கரகாட்டக்காரன் படத்தை தயாரித்தவர் கருமாரி கந்தசாமி மரணம்

No comments
திரைப்பட தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி நேற்று காலமானார். அவருக்கு வயது 73. ராமராஜன், கனகா நடித்து மெகா ஹிட்டான கரகாட்டக்காரன் படத்தை தயாரித்தவர் கருமாரி கந்தசாமி. 

மேலும் வில்லுப்பாட்டுக்காரன், மனைவி ஒரு மந்திரி, எல்லாம் அவன் செயல் உட்பட 30 படங்களை தயாரித்துள்ளார். கோயில் யானை, மண்சோறு, வளர்த்த கடா உட்பட 13 படங்களை இயக்கி உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த அவருக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

 வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு நடிகர்கள் ராமராஜன், மோகன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, டி.பி.கஜேந்திரன் உட்பட ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான திருச்சி மலைக்கோட்டைக்கு நேற்றுமாலை கொண்டு செல்லப்பட்டது. 

இறுதி சடங்கு இன்று நடக்கிறது. மறைந்த கருமாரி கந்தசாமிக்கு தேன் தமிழ்ச்செல்வன், குமரன், அண்ணாத்துரை ஆகிய மகன்களும் முருகு செல்வி என்ற மகளும் உள்ளனர். கருமாரி கந்தசாமியின் மனைவி விஜயா ஏற்கனவே காலமாகிவிட்டார்.

No comments :

Post a Comment