தலைமுறைகள் - திரைவிமர்சனம்
ஜாதி, மத மற்றும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட கடந்த தலைமுறை தாத்தாவை, பேரன் சுத்தப்படுத்தும் கதை. தாத்தாவுக்கு பேரன் மனிதத்தை போதிக்க, பேரனுக்கு தாத்தா மொழியையும், பண்பாட்டையும், கிராமத்தையும் போதிக்க, இப்படியான கொடுக்கல் வாங்கலை அடுத்த தலைமுறைக்கு தந்திருக்கும் படம். வைராக்கியமிக்க முதியவராக பாலுமகேந்திரா வாழ்ந்திருக்கிறார். வார்த்தைகளை வெட்டி வெட்டி பேசும் அவரது இயல்பான பேச்சு, அந்த கதாபாத்திரத்துக்கு யதார்த்தமாகப் பொருந்துகிறது. பேரனை முதன் முதலில் காணும் அந்த தருணத்தில் அவனுக்குள் தன்னைத் தேடும் அந்த பார்வை, அவனுக்கு தமிழ் தெரியவில்லை என்பதை அறிந்து தலையில் அடித்துக் கொள்ளும் சோகம், தூங்கும் பேரன் கையில் இருக்கும் மிட்டாயை எடுத்து தின்னும் குழந்தைதனம் என படம் முழுக்க கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.
அழகும், வெகுளித்தனமுமாக கவர்கிறான் மாஸ்டர் கார்த்திக். முதன் முதலில் ஆற்றை பார்க்கும் ஆவல், கிராமத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் ஆச்சர்யத்தோடு எதிர்நோக்கும் பார்வை, நீயும் செத்துடுவியா தாத்தா என்று கலங்கும்போது நம்மையும் கலங்க வைத்துவிடுகிறான். வடநாட்டு கிறிஸ்தவ மருமகள் கேரக்டரில் ரம்யா சங்கர் கச்சிதமான நடிப்பை தந்திருக்கிறார். பாலுமகேந்திராவின் மகளாக வரும் வினோதினி கிராமத்து தங்கச்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். காட்சிக்குள் வராத அந்த இரண்டாவது மனைவி கேரக்டரும் காட்சிக்குள் வரும் மகள் கேரக்டரும் யதார்த்தமான பதிவு.
தந்தையை மீறவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவிக்கிற தவிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் சஷிகுமார். பாலுமகேந்திராவின் ஒளி ஓவியத்துக்கு தனது ஒலியால் வண்ணம் சேர்த்திருக்கிறார் இளையராஜா. காக்கைகளின் சத்தமும், குயில்களில் பாட்டுமே அதிக காட்சிகளில் பின்னணியாக ஒலித்திருப்பதும், பல காட்சிகளில் இசை மவுனமாகி இருப்பதும் படத்தை கவிதையாக்கி இருக்கிறது. பேரன் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்த பாலுமகேந்திராவிடம், நீ இந்து குடும்பத்துல பிறந்ததால இந்துவா இருக்கே. நான் கிறிஸ்தவ குடும்பத்தில பிறந்ததால கிறிஸ்தவனா இருக்கேன். இந்த அழுக்கு நம்மோட போகட்டுமே. அதை ஏன் அடுத்த தலைமுறைக்கு கொடுக்குற? என்று அந்த பாதிரியார் கேட்பது இந்த தலைமுறைக்கான பெரும் கேள்வி.
மருமகள் 8 கிலோ மீட்டர் நடந்து சர்ச்சுக்கு போகிறாள் என்பதற்காக ஏசு படத்தை பூஜை அறையில் மாட்டி இங்கேயே கும்பிட்டுக்கம்மா என்று சொல்வது, அ எழுத கற்றுக் கொள்ளும் பேரன் அதை உச்சா போயி எழுதிப்பார்ப்பதும், அதையே தானும் செய்து பார்ப்பது மாதிரியான பாலுமகேந்திரா டச் நிறைய இருக்கிறது. திருப்பமோ, பரபரப்போ இல்லாத கதை என்றாலும் காட்சிகளாலும் வசனங்களாலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா. ஆனால் தாத்தாவும் பேரனும் ஆறு, குளம், தோட்டம் என சுத்துவது குழுந்தைகளுடன் விளையாடுவது என்று அடிக்கடி வரும் காட்சிகள் கொஞ்சம் அலுப்புத் தட்டத்தான் செய்கிறது. ஆனாலும் இப்படியொரு படத்தை உருவாக்கிய பாலுமகேந்திராவும் அதை தயாரித்த சசிகுமாரும் பாரட்டப்பட வேண்டியவர்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment