ஆப்பிள் பெண்ணே - திரைவிமர்சனம்
மலைப்பகுதியில் வாழும் ரோஜா, மகள் ஐஸ்வர்யாவைப் படிக்க வைக்க ஓட்டல் நடத்துகிறார். சாப்பிட வருபவர்கள் அம்மாவை தவறாகப் பார்ப்பதையும், அம்மா, அவர்களிடம் சிரித்துப் பேசுவதையும் பிடிக்காத ஐஸ்வர்யா, ரோஜாவைக் கண்டிக்கிறார். இந்நிலையில், போலீஸ் ஏட்டு தம்பி ராமையா, ஐஸ்வர்யா உடை மாற்றும்போது அதை செல்போனில் படமாக்குகிறார்.
இதைப் பார்த்து கொதிக்கும் ரோஜா, ராமையாவை அடித்து அவமானப்படுத்துகிறார்.
இதற்கு பழி வாங்க காத்திருக்கும் அவர், கன்னியாஸ்திரி ஆகும் எண்ணத்துடன் வீட்டை விட்டு செல்லும் ஐஸ்வர்யாவை, தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய, கைதியை ஏவுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். அம்மா, மகள் பாசப் போராட்டத்தை சொல்லும் படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோஜாவுக்கு நச்சென்ற கேரக்டர். அழகு அம்சவேணியாக ஓட்டல் நடத்தும் அவரது பேச்சும் ஸ்டைலும் ரசிக்கும்படி இருக்கிறது.
வீட்டை விட்டு ஓடிய மகளை தேடி ஓடி கதறும்போதும், குழிக்குள் விழுந்து தவிக்கும் தன்னைக் காப்பாற்றாமல் ஓடும் மகளின் செய்கையைப் பார்த்து அழும்போதும் கல்மனதையும் கரைய வைக்கிறார்.
அவருக்கும், சுரேசுக்குமான காதல் எபிசோட், சுவாரஸ்யம். தம்பி ராமையாவின் வில்லத்தனம் எதிர்பாராதது. அதிகம் பேசாமல் சகுனித்தனம் செய்வது, வித்தியாசமான பாடிலாங்குவேஜ் என, வழக்கமான காமெடிக்கு குட்பை சொல்லியிருக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி, நடிப்பைக் கொட்டுகிறார் ஐஸ்வர்யா மேனன்.
வத்சனின் காதலை ஏற்க மறுப்பது, ரோஜாவின் நடவடிக்கையை வெறுத்து ஓடுவது, கைதி தேவாவிடம் சிக்கி போராடுவது என, நடிப்பு ஏரியாவில் அப்ளாஸ் வாங்குகிறார்.
பாதர் சுரேஷ், ஐஸ்வர்யா மேனன் அனாதை என்று சொல்வது திடீர் திருப்பம். கடைசியில் அம்மாவின் தியாகத்தை உணர்ந்து மகள் திருந்துவதும், பழைய காதலர்கள் மீண்டும் இணைவதும் எதிர்பார்த்த ஒன்று தான். லாரி டிரைவர் திருமுருகன், முதலில் ரோஜாவுக்கு வலைவீசி, பிறகு ஐஸ்வர்யாவிடம் சில்மிஷம் செய்து, மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறக்கிறார்.
மணிசர்மாவின் இசையில் ஸ்பெஷலாக எதுவுமில்லை. மலைப்பகுதியின் அழகை மிகையின்றி ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரபாகர்.
பெரிய இடத்துப் பிள்ளையான சுரேஷ், தள்ளுவண்டியில் இட்லி விற்கும் ரோஜாவைக் காதலிப்பது எப்படி? தம்பி ராமையா சைக்கோ மாதிரி நடந்துகொள்வதற்கான காரணம் என்ன? என்பது தொடங்கி படத்தில் ஏகப்பட்ட கேள்விகள். அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் டிராமா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment