவரது மனைவியாக வரும் உமா பத்மநாபன், பிரசன்னாவின் அம்மாவாக வரும் கீதா ரவிசங்கர், பாத்திரமறிந்து நடித்திருக்கின்றனர். கிருஷ்ணன் வசந்தின் கேமரா, அரோராவின் இசை படத்துக்கு தேவையான அளவு உதவியிருக்கிறது. 

அடிக்கடி வரும் இரட்டை அர்த்த வசனங்கள், அம்மாவே மகளிடம் வெளிப்படையாக அந்த விஷயத்தை பேசுவது போன்ற காட்சிகளை ஆண்கள் ரசிக்கலாம். ஆனால் கொஞ்சமல்ல, டூ மச்சாகவே இருக்கிறது.  ஒரு காட்சியில் வீல்சேரில் அமர்ந்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி, பிறகு ஜம்மென்று நின்றுகொண்டு பேசுவது எப்படி? திருமணத்துக்கு சில மணி நேரமே இருக்கும்போது, பிரசன்னா ஏதோ ஒரு தீவுக்கு படகில் சென்று திருமணம் செய்து வருவது தேவையில்லாத திருப்பம். சில காட்சிகள் டிராமா மாதிரி இருப்பது அலுப்பு.


கோலாகலம் - திரைவிமர்சனம்,

No comments
கல்லூரியில் படிக்கும் அமலும், சரண்யாவும் நெருங்கிய நண்பர்கள். அமலுக்கு இன்னொரு பெண்ணுடன் காதல். அந்த காதலுக்கு சரண்யா உதவுகிறார். ஆனால் அந்த பெண், இன்னொருவருக்கு நிச்சயமாக, அமலின் காதல் தோற்கிறது.

 அமலின் குடும்பமும், சரண்யாவின் குடும்பமும் வெவ்வேறு ஜாதி. ஆனாலும் நட்பால் ஒன்றாக இருக்கிறார்கள். சரண்யாவின் அக்கா திருமணத்துக்கு அமல் செல்கிறார். அங்கு மாப்பிள்ளையின் தம்பி, சரண்யாவுக்கு டார்ச்சர் கொடுக்கிறான். இதைத் தட்டிக் கேட்கிறார் அமல். இதனால் ஆத்திரமடையும் சரண்யாவின் அப்பா, நட்பை விட ஜாதிதான் உயர்ந்தது என்று கூறி அமலை அடிக்கிறார். 

 அவன் முறைப்பையன். அவனுக்கு அவளை டார்ச்சர் பண்ண உரிமை இருக்கு.நீ வெறும் நண்பன்தான், உன் ஜாதி வேறு, என் ஜாதி வேறு என்று பேசிவிடுகிறார். நட்பை ஜாதியால் பிரிக்கும் அவர்களுக்கு பாடம் புகட்ட அமலே, சரண்யாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.

 அது நடந்ததா என்பது மீதி கதை.புதுமுகம் அமல் ஹீரோவுக்குரிய லட்சணங்களோடு இருக்கிறார். காதல் உணர்வை அழகாக காட்டுகிறார். ஆனால் நடிக்கத்தான் சிரமப்படுகிறார். சரண்யா மோகன் அமலுக்கு சரியான ஜோடி. நட்பாய் பழகியவன் திடீரென்று காதல் கல்யாணம் என்று மாறியதும் அதிர்ச்சி காட்டும்போது மட்டும் நடிக்கிறார்

.மற்றபடி நடிக்க வாய்ப்பில்லை.ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருந்துகொண்டு மனைவி தேவதர்ஷினிக்கு பணிவிடை செய்யும் கஞ்சா கருப்பு, சிரிக்க வைக்கிறார். இருவரும் வரும் காட்சிகள் கலகல ரகம்.கணவனை பெயர் சொல்லி அழைக்கும் மனைவி, மனைவியை சில்க் என்று அழைக்கும் கணவன் என்று புதுமையான கணவன், மனைவியாக பாண்டியராஜ், லட்சுமி கலகலப்பூட்டுகிறார்கள். கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.

 பரணியின் இசையில் பழைய வாசனை. காதல், மோதல், சென்டிமென்ட், நட்பு, பாட்டு என கோலாகலமான படத்தை தர முயன்றிருக்கிறார்கள்.

ஈகோ

No comments
வேலுவும், பாலாவும் திருடர்கள். வேலுவின் அக்காவுக்கு லட்சக் கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அதை ஓர் இடத்தில் திருடிக் கொண்டு அக்காவை காண வேலுவும், பாலாவும் ரயிலில் செல்கிறார்கள். அதே ரயிலில் ஹீரோயின் அனஸ்வரா, தன் காதலனை தேடிச் செல்கிறார். தன் அம்மா தனக்கு கொடுத்த ஒரு சென்டிமென்ட் மோதிரத்தை காதலனிடம் கொடுத்து தன் வீட்டில் பெண் கேட்க அனுப்ப வேண்டும் என்பது அவரது திட்டம்.

 ரயிலில் நடக்கும் குட்டி கலாட்டாவில் அனஸ்வராவின் மோதிரம் வேலுவிடமும், வேலுவின் பணம் அனஸ்வராவிடமும் கைமாறுகிறது. மோதிரத்தை எடுத்துக் கொண்டுபோய் அனஸ்வராவின் வீட்டில் கொடுத்து, தனது பணப் பையை வாங்கச் செல்கிறார்கள் வேலுவும், பாலாவும். அனஸ்வராவின் குடும்பம் அவளது காதலனை எதிர்பார்த்து தீட்டிய அரிவாளோடு நிற்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதை கிச்சு கிச்சு மூட்டிச் சொல்கிறார்கள்.

ஈஸ்வர், கோமதி என்பதன் சுருக்கம்தான் ஈகோ. திருடன் கேரக்டருக்கு அப்பாவியாக இருக்கும் வேலுவின் தோற்றம் பொருந்தவில்லை. இருந்தாலும் காமெடியால் சமாளிக்கிறார். நண்பனாக வரும் பாலா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் பேசிப்பேசியே பல்பு வாங்குகிறார். வீட்டை விட்டு தப்பிக்க இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் காமெடியாக முடிவது டிராமா.வேலு, அனஸ்வரா கன்னத்தில் அறைய, திடீரென்று அனஸ்வராவின் தங்கை அங்கு வர, தன் கன்னத்தில் கைவைத்து அவள் தன்னை அடித்ததாகத் திருப்பி விடுவது, அப்பா சென்டிமென்டுக்கு அடிமையான அனஸ்வராவின் அப்பாவை, அப்பா என்று அழைத்து அமுக்குவது என ஆங்காங்கே வரும் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் படத்தை கொஞ்சமேனும் தாங்கிப் பிடிக்கிறது. 

 ஹீரோயின் மாதிரி இருக்க மாட்டாங்க. ஆனா படத்துல இவங்கதான் ஹீரோயின் என்று அனஸ்வரா பற்றி படத்திலேயே இன்ட்ரோ கொடுத்து விடுகிறார்கள். நடிக்க வாய்ப்பு குறைவு. ஆனாலும் நிறைவாகச் செய்கிறார். சில காட்சிகளில் கேரக்டர்கள் வளவளவென பேசிக் கொண்டே இருக்க, அனஸ்வரா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி ஓரமாக நின்று கொண்டிருப்பதுதான் கொடுமை. காதலனுக்காக வீட்டை விட்டே ஓடியவர். 

ஒரு கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை என்பதற்காக காதலை பிரேக் பண்ணுவதும், திருடன் என்று தெரிந்தும் இன்னொருவனை காதலிப்பதும் எந்த ஊர் லாஜிக்கோ தெரியவில்லை. அதுவும் அனஸ்வரா-வேலு காதலை நான்கைந்து ஸ்டில், பாலாவின் வாய்ஸ் ஓவரிலியே சொல்லிவிடுகிறார்கள். கலகலவென ஒரு காமெடி படத்தை தர முயற்சித்திருக்கிறார்கள்.

இரண்டாம் உலகம்- திரைவிமர்சனம்

No comments
கற்பனைகளுக்கு எல்லையில்லை. வரைமுறையில்லை. அது வானம் தாண்டி வாய்க்கால் வெட்டும் வசிய கருவி. அப்படியொரு கற்பனையில் எல்லோருக்குள்ளும் இருக்கிறது ஓர் உலகம். அதில் வழக்கமாக பார்த்திராத வண்ணப்பூக்களும் யாரும் கண்டிராத புது வாழ்க்கையும் அழகாக நகர்ந்துகொண்டிருக்கிறது. அது போலான ஒரு காதல் உலகத்தை, கிராபிக்ஸ் மாவு கொண்டு பிசைந்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

முதல் உலகத்தில், ஆர்யாவை வலிய காதலிக்கிறார் வசீகர அனுஷ்கா. மறுக்கிறார் ஆர்யா. பிறகு பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு அனுஷ்கா ஓகே சொல்ல, அவர் மீது காதல் வருகிறது ஆர்யாவுக்கு. தன் காதலை சொல்லும்போது, இப்போது நோ என்கிறார் அனுஷ்கா. பிறகு தேடி தேடி விரட்ட, காதலில் விழும் அனுஷ்கா, ஓர் அதிகாலையில் அதிரடியாகச் செத்துப் போகிறார்.

இரண்டாம் உலகத்தில், மன்னர் ராஜ்ஜியம். ஆண்களுக்கு இணையாக வாள் சண்டை போடுகிறார் அனுஷ்கா. காதல் இல்லாத அந்த உலகத்தில் ஆர்யா, அனுஷ்காவை விரும்ப, அவர் வெறுக்கிறார். கட்டாய திருமணம் நடக்கிறது. தன் சுதந்திரத்தை பறித்துவிட்டதாக கருதும் அனுஷ்கா, தற்கொலைக்கு முயல்கிறார். பிறகு காட்டுக்குள் வசிக்கிறார். ராஜாவின் சொல்லை மீறியதால் அவர் ஊருக்குள் நுழைய தடை. இந்த உலகத்துக்குள் மயங்கிய நிலையில் வருகிறார், முதல் உலக ஆர்யா. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படம்.படத்தின் பெரிய பிளஸ், விஷுவல்ஸ். ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உழைப்பு இரண்டு உலகத்திலும் விரவி கிடக்கிறது. 

ஒவ்வொரு ஷாட்டும் வண்ணங்களும் கண்ணுக்குள் கர்சிப் போட்டு உட்கார்ந்துகொள்கின்றன. ஆனால், அந்த உழைப்பை, அவரசமாகக் காலி செய்கிறது வித்தியாசமில்லாத கதையும் விறுவிறுப்பில்லாத திரைக்கதையும்.முதல் உலகத்தில் சாந்தம், இரண்டாம் உலகத்தில் ஆக்ஷன் என ஏஞ்சலாக வந்து போகிறார் அனுஷ்கா. ஆர்யாவிடம் காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும் பிறகு அவர் தோழிகள் ஆர்யாவிடம் மிரட்டுவதும் செல்வா பிராண்ட் காட்சிகள்.கண்ணாடி டாக்டர், கட்டுமஸ்தான ஆள் என இரண்டு கேரக்டரில் ஆர்யா பிரமாதம். 

அனுஷ்காவின் காதலை மறுத்துவிட்டு பிறகு அவரைத் தேடித்தேடி அலைவது, நாட்டு நடப்பு தெரியாம இருக்கியேடா? ஒரு மாசமாச்சா, அப்ப இந்நேரம் வேற எவனையாவது பிக்கப் பண்ணியிருப்பாடா என்பது போல நண்பன் வெங்கடேஷ் ஹரிநாதன் சொல்லும் ஆலோசனைகளால் அல்லாடும்போதும் வயதான புரொபசரிடம், ஐயோ நான் உங்களைதான் காதலிக்கிறேன்’ என்று தடாலடியாக தாக்கும்போதும் ரசிக்க வைக்கிறார்.ஊரே அம்மா என்று கொண்டாடும் அந்த வெள்ளைக்கார இளம் பெண், நம்மூர் கோடங்கி மாதிரி எதிர்கால புதிர் போட்டுக்கொண்டே இருக்கிறார். அவரை கடத்திப் போக இன்னொரு ஊரில் இருந்து வீரர்கள் வருகிறார்கள் என்று கதையில் என்னென்னமோ நடக்கிறது.

ஆனால் ஆங்காங்கே தெறித்து விழும் சின்ன சின்ன வசனங்களைத் தவிர, படத்தின் காதல் காட்சிகள் கூட நம்மோடு ஒன்ற மறுக்கின்றன. இருந்தாலும் அழகழகான அந்த லொகேஷன்கள் அசத்தல் ஆர்யா அப்பாவாக வரும் அசோக் குமார், கடவுளாக வரும் டினா, அனுஷ்காவின் அந்த தோழி அனைவரும் சிறப்பான தேர்வு.ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் தாலாட்டுகின்றன. அனிருத், சில ஆங்கில படங்களின் பின்னணி இசையை அச்சடித்திருக்கிறார்.ஹாலிவுட்டுக்கு இணையாக, ஒரு படத்தை உருவாக்க நினைத்த இயக்குனர் செல்வராகவனின் ஃபேன்டசி முயற்சிக்கு வாழ்த்துகள். ஆனால், இன்னொரு உலகத்துக்குள்ளும் சாதாரண காதலை சடுகுடு ஆட விட்டிருப்பதும் அந்த காதல், பார்வையாளனுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதும் மைனஸ்

நவீன சரஸ்வதி சபதம் - திரைவிமர்சனம்

No comments
சித்த மருத்துவரின் வாரிசு ஜெய். அவர் தன் காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக காத்திருக்கிறார். அரசியல்வாதியின் மகன் சத்யன். அடுத்த எம்.எல்.ஏவாக தயாராகி கொண்டிருக்கிறார். ராஜ்குமாருக்கு சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசை. வெங்கட்பிரபுவின் அடுத்த படத்துக்கு தேர்வாகி காத்திருக்கிறார். பெண் தாதாவின் கணவரான விடிவி கணேஷுக்கு மனைவியிடமிருந்து விடுதலை வேண்டும். இந்த நால்வரும் நண்பர்கள். நால்வருக்கும் இப்படி ஆளுக்கொரு கமிட்மென்ட் இருக்கிறது. இந்த நிலையில் ஜெய்யின் பேச்சிலர் பார்ட்டியை கொண்டாட பாங்காக் போகிறார்கள். அங்கு ஒரு பாரில் விடிய விடிய குடிக்கிறார்கள். காலையில் பார்த்தால் மனித நடமாட்டமே இல்லாத ஒரு தீவில் கிடக்கிறார்கள்.அந்த தீவிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

இனிமேல் குடிக்கவே மாட்டோம் என்று சத்தியம் செய்கிற அளவுக்கு படாதபாடுபடுகிறார்கள். அந்த தீவில் தென்னங்கள்ளை குடித்துவிட்டு தப்பிக்க வந்த வாய்ப்பையும் தவற விடுகிறார்கள். அவர்கள் அந்த தீவில் இருந்து தப்பித்தார்களா? அவர்களின் கமிட்மென்டுகள் நிறைவேறியதா என்பது மீதி கதை. மதுவால் உண்டாகும் தீமைகளை எடுத்துச் சொல்ல கயிலாயத்தில் இருந்து சிவன் ஆடும் திருவிளையாடல்தானாம் இதெல்லாம்.எந்த லாஜிக்கும் இல்லாமல் கலகலப்பாக படம் காட்டி கருத்து சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கேற்ப படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள். சிவபெருமான் பேமிலியிடம் லேட்டஸ்ட் செல்போன், ஐபாட், கம்ப்யூட்டர், தமிங்கிலீஸ் டயலாக் என ஜாலியாக படம் தொடங்குவது, ஒவ்வொரு கேரக்டரையும் நாரதர் மனோபாலா, சிவபெருமானுக்கு அறிமுகப்படுத்தி வைப்பது, அவர்களின் இன்னொரு முகத்தை காட்டுவது என கலகலப்பாகச் செல்கிறது படம்.

இவர்கள் நால்வரும் தீவில் மாட்டிக் கொண்ட பிறகு ஹீரோயினுக்கு வேலையில்லாததால் படத்துக்கு கலர் குறைகிறது. அதனை விடிவி கணேஷ் காமெடியால் கொஞ்சம் சமாளிக்கிறார்கள். தலையில் தேங்காய் விழுந்து ஓல்டு சரஸ்வதி சபதம் வசனங்களை அவர் பேசித் திரிவது, அவருக்கு ஜெய் தவறான வைத்தியம் செய்வது, உதவ வந்தவர்களை போதையில் விரட்டி அடிப்பதுமாக அவர் பண்ணும் கலாட்டா கலக்கல் ரகம்.ஜெய், நிவேதா காதல் ஆரம்பிப்பதற்கு பெரிய காரணம் இல்லாவிட்டாலும் காதல் வந்த பிறகு அதை கவிதை மாதிரி அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜெய்யின் பாலியல் வைத்திய டி.வி புரோக்ராம் பார்த்து நிவேதாவின் பேமிலி டெரர்ராவது செம காமெடி. 

நிவேதாவுக்கு வாய்ப்பு குறைவு. ஆனாலும் அவர் அழகு படம் முழுக்க பயணிக்கிறது. ஜெய் காதல் ஏரியாவிலும், காமெடி ஏரியாவிலும் ஸ்கோர் பண்ணுகிறார். சத்யனும், ராஜ்குமாரும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.தனி தீவில் 6 மாதம் மாட்டிக் கொண்டவர்கள், உடம்பு இளைத்து தளர்ந்து போயிருக்க வேண்டாமா? அடிக்கடி அவர்களே படத்தை பற்றி கமென்ட் அடித்துக் கொள்கிறார்கள். அது அப்படியே படத்துக்கு பொருந்தும்போது கைதட்டல்.தீவில் மாட்டிக் கொண்டவர்கள் தப்பிக்க சிவபெருமான் கொடுக்கும் வாய்ப்புகளில் புத்திசாலித்தனம் எதுவும் இல்லை. ஊருக்குத் திரும்பும் நால்வரும் சந்திக்கும் முடிவுகள் எதுவும் புதிதாக இல்லை. மதுவால் ஏற்படும் தீமைகளை விளக்க சிவபெருமானை கொண்டு நவீன திருவிளையாடலை நடத்திக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். விளையாட்டுகள், ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறது.- தினகரன் விமர்சனக்குழு.

ஆப்பிள் பெண்ணே - திரைவிமர்சனம்

No comments
மலைப்பகுதியில் வாழும் ரோஜா, மகள் ஐஸ்வர்யாவைப் படிக்க வைக்க ஓட்டல் நடத்துகிறார். சாப்பிட வருபவர்கள் அம்மாவை தவறாகப் பார்ப்பதையும், அம்மா, அவர்களிடம் சிரித்துப் பேசுவதையும் பிடிக்காத ஐஸ்வர்யா, ரோஜாவைக் கண்டிக்கிறார். இந்நிலையில், போலீஸ் ஏட்டு தம்பி ராமையா, ஐஸ்வர்யா உடை மாற்றும்போது அதை செல்போனில் படமாக்குகிறார்.

இதைப் பார்த்து கொதிக்கும் ரோஜா, ராமையாவை அடித்து அவமானப்படுத்துகிறார். இதற்கு பழி வாங்க காத்திருக்கும் அவர், கன்னியாஸ்திரி ஆகும் எண்ணத்துடன் வீட்டை விட்டு செல்லும் ஐஸ்வர்யாவை, தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய, கைதியை ஏவுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். அம்மா, மகள் பாசப் போராட்டத்தை சொல்லும் படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோஜாவுக்கு நச்சென்ற கேரக்டர். அழகு அம்சவேணியாக ஓட்டல் நடத்தும் அவரது பேச்சும் ஸ்டைலும் ரசிக்கும்படி இருக்கிறது. 

வீட்டை விட்டு ஓடிய மகளை தேடி ஓடி கதறும்போதும், குழிக்குள் விழுந்து தவிக்கும் தன்னைக் காப்பாற்றாமல் ஓடும் மகளின் செய்கையைப் பார்த்து அழும்போதும் கல்மனதையும் கரைய வைக்கிறார். அவருக்கும், சுரேசுக்குமான காதல் எபிசோட், சுவாரஸ்யம். தம்பி ராமையாவின் வில்லத்தனம் எதிர்பாராதது. அதிகம் பேசாமல் சகுனித்தனம் செய்வது, வித்தியாசமான பாடிலாங்குவேஜ் என, வழக்கமான காமெடிக்கு குட்பை சொல்லியிருக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி, நடிப்பைக் கொட்டுகிறார் ஐஸ்வர்யா மேனன்.

 வத்சனின் காதலை ஏற்க மறுப்பது, ரோஜாவின் நடவடிக்கையை வெறுத்து ஓடுவது, கைதி தேவாவிடம் சிக்கி போராடுவது என, நடிப்பு ஏரியாவில் அப்ளாஸ் வாங்குகிறார். பாதர் சுரேஷ், ஐஸ்வர்யா மேனன் அனாதை என்று சொல்வது திடீர் திருப்பம். கடைசியில் அம்மாவின் தியாகத்தை உணர்ந்து மகள் திருந்துவதும், பழைய காதலர்கள் மீண்டும் இணைவதும் எதிர்பார்த்த ஒன்று தான். லாரி டிரைவர் திருமுருகன், முதலில் ரோஜாவுக்கு வலைவீசி, பிறகு ஐஸ்வர்யாவிடம் சில்மிஷம் செய்து, மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறக்கிறார்.

 மணிசர்மாவின் இசையில் ஸ்பெஷலாக எதுவுமில்லை. மலைப்பகுதியின் அழகை மிகையின்றி ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரபாகர். பெரிய இடத்துப் பிள்ளையான சுரேஷ், தள்ளுவண்டியில் இட்லி விற்கும் ரோஜாவைக் காதலிப்பது எப்படி? தம்பி ராமையா சைக்கோ மாதிரி நடந்துகொள்வதற்கான காரணம் என்ன? என்பது தொடங்கி படத்தில் ஏகப்பட்ட கேள்விகள். அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் டிராமா.

கடலில் தவிக்கும் அகதிகள்

No comments
இலங்கையில் யுத்தம் நடந்தபோது அங்கிருந்த தமிழர்கள் கடல் வழியே அகதிகளாக பல நாடுகளுக்குச் சென்றார்கள். அப்படிச் செல்லும்போது, நடுக்கடலில் நடக்கும் சம்பவம் ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அஜெய் இலங்கை தமிழ் இளைஞன். ராணுவத்துக்கும், போராளிகளுக்குமான சண்டையில் இருந்து விலகி இருப்பவன். அகதிகளாக வெளியேறத் துடிக்கும் மக்களை போட் பிடித்து அனுப்பி வைப்பதை சேவையாகச் செய்கிறான். காதலி ஜெனிபரின் மானம் காக்க ராணுவத்தினரை தாக்குவதால் இவனை ராணுவம் தேடுகிறது. 

 அதனால் அவனே சிலரை அழைத்துக் கொண்டு சிறு படகில் ராமேஸ்வரம் வருகிறான். வரும் வழியில் படகு திசைமாறி செல்கிறது. நடுக்கடலில் தத்தளிக்கும் அவர்களின் வலியையும், மரணத்தையும் உண்மைக்கு நெருக்கமாகச் சொல்கிறது திரைக்கதை. கேரக்டருக்கு சரியாகப் பொருந்துகிறார் அஜெய். அவரது முரட்டு முகமும் தாடியும் அந்த பாத்திரத்துக்கு இயல்பாகவே பொருந்துகிறது. பாவாடை, ஆண்கள் சட்டை என்று அசல் இலங்கை தமிழ் பெண்ணாகவே மாறி இருக்கிறார் ஜெனிபர். அஜெய்யை காதலிக்கும்போது உற்சாகமும், கர்ப்பம் கலைந்து சத்தமே வராமல் கதறும்போது பாராட்டும் நடிப்பையும் தந்திருக்கிறார் ஜெனிபர்.

 திகிலூட்டும் கடல் பயணத்தில் கூட சுயநல மனிதன் திருந்துவது, ஒரு குழந்தைக்காக தாயின் போராட்டம், ஓர் இளைஞனின் சாதிக்கத் துடிக்கும் வெறி, பசியின் கொடுமை, காணாமல் போன மகனை பார்க்கத் துடிக்கும் பெற்றோர் என அவர்களின் அன்பை, தவிப்பை, கண்ணீரை யதார்த்தமாக காட்சியாக்கி அந்த பயணத்தில் நம்மையும் சேர்த்துக் கொள்கிறார்கள். கடல் தண்ணீரை குடிக்கும் தாயை ஜெனிபர் தடுக்க, தாகம் தீர்ந்தால்தான் பால்சுரக்கும் என்று சொல்லும் காட்சி கல்நெஞ்சையும் கரைய வைத்து விடும். கடலில் கிடைக்கும் ஒரே இளநீரை குழந்தைக்கு கொடுக்க முயலும்போது, அதை தடுத்து தான் அருந்தும் சுயநலக்காரன் அடுத்த நிமிடமே வருந்தி அந்த குழந்தையிடம் மன்னிப்பு கேட்பது நெகிழ்ச்சி. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். 

 படத்தின் முன்பகுதியில் வரும் காட்சிகள் இலங்கையின் நிலவரத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் நாடகத்தனமாக கையாளப்பட்டிருக்கிறது. போராளிகளின் தலைவன் பற்றிய காட்சி (அது கனவாகவே இருந்தாலும்) தேவையில்லாத திணிப்பு. கேரக்டர்கள் இலங்கை தமிழ் வழக்கையும் சாதாரண தமிழையும் சேர்த்து பேசுவது படத்தின் யதார்த்தத்தை குறைக்கிறது. மரணத்தை நோக்கிய ஒரு கடல் பயணத்தை சொன்ன வகையில் கவனம் ஈர்க்கிறது படம்.

நிர்ணயம் - திரைவிமர்சனம்,

No comments
ஆதரவற்ற ரெஜினாவைக் காதலித்து திருமணம் செய்கிறார் விக்ரம் ஆனந்த். அவர்களுக்கு வேதிகா பிறக்கிறாள். ஆடம்பரமாக வாழ நினைத்து, ஓவராக கடன் வாங்க வீட்டில் பிரச்னை வெடிக்கிறது. இதையடுத்து ரெஜினாவை கோபத்தில் விக்ரம் ஆனந்த் அடிக்க, அவர் இறந்துவிடுகிறார். ஷாக் ஆகும் அவர், குழந்தை வேதிகாவுடன் வெளியேறுகிறார். 

அடுத்து என்ன நடக்கிறது என்பது கதை. காதலிக்கலாம், பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்யலாம். ஆனால், ஆடம்பர ஆசையில் சக்திக்கு மீறி கடன் வாங்கினால், அவஸ்தைதான் என்பதை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். காஸ் சிலிண்டரை கசியச் செய்து, விக்ரம் ஆனந்த் தற்கொலைக்கு முயலும் ஆரம்ப காட்சியே படபடக்க வைக்கிறது. ‘வேணாம்பா. ஐ லவ் யூ பா’ என்று வேதிகா கெஞ்சும்போது, துடித்து அடங்குகிறது மனசு. காதல் தம்பதிகளாக விக்ரம் ஆனந்த், ரெஜினா ஜோடி ஓ.கே. அவர்களின் குழந்தை வேதிகா, கண்களாலேயே நடித்துவிடுகிறாள். 

பிஞ்சு உதடுகளை விரித்து, ஒவ்வொரு வார்த்தையாகப் பேசுவது கொள்ளை அழகு. அப்பாவும், அம்மாவும் சண்டை போடும்போது, ‘பிள்ளையாரப்பா. அவங்க சண்டை போடக்கூடாது’ என்று வேண்டும்போதும், ‘எங்கப்பா’ அம்மாவை கொன்னுட்டாங்க’ என்று ஒருவரிடம் சொல்லும்போதும், கடைசி காட்சியில் அப்பாவை பார்த்து பேசும்போதும் பரிதாபம் அள்ளுகிறாள். தாபா நடத்தும் சிம்ரனாக, சரண்யா நாக். அங்கு தங்கும் விக்ரம் ஆனந்த் மீது காதல் வசப்படும் வேலை. சரியாக செய்திருக்கிறார்.

 ஆனால் காட்சிகள்தான் நம்பும்படி இல்லை. விக்ரம் ஆனந்தை கொலையாளி என்று கண்டுபிடித்து உறுமும் இன்ஸ்பெக்டர் ரகுநாத், அடுத்த நிமிடம் சடலமாவது எதிர்பார்த்த ஒன்றுதான். இறுதியில் எல்லோரையுமே சோகத்துக்கு ஆளாக்கி முடித்து வைக்கிறார்கள். 

செல்வகணேஷின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். சிட்டிபாபுவின் ஒளிப்பதிவு பரவாயில்லை. ஒரு பைக்கை ரிப்பேர் பண்ண பத்து நாள் ஆகுமா? கிரெடிட் கார்டு, பைனான்ஸ், கந்துவட்டி போன்ற இன்ன பிற கடன்களை வாங்கியதால் ஏற்படும் டென்ஷனை மேலோட்டமாகவே சொல்லியிருப்பதால் கதையில் அழுத்தம் இல்லை. அப்பா, மகளின் பாசத்தை சொல்வதா? கணவன், மனைவியின் காதலை சொல்வதா என்பதில் இயக்குனருக்கு குழப்பம்.

ஆரம்பம் ரிலீஸ் தமிழக விமர்சனம்

No comments
அஜீத் – நயன்தாரா ஜோடியாக நடித்த ‘ஆரம்பம்’ படம் நேற்று ரிலீசானது. இதில் ஆர்யா, டாப்சியும் இன்னொரு ஜோடியாக நடித்துள்ளனர். விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். இப்படம் நேற்று அதிகாலை 5 மணிக்கே சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டன. 

சென்னையில் 30–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அஜீத் ரசிகர்கள் நள்ளிரவே தியேட்டர்களில் கூடினார்கள். அஜீத் கட் அவுட்கள் அமைத்து கொடி தோரணங்கள் கட்டினார்கள்

 இது தமிழக விமர்சனம் 

நடிகர் : அஜீத் 
நடிகை : நயன்தாரா 
இயக்குனர் : விஷ்ணுவர்தன் 
இசை : யுவன்சங்கர் ராஜா
 ஓளிப்பதிவு : ஓம்பிரகாஷ் 

முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் கதை. மும்பையில் முக்கியமான மூன்று இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு ஒன்று நடக்கிறது. இந்த குண்டுவெடிப்பை நடத்தியவர் அஜீத். இதேவேளையில் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து முடித்த ஆர்யாவும், டிவி ரிப்போர்ட்டராக வேலை செய்யும் டாப்சியும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர். தன் காதலியை பிரிய முடியாமல் வெளிநாடுகளில் இருந்து வந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு சென்னையிலேயே வேலை செய்து வருகிறார் ஆர்யா. 

மும்பையில் நாசகார வேலைகளுக்கு ஆர்யாவின் சாப்ட்வேர் மூளையை பயன்படுத்திக் கொள்ள அவரைத் திட்டம்போட்டு மும்பைக்கு வரவழைக்கிறார் அஜீத். அங்கு வரும் ஆர்யாவுக்கு அஜீத் ஒரு தீவிரவாதி என்பது தெரியவருகிறது. இதனால் அஜீத்தின் நாசகார வேலைகளுக்கு துணைபோக மறுக்கிறார். ஆனால் அஜீத், ஆர்யாவின் காதலியான தாப்சியை கடத்தி வைத்துக் கொண்டு, அவளை கொலை செய்துவிடுவதாக மிரட்டி அந்த வேலைகளை செய்யவைக்கிறார். 

இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பித்துப் போகவேண்டும் என்று பலமுறை முயற்சிகள் எடுத்தும் தோற்றுப் போகிறார். ஒருகட்டத்தில் அவர்களிடம் இருந்து சாமர்த்தியமாக தப்பிக்கும் ஆர்யா அஜீத்தை போலீசிடம் காட்டிக் கொடுக்கிறார். காவல்துறையிடம் சிக்கிய அஜீத் என்ன ஆனார்? அவர் தீவிரவாதியாக உருவாக என்ன காரணம்? என்பதை ஆர்யாவுக்கு நயன்தாரா பிளாஸ்பேக்குடன் விவரிக்கிறார். படத்தில் ஸ்டைலிஷாக அஜீத் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் என்று சொல்லவேண்டும். 

மங்காத்தா கெட்டப்பில் வந்தாலும், மங்காத்தாவில் அஜீத்திடம் பார்த்த ஸ்டைல் இந்த படத்தில் இல்லை. இவரைவிட, இவர் நண்பராக வரும் ராணா அனைவரையும் ஈர்க்கிறார். முற்பாதியில் சீரியசாக வரும் அஜீத், பிற்பாதியில் களைகட்டுகிறார். பிற்பாதியில் இவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. ராணாவின் தங்கச்சியாக நயன்தாரா வருகிறார். படம் முழுக்க அஜீத் கூடவே வருகிறார். படத்தில் இவருக்கு செமத்தியான கதாபாத்திரம்தான். சாப்ட்வேர் இன்ஜினியராக வருகிறார் ஆர்யா. ‘ராஜாராணி’ படத்தில் நடித்த ஆர்யாவுக்கு எதிர்மறையான கதாபாத்திரம். அதை கச்சிதமாக செய்திருக்கிறார். 

இவருடைய காதலியாக வரும் தாப்சி இந்த படத்தில் கொஞ்சம் அழகாகவே இருக்கிறார். இவர் செய்தி வாசிக்கும் காட்சியைத்தான் ரசிக்க முடியவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகளாக வரும் அதுல் குல்கர்னியும், கிஷோரும் அவ்வப்போது ஒருசில சீன்களில் வந்து தலைகாட்டிக் கொண்டே இருக்கிறார்கள். உள்துறை மந்திரியாக வரும் மகேஷ் மஞ்ச்ரேக்கரின் முகபாவனையும், நடிப்பும் மிரட்ட வைக்கிறது. அஜீத்துக்கு அடுத்தப்படியாக இவருடைய நடிப்பு ரொம்பவே ரசிக்க வைக்கிறது. சுபாவின் திரைக்கதையில் விறுவிறுப்பு இருக்கிறது. 

அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை பின்னணியாக வைத்து படத்தை எடுத்ததற்காக இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு சலாம் போடலாம். பில்லா என்ற பெரிய படத்திற்கு பிறகு அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான படம் என்பதால் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் பரபரப்பான கதைக்களத்துடன் படமாக்கியிருக்கிறார் விஷ்ணுவர்தன். 

அஜீத் ரசிகர்களுக்கு உண்மையிலேயே கொண்டாட்டமான படம்தான் இது. யுவன் இசையில் ‘அடடா ஆரம்பம்’ பாடல் ஆடாதவர்களையும் ஆட்டம் போட வைக்கும். மற்ற பாடல்கள் மனதை ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் யுவன் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் மும்பை மாநகரத்தை இன்னொரு கோணத்தில் படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. மொத்தத்தில் ‘ஆரம்பம்’ அமர்க்களம்.




வணக்கம் சென்னை - திரைவிமர்சனம்

No comments
மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானத்தின் கலக்கல் காம்பினேஷனில் வெளியான படம் 'வணக்கம் சென்னை'.
தேனியில் இருந்து வேலைக்காக புறப்படும் சிவாவையும், லண்டனில் இருந்து போட்டோகிராபிக்காக கிளம்பும் ப்ரியா ஆனந்தையும் அன்புடன் வரவேற்கிறது சென்னை.

இருவருக்கும் சென்னை புதிது என்பதால், தங்கள் குடியேறும் வீட்டின் ப்ரோக்கரின் தில்லு முல்லால் ஒரே வீட்டில் குடியேறும் சூழல் ஏற்படுகிறது.

பின் என்ன வந்தாரை வாழ வைக்கும் சென்னை, இவர்கள் இருவரையும் ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக டான்ஸ் ஆட வைக்கிறது கலகலப்புடன்.

ஹோலிப்பண்டிகையில் ப்ரியா ஆனந்த் பூசிய வண்ணத்தில் கலர்புல்லாக, காதலின் நிறம் தேட ஆரம்பித்து விடுகிறார் சிவா.

இந்நிலையில் இவர்களை ஏமாற்றிய வீட்டு ப்ரோக்கராக நமது கொமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்ட்ரி கொடுக்க, அதை தெரிந்தும், தெரியாததைப் போல் சிவா சமாளித்து விட்டு விடுகிறார்.

பின் தன் காதலை ப்ரியா ஆனந்துடன் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், ப்ரியா ஆனந்துக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் நடந்திருப்பது தெரிய வருகிறது.

இதனால் கோபமடைந்த சிவா, தங்களை ஒன்றாக தங்கவைத்து எஸ்கேப்பான சந்தானத்தை கண்டுபிடித்து மாறுகால் மாறுகை வாங்குகிறார்.

அதற்கு பரிகாரம் செய்வதற்கு இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக சிவாவிடம் சரண்டர் ஆகிறார் சந்தானம்.

வழக்கம் போல் சில முயற்சிகளில் மிஸ் ஆகி, இறுதில் ப்ரியா ஆனந்துக்கும் காதல் மலர்கிறது.

அங்கதான் கதையில ஒரு ட்விஸ்ட்... ஒன்னுமில்லைங்க நம்ம ப்ரியா ஆனந்துக்கு நிச்சயம் பண்ண அந்த அமெரிக்க மாப்பிள்ளை... ஆ..சாரி..சாரி... இதில் லண்டன் மாப்பிள்ளையாக ராகுல் ரவிந்திரன் என்ட்ரி கொடுக்கிறார்.

அப்புறம் என்ன, இவங்க காதல் கைகூடுச்சா..? இல்ல பிரிஞ்சுட்டாங்களா..? என்பது மீதிக்கதையின் சுருக்கம்.

சிவா வழக்கம்போல் ஒரே ஸ்டைலில் வந்து ஏதோ நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பிரதர்!

ப்ரியா ஆனந்த் தனது கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ, அதை கச்சித்தமாக செய்திருக்கிறார். கேட்ஸ் ஆப் ப்ரியா!

சந்தானம் கொஞ்சம் இடைவெளிவிட்டு(படத்தில்) வந்தாலும், கொமெடி சரவெடியை கோலாகலமாகவே வெடிக்கவைத்திருக்கிறார்.

ராகுல் நவிந்திரன், லண்டன் மாப்பிளையின் தேவைக்கேற்ப நடித்துள்ளார்.

பின், நிழல்கள் ரவி, ரேணுகா, ப்ளாக் பாண்டி, ஊர்வசி, நாசர், மனோபாலா, சுவாமிநாதன், ஆர்த்தி என்று அவரவர்கள் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியுள்ளனர்.

அறிமுக பெண் இயக்குனரான கிருத்திகா உதயநிதிக்கு வாழ்த்துக்கள். தான் நினைத்ததை பெர்பக்ஷனோடு எடுத்திருக்கிறார்.

கதையில் சில இடங்களில் ஓட்டை, உடசல்கள் தெரிந்தாலும் அதை தனது கொமெடிக் கலந்த திரைக்கதையால், நம் கண்களை மறைத்து விடுகிறார்.

அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இப்படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

லண்டன், சென்னை, தேனி ஆகிய இடங்களுக்கு நம்மை பிக்னிக் கூட்டிச் செல்கிறது ரிச்சர்ட்.எம்.நாதனின் ஒளிப்பதிவு.

அதுவும் 'ஓ பெண்ணே..பெண்ணே' பாடல் கமெரா வெவ்வேறு கோணங்களில் நகர்வது மிக அழகு. சல்யூட் ரிச்சர்ட்!

படத்தின் திரைக்கதை நீண்ட நேரம் பயணித்தாலும்... பார்ப்பவர்களின் பார்வைக்கு சற்றும் சலனம் தராமல், தத்தம் தனது பணியை வெகு சிறப்பாக செய்திருக்கிறார் எடிட்டர் டி.எஸ்.சுரேஷ். சூப்பர் பாஸ்!

மொத்தத்தில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி, லாஜிக் விதிகளையும் மறந்து திரையரங்குக்கு வருவோரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது இந்த வணக்கம் சென்னை.

நடிகர்கள்: சிவா, சந்தானம், ராகுல் ரவிந்திரன்
நடிகைகள்: ப்ரியா ஆனந்த், ஊர்வசி, ரேணுகா, ஆர்த்தி
ஒளிப்பதிவு: ரிச்சர்ட்.எம்.நாதன்
இசை: அனிருத்
இயக்கம்: கிருத்திகா உதயநிதி
தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின்

காதல் கண்ணாமூச்சி - திரைவிமர்சனம்

No comments
நாற்பதை நெருங்கும் அண்ணன்கள், கல்யாணமாகாமல் இருக்கும் வீட்டில், நஸ்ரியாவை ரகசிய கல்யாணம் செய்துகொள்கிறார் தம்பி தனுஷ். வீட்டில் ஏற்க மாட்டார்கள் என நினைக்கும் தனுஷ், நஸ்ரியாவை வேலைகாரியாக வீட்டுக்குள் நுழைய விடுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை கலாட்டாவாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.


கிராமத்து வெட்டி ஆபீசர் கேரக்டருக்கு கச்சித மாகப் பொருந்துகிறார் தனுஷ். நஸ்ரியாவின் காதலுக்காக மரத்திலிருந்து மரம் தாவுவது திடீரென்று தாலி கட்டிவிட்டு, வீட்டுக்கு எப்படி செல்வது என்று தடுமாறுவது, பின் நஸ்ரியாவை விரட்டி, விரட்டி ரொமான்ஸ் செய்வது என தனுஷ் ஏரியா ஓகே. ஆனால் காமெடி என்கிற பெயரில் சில காட்சிகளில் அவர் செய்யும் சேட்டைகள் எரிச்சல். 

முதலில் வெறுப்பு, பிறகு காதல் என்கிற பார்முலாவில் நஸ்ரியா. தன்னை தனுஷ் பின்தொடர்வது தெரிந்து முறைப்பதும் பிறகு காரணமே இல்லாமல் காதல் வந்து தொலைத்தபின் தவிப்பதும் அழகு. தனுஷின் அண்ணன்களின் லவ் டார்ச்சர்களை எதிர்கொள்ளும்போது சிரிப்பு. பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார். தம்பி மனைவி என்று தெரியாமல் ஸ்ரீமன், நஸ்ரியாவுக்கு நூல் விடுவது, அவள் பெயரைக்கேட்டாலே தொப்பை வயிற்றை எக்குவது, ஒருகாட்சியில் துண்டு அவிழ்ந்து விழுவது என  காமெடிமேன் ஆகியிருக்கிறார் ஸ்ரீமன். சத்யனும் தன் பங்குக்கு காமெடி பண்ணுகிறார். 

தனுஷின் நண்பர்களாக வரும் சூரி, சதீஷ், கும்கி அஸ்வின், இமான் அண்ணாச்சி கோஷ்டி சிரிக்க வைக்க பெரும்பாடு படுகிறது. தனுஷை, ‘அவன் பச்ச மண்ணுடா’ என்று சர்ட்டிபிகேட் கொடுக்கும் பிரமிட் நடராஜன், பார்க்கிற பெண்களை எல்லாம், ‘என் பெரிய பையனுக்கு நல்லாயிருப்பாளே’ என்று கேட்கும் மீரா கிருஷ்ணன், மகளுக்காக உருகும் நரேன், வில்லன் வம்சி கிருஷ்ணா ஆகியோர் தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு, கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. ஜிப்ரானின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. திருமணமாகாத பையன்கள், வீட்டில் இருக்கும்போது, இளம் பெண்ணை அவ்வளவு ஈசியாக தங்க வைப்பார்களா? நஸ்ரியாவின் கழுத்தில் இருக்கும் தாலி மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் தனுஷின் அம்மாவுக்கு தெரியாதது எப்படி என்பது உட்பட ஏகப்பட்ட கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. கலகலப்பான காதல் கதையை சுவாரஸ்யமாக சொல்ல நினைத்த இயக்குனர், அதில் பாதி தாண்டியிருக்கிறார்.

நான் இயக்குனர்களின் நடிகன்: விஜய் சேதுபதி

No comments
நான் இயக்குனர்களின் நடிகன் என்று விஜய்சேதுபதி சொன்னார். சென்னையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அவர் கூறியதாவது: தற்போது ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மெல்லிசை’, எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் உட்பட 7 படங்களில் நடித்து வருகிறேன். 

இதற்கு மேலும் ஒரே நேரத்தில் நடிப்பது சிரமம் என்பதால் இப்போது கதை கேட்கவில்லை. இருக்கும் படங்களை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன். எந்த பின்புலமும் இல்லாமல் ஹீரோவாக வருவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. 

இப்போது வந்திருப்பதற்கு காரணம் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதுதான். நான் இந்த அளவுக்கு நடித்திருக்கிறேன் என்றால் அது இயக்குனர்கள் சொல்லிக் கொடுத்தது. அவர்கள் உருவாக்கி வைத்திருந்த கேரக்டரை நான் பூர்த்தி செய்திருக்கிறேன். நான் எப்போதுமே இயக்குனர்களின் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். தயாரிப்பாளர் ஆகும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை.

 ‘சங்குதேவன்’ படம் ஜேஎஸ்கே நிறுவனத்துக்காக முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து தர ஒப்புக் கொண்டிருந்தேன். இப்போது கையில் நிறைய படங்கள் இருப்பதால் அந்தப் படத்தை தள்ளி வைத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.