சுல்தான் - ஒன் மேன் ஷோ!

No comments

நூறு கோடி, 200 கோடி கிளப்களை கடந்து 500 கோடி கிளப்பை குறிவைத்து இறங்கியிருக்கும் பிரம்மாண்ட சினிமா 'சுல்தான்'.

மல்யுத்தம் மார்ஷியல் ஆர்ட் இரண்டும் கலந்து கட்டி அடிக்கிற மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட் (MMA) பிஸினஸில் தோல்வி அடைந்து துவண்டிருக்கிற ஆகாஷ் ஓபராயிடம் (அமித்) அவர் அப்பா, ‘சும்மா வெளிநாட்டுக்காரங்களை வெச்சு விளையாடிகிட்டிருந்தா இப்படித்தான். இது இந்தியால பிரபலமாகணும்னா ஒரு இந்தியன் இவனுகளை ஜெயிக்கணும். அதுக்கு ஒரே ஒருத்தன்தான் இருக்கான். சுல்தான்!” என்பதில் ஆரம்பிக்கிறது படம்.

ஹரியானாவின் புழுதி படர்ந்த ரெவாரி கிராமத்து இளைஞன் சுல்தான் (சல்மான்கான்). குசும்பும், கேளிக்கையுமாய் திரிபவனை கண்டதும் காதல் கொள்ள வைக்கிறாள் மல்யுத்த வீராங்கனை ஆர்ஃபா (அனுஷ்கா ஷர்மா). அவருக்காக மல்யுத்தம் கற்றுக் கொண்டு ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் என பல பதக்கங்களையும் வேட்டையாடுகிறார் சல்மான். பின் என்ன.. டும்டும்டும்தான். அந்த குஷியில் ஒலிம்பிக் தங்கமும் அவர் வசமாகிறது. வெற்றி கண்ணை மறைக்க, ஒரு கட்டத்தில், மிகப்பெரிய இழப்பு ஒன்றை சந்திக்கிறார்கள் இருவருமே. அதன் காரணமாக இவனை வெறுத்து ஒதுக்குகிறார். அதனாலேயே மல்யுத்த வாழ்வை வெறுத்து ஒதுக்கிவிடுகிறார் சல்மான்.

‘மீண்டும் விளையாட வா.. நல்ல காசு தர்றேன்’ என்று அமித் அழைக்க, இரத்த வங்கி ஆரம்பிக்கும் தன் கனவிற்கு அந்தப் பணம் தேவைப்படுவதால், ஒப்புக்கொண்டு மீண்டும் ரிங்கில் இறங்குகிறார் சல்மான். அதை பயன்படுத்திக் கொண்டானா, கடந்த கால காதல் என்னவானது என பரபர கமர்ஷியல் சினிமாவாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் சல்மான்கான். முரட்டுத்தோல், முறைப்பு பார்வை என ஒற்றை ஆளாய் படத்தை தூக்கி சுமக்கிறார் சல்மான். கண்ணில் காதலுடன் உருகுகிறார். ஷாருக் கானை எனக்குப் பிடிக்கும் என்கிறார். மண்ணை உள்ளங்கையில் தட்டி தொடை தட்டி களமிறங்குகிறார். நிராகரிப்பை நினைத்து கலங்குகிறார். அத்தனை கலகலவென இருந்துவிட்டு அமைதியாகிறார். சல்மானுக்கு இது அடுத்த லெவல் சினிமா. அதிலும் ஹரியானா ஸ்லாங் இந்தியில் அவர் பேசுவது.. ரசிக்க வைக்கிறது.

படத்தில் ஒரு காட்சி. பல வருடங்களுக்குப் பின், சல்மான் பயிற்சி எடுக்கச் செல்வார். ‘இவன் செத்துட்டான். செத்தவனுக்கு டிரெய்னிங்லாம் குடுக்க முடியாது’ என்று ரண்தீப் ஹூடா சொல்லி, ‘ஒரு வாய்ப்பு தர்றேன்.. எங்க ஆள்ல ஒரு ஆளை வீழ்த்திக் காட்டு’ என்பார். கண்ணாடி முன் சட்டையைக் கழட்டுவார். தொப்பையும் தொந்தியுமாக தன்னைப் பார்க்கச் சகிக்காமல் அழுதுகொண்டே சட்டையை மீண்டும் போட்டபடி ரிங்கில் நுழைவார். வாவ் சல்லுபாய்.. லவ் யூ மேன்!


அனுஷ்கா சர்மா - புழுதிக்காட்டு பூ. ஹீரோயினுக்கான க்ளிஷேவை உடைத்து அழுக்கும், அழுத்தமுமாய் பச்சக்கென ஒட்டுகிறார். முதல் பாதியில் சல்மானுக்கு இணையாக ஸ்கோர் செய்யும் அனுஷ்காவை இரண்டாவது பாதியில் கண்டிப்பாய் மிஸ் செய்வோம். கொஞ்சமே கொஞ்ச நேரம் வந்தாலும் முத்திரை பதிக்கிறார் ரண்தீப் ஹூடா.

இயக்குனராய் அலி அப்பாஸுக்கு இது மூன்றாவது படம். சல்மான இமேஜை மனதில் வைத்தே சீனுக்கு சீன் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஹிட் பாடல்கள், கலர்ஃபுல் பிரேம்கள் என பாலிவுட் மசாலா நன்றாகவே கைவருகிறது அவருக்கு. படத்தின் இன்னொரு பெரிய பிளஸ் வசனங்கள். 'நாம தோக்குறதில்ல, எதிரியை ஜெயிக்க வைக்கிறோம்', 'ஜெயிச்சவனை விட தோத்தவனுக்குதான் வெற்றியோட அருமை தெரியும்' என படம் முழுக்க தெறிக்கிறது பளீர் சுளீர் வசனங்கள். அதுவும் ‘நான் ஏன் ரெஸ்ட்லிங்கை தேர்ந்தெடுத்தேன்’ என அனுஷ்கா சல்மானிடம் விளக்கும் காட்சியில் வசனங்கள் மிகச் சிறப்பு. இரண்டாவது பாதியில் டெம்போவை பற்ற வைத்து பி.பி ஏற்றுகின்றன சண்டைக்காட்சிகள். தத்ரூபமாய் விழும் குத்துகள் நம் முகத்தில் அறைகின்றன. ப்ராவோ! டைரூன் வூட்லி போன்ற நிஜ MMA ஃபைட்டர்ஸை சல்மானுக்கெதிராக களமிறக்கி பிரமிக்க வைத்திருக்கிறார்கள். எதிரியை வீழ்த்திவிட்டு, கையெடுத்து அவரைக் கும்பிட்டு ஸாரி கேட்கும்போதெல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறார் சல்மான்.

மல்யுத்தம் பற்றிய சினிமாதான். ஆனால் ஒரே பாடலில் சல்மான் காமன்வெல்த் செல்வதெல்லாம் 'ரஜினி' பார்முலா சாரே! பாடல் முடிந்து ரிலாக்ஸ் ஆவதற்குள் அடுத்த பாடல் என 'பாகவதர்' காலத்து பீல் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஸ்பான்சர்ஷிப் பிடிப்பது, காட்சிக்கு காட்சி கமெண்ட்ரி என்று பலதையும் எடிட் செய்திருந்தால் 30 நிமிடம் மிச்சமாகியிருக்கும். கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பது... ரொ....ம்....ப....வே நீ.....ளம். இடைவேளை வரை ஒரு படமாகவும், இடைவேளைக்குப் பின் வேறு படமாகவும் இருக்கிற திரைக்கதை அலுப்பு.

படத்தின் இரண்டு டெக்னிஷியன்கள் ஸ்பெஷல் பாராட்டு பெறுகிறார்கள். ஒன்று காமராமேன் ஆர்தர் சுராவ்ஸ்கி. இரண்டு பேருக்கு நடக்கும் சண்டையை புகுந்து புகுந்து படமாக்கிய விதம் அருமை. அடுத்து, படத்தின் மல்யுத்த கோச் ஜக்தீஷ் காளிராமன். சல்மானுக்கும், அனுஷ்காவுக்கும் இவர் பயிற்சி கொடுத்ததன் பலன் படம் முழுக்கத் தெரிகிறது.

’ஒரு நிஜமான பயில்வானுக்கு ரிங்குக்குள்ள சண்டை நடக்கறதில்ல.. வாழ்க்கைலதான் சண்டை நடக்குது. வாழ்க்கை அவனை தூக்கிப் போட்டு அமுக்கறப்போ திமிறி எழணும்!” என்ற தத்துவத்தை  கம்பீரமாய் சொன்னதற்காக சுல்தானை ரசிக்கலாம்.No comments :

Post a Comment