ரஜினியை நெகிழவைத்த தாய்லாந்து இளவரசி!

No comments

'கற்றோர்க்கு  சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பார்கள். இப்போது  பள்ளிப் படிப்பையே தாண்டாத  'கபாலி'க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. டெல்லி படப்பிடிப்புக்கு போனால் தங்கியுள்ள ஹோட்டலைச் சுற்றி மக்கள் கூட்டம்.  மலேசியா படப்பிடிப்புக்கு போனால் ரஜினி முகம்பார்க்க மழையில் நனைந்தபடி நிற்கும் ரசிகர்கள் கூட்டம் என்று  ஒரு சாதாரண விவசாயி தோற்றம் கொண்ட மனிதருக்கு இத்தனை மக்கள் செல்வாக்கா? என்று ஆல் இந்தியா அழகு ஹீரோக்களையே அதிர வைக்கிறார், ரஜினி.

அதுசரி ரஜினி நடிப்பைப் பார்த்தால் இவ்வளவு கூட்டம் ரசிகரானது இதற்கு ஒரு ரசிகரே, ' தலைவா நீ திரையில் ஆடியதை பார்த்து உன் ரசிகனாகவில்லை... நிஜத்தில் நீ ஆடாமல் இருப்பதை பார்த்துதான் உன் ரசிகனானேன்' இப்படி பதில் சொல்கிறார்.

'கபாலி' படப்பிடிப்புக்காக ரஜினி சென்றார்.  சினிமா நடிப்பைத் தாண்டி ரஜினியின் ஆன்மீக  ஈடுபாடு குறித்து அறிந்த தாய்லாந்து இளவரசி  ரஜினியை  சந்திக்க விரும்புகிறார். தாய்லாந்து விமான நிலையத்தில் இறங்கியவுடன் விமான நிலையத்தில் தன்னை வரவேற்க தாய்லாந்து இளவரசி  தன் குடும்பத்துடன்  வந்து இருப்பதைக் கண்டு ரஜினிக்கு ஆனந்த அதிர்ச்சி. தனது காரிலேயே ரஜினியை  தன்அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறார். ரஜினியுடன் 'கபாலி' தயாரிப்பாளர் 'கலைப்புலி' தாணுவும் செல்கிறார்.

தாய்லாந்தில் மொத்தம் மூன்று இளவரசிகள் உண்டு.  அதில்  தாய்லாந்து ராஜாங்கத்தின்   மாம் லுயாங் ராஜதரஶ்ரீ ஜெயன்குரா என்கிற இளவரசிதான்  ரஜினியை வரவேற்று அழைத்துச் சென்றவர். உணவு வேளைக்குப் பின் ஆன்மீகம்  குறித்து ரஜினியும் இளவரசியும் நீண்டநேரம் விவாதம் செய்தனர்.  பின்னர் அங்குள்ள  அரண்மனையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான  தியான மண்டபத்தைப் பார்த்து ரஜினி பிரமித்து போகிறார்.(தாய்லாந்தில் ரஜினியின் சிறப்பு வீடியோவிற்கு)

இளவரசியார் குடும்பம் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போகிறார், ரஜினி. தன்னிடம் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மிக தேடல் குறித்த புத்தகங்களை ரஜினிக்கு அன்பளிப்பாகத்  தருகிறார், பதிலுக்கு ரஜினி கொண்டு போயிருந்த 'இமயமலையில் பாபாஜி' புத்தகத்தை 'ஆட்டோகிராஃப்'  போட்டு பரிசாக தருகிறார்.

தாய்லாந்தில் இருக்கும் பாங்காங் ஏர்போர்ட்டுக்கு செல்வது லேசுப்பட்ட காரியமில்லை. வாகன நெரிசலுக்கு பெயர் பெற்ற ஏர்போர்ட்.  'கபாலி' படப்பிடிப்பை முடித்து ரஜினி தமிழகம் திரும்ப தயாரானார். அப்போது  'உங்களை வழியனுப்ப ஏர்போர்ட்டுக்கு வருவேன்' என்று அடம்பிடித்தார். ரஜினி எவ்வளவோ மறுத்தும் கேட்காத இளவரசி ' எங்கள் நாட்டுக்கு வரும் வி.ஐ.பி.யை வரவேற்று அழைத்தால், அவர்களை நாங்களே ஏர்போர்ட் வரை சென்று வழியனுப்புவதுதான்  எங்கள் நாட்டின் பாரம்பரியம்' என்று சொல்ல நெகிழ்ச்சியின்  உச்சத்துக்கே சென்றுள்ளார் ரஜினி.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாங்காங் விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் ஒரு அரசாங்க உயர்பதவியில் இருப்பவருக்கு எப்படி சாலைவிதிகள் தளர்த்தப்படுமோ அதுமாதிரி ரஜினிக்கென்று ஸ்பெஷலாக பாதுகாப்புடன் ஏர்போர்ட் சென்று ரஜினியை கரம் கூப்பி வழியனுப்பியுள்ளார் தாய்லாந்து இளவரசி. 

மலேசியாவில் மலாய் மொழியில் 29-ம்தேதி ரிலீஸாகிறது கபாலி. அடுத்து 'தாய்' மொழியில் டப் செய்யப்படும் 'கபாலி' ஆகஸ்ட் மாதத்தில் தாய்லாந்தில் இருக்கும் 300 ஸ்கிரீன்களில் ரிலீஸாகிறது என்பது கூடுதல் தகவல்.
நன்றி-விகடன்

No comments :

Post a Comment