பாலக்காட்டு மாதவன்

No comments

கருத்து கந்தசாமியாக வலம் வந்த சின்ன கலைவாணர் மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள படம் தான் பாலக்காட்டு மாதவன். தமிழ் சினிமாவில் இதுவரை கலக்கிய அனைத்து காமெடி நட்சத்திரங்கள் எல்லாம் இனி தங்கள் செல்போனில் ‘ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்’ பாடலை தான் வைத்துள்ளார்கள் போல. சந்தானம், வடிவேலுவை தொடர்ந்து இந்த வாரம் களத்தில் இறங்கியிருக்கிறார் விவேக். அதிலும் சோனியா அகர்வால், செம்மீன் ஷீலா, சிங்கமுத்து என பெரிய நட்சத்திர பட்டாளம் மட்டுமின்றி, இசை ஸ்ரீகாந்த் தேவா என வலுவான கூட்டணியுடன் இப்படத்தை இயக்கியுள்ளார் சந்திரமோகன். கதைக்களம்  தமிழ் சினிமா என்றாலே செண்டிமெண்ட் தான் முதலில் நியாபகம் வரும், சூப்பர் ஸ்டாரில் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் அவருடைய மருமகன் சுள்ளான் ஸ்டார் வரை அம்மா செண்டிமெண்டை தொட்டு தான் தூள் கிளப்பினார்கள்.

அதேபோல் விவேக்கும் இந்த படத்தில் கொஞ்சம் கூடுதலாகவே தொட்டுப்பார்த்துள்ளார். எந்த வேலையும் செய்யக்கூடாது, ஆனால், பணம் மட்டும் சம்பாதிக்க வேண்டும் என இருப்பவர் விவேக். தன் மனைவி சோனியா அகர்வால் வேலைப்பார்க்கும் அதே கம்பெனியில் இவரும் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க, தன் மனைவியை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என ஈகோ காரணமாக அந்த கம்பெனியிலிருந்து வெளியே வருகிறார். ஒரு கட்டத்தில் செம்மீன் ஷீலா முதியோர் இல்லத்தில் இருக்க, இவரை தத்தெடுத்தால் மாதம் 25,000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதால், விவேக் அவரை தத்தெடுக்க, அதன் பின் என்ன ஆகின்றது, விவேக்கிற்கு எப்படி பொறுப்பு வருகின்றது என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல்  விவேக் நான் தான் பாலா படத்தில் மிகவும் சீரியஸாக நடித்த இவர், மீண்டும் ‘எலே டோண்ட் வொரி பி ஹாப்பி’ என முழு நகைச்சுவை வேடம் ஏற்று கலக்கியிருக்கிறார்.

 வழக்கமான தன் கவுண்டர் வசனங்களால் கலக்கியிருக்கிறார். வண்டியில் வேகமாக செல்லும் போது ‘டேய் 40ல போன 80 வரைக்கு இருப்போம், 80ல போன 40லயே போய்டுவோம்’ன்னு தன் வழக்கமான கருத்து+கவுண்டர். சோனியா அகர்வால் நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் முழுவதும் குடும்பத்து பெண்ணாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். செம்மீன் ஷீலா தன் கதையின் திருப்பம் என்பதால் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

 படத்தில் குறிப்பிடும் படி சொன்னால், விவேக் உப்புமா செய்யும் காட்சி, மொட்டை ராஜேந்திரனுடன் அடிக்கும் லூட்டி போன்ற காட்சிகள் கலை கட்டுகின்றது. க்ளாப்ஸ்  விவேக் தான் ஒன் மேன் ஆர்மியாக படத்தை நகர்த்தி செல்கின்றார். செண்டிமெண்ட் காட்சிகளில் ஷீலா நடிப்பு கவர்கின்றது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை குறிப்பாக விவேக் காட்டும் எக்ஸ்பிரஷன்களுக்கு மிகவும் உதவுகிறது.

பல்ப்ஸ்  ஏதோ பல காட்சிகளில் விவேக்கை தவிர மற்றவர்கள் செய்யும் காமெடி கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது. ஒளிப்பதிவு சற்று நாடக பாணியில் உள்ளது, இதை தவிர்த்து இருக்கலாம். இன்றைக்கு தேவையான நல்ல கருத்தை சொன்னதற்காகவும் மற்றும் விவேக்காகவும் கண்டிப்பாக பாலக்காட்டு மாதவனை ரசிக்கலாம்.

No comments :

Post a Comment