நிர்ணயம் - திரைவிமர்சனம்,

No comments
ஆதரவற்ற ரெஜினாவைக் காதலித்து திருமணம் செய்கிறார் விக்ரம் ஆனந்த். அவர்களுக்கு வேதிகா பிறக்கிறாள். ஆடம்பரமாக வாழ நினைத்து, ஓவராக கடன் வாங்க வீட்டில் பிரச்னை வெடிக்கிறது. இதையடுத்து ரெஜினாவை கோபத்தில் விக்ரம் ஆனந்த் அடிக்க, அவர் இறந்துவிடுகிறார். ஷாக் ஆகும் அவர், குழந்தை வேதிகாவுடன் வெளியேறுகிறார். 

அடுத்து என்ன நடக்கிறது என்பது கதை. காதலிக்கலாம், பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்யலாம். ஆனால், ஆடம்பர ஆசையில் சக்திக்கு மீறி கடன் வாங்கினால், அவஸ்தைதான் என்பதை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். காஸ் சிலிண்டரை கசியச் செய்து, விக்ரம் ஆனந்த் தற்கொலைக்கு முயலும் ஆரம்ப காட்சியே படபடக்க வைக்கிறது. ‘வேணாம்பா. ஐ லவ் யூ பா’ என்று வேதிகா கெஞ்சும்போது, துடித்து அடங்குகிறது மனசு. காதல் தம்பதிகளாக விக்ரம் ஆனந்த், ரெஜினா ஜோடி ஓ.கே. அவர்களின் குழந்தை வேதிகா, கண்களாலேயே நடித்துவிடுகிறாள். 

பிஞ்சு உதடுகளை விரித்து, ஒவ்வொரு வார்த்தையாகப் பேசுவது கொள்ளை அழகு. அப்பாவும், அம்மாவும் சண்டை போடும்போது, ‘பிள்ளையாரப்பா. அவங்க சண்டை போடக்கூடாது’ என்று வேண்டும்போதும், ‘எங்கப்பா’ அம்மாவை கொன்னுட்டாங்க’ என்று ஒருவரிடம் சொல்லும்போதும், கடைசி காட்சியில் அப்பாவை பார்த்து பேசும்போதும் பரிதாபம் அள்ளுகிறாள். தாபா நடத்தும் சிம்ரனாக, சரண்யா நாக். அங்கு தங்கும் விக்ரம் ஆனந்த் மீது காதல் வசப்படும் வேலை. சரியாக செய்திருக்கிறார்.

 ஆனால் காட்சிகள்தான் நம்பும்படி இல்லை. விக்ரம் ஆனந்தை கொலையாளி என்று கண்டுபிடித்து உறுமும் இன்ஸ்பெக்டர் ரகுநாத், அடுத்த நிமிடம் சடலமாவது எதிர்பார்த்த ஒன்றுதான். இறுதியில் எல்லோரையுமே சோகத்துக்கு ஆளாக்கி முடித்து வைக்கிறார்கள். 

செல்வகணேஷின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். சிட்டிபாபுவின் ஒளிப்பதிவு பரவாயில்லை. ஒரு பைக்கை ரிப்பேர் பண்ண பத்து நாள் ஆகுமா? கிரெடிட் கார்டு, பைனான்ஸ், கந்துவட்டி போன்ற இன்ன பிற கடன்களை வாங்கியதால் ஏற்படும் டென்ஷனை மேலோட்டமாகவே சொல்லியிருப்பதால் கதையில் அழுத்தம் இல்லை. அப்பா, மகளின் பாசத்தை சொல்வதா? கணவன், மனைவியின் காதலை சொல்வதா என்பதில் இயக்குனருக்கு குழப்பம்.

No comments :

Post a Comment