என்றென்றும் புன்னகை
ஜீ வா, வினய், சந்தானம் மூவரும் பிரண்ட்ஸ். விளம்பர கம்பெனி நடத்துகிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை. காரணம் ஜீவாவின் அம்மா, அப்பாவை விட்டு விட்டு ஓடிப்போக, பெண் இனத்தின் மீதே வெறுப்பு ஜீவாவுக்கு. அதனால் காதல், கல்யாணம் மீது வெறுப்பு. வினய்யும், சந்தானமும், நண்பன் லட்சியத்தை தாங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
திடீரென்று நண்பர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள, தனிமரமாக நிற்கிறார் ஜீவா. இந்த நிலையில் அவர் கம்பெனிக்கு இன்னொரு கம்பெனியின் பிரதிநிதியாக வருகிறார் த்ரிஷா. படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்து செல்கிறார்கள். பனிமலை குளிரில் ஜீவாவின் லட்சியமும் கரைந்து காதலாகிறது.
சென்னை திரும்பும் வழியில் விமான நிலையத்தில் பழைய நண்பன் ஒருவனை சந்திக்க, அவன் ஜீவாவின் பிரம்மசாரியத்தை மெச்ச உடன் வந்த த்ரிஷாவை, சும்மா பிளைட்டில் அறிமுகமானவர் என்று சொல்ல, சுவிஸில் பூத்த காதல் சென்னை ஏர்போர்ட்டில் டமால் ஆகிறது.
அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதி கதை.கதையை காமெடியும், கவிதையுமாகச் சொல்லியிருப்பதன் மூலம் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். நண்பர்கள் திடீர் திருமணம் செய்து கொள்வதற்கான காரணமும், த்ரிஷா&ஜீவா காதல் முறியும் தருணமும் எதிர்பாராத ட்விஸ்ட்டுகள்.
ஜீவாவின் லட்சியத்தை சோதிக்கும் சூப்பர் மாடல் ஆண்ட்ரியாவின் கேரக்டரும், அவரது காது கடியும், இவரது கன்னத்தில் அடியும் சீரியசான கிக் மேட்டர்கள்.
சுவிஸ்சில் ஜீவாவை பழிவாங்க நினைக்கும் ஆண்டரியாவிடம், நீ இன்னும் கிளம்பலையா? என்று கேட்டு அதிர வைக்கும் ஜீவாவின் கேரக்டர் ரொம்பவே ஸ்ட்ராங்.காதலை வெறுப்பதும், அம்மாவின் துரோகத்தை நினைத்து வெதும்புவதும். அப்பாவை தள்ளி வைத்திருப்பதுமான கனமான கேரக்டரை ஈசியாக சுமக்கிறார் ஜீவா. காதலை பற்றி பேசும்போது அவர் முகத்தில் கோபம் வெடிப்பதும், தக்க சமயத்தில் உதவும் த்ரிஷா மீது நன்றி பார்வை வீசி, அதையே காதல் பார்வையாக மாற்றுவதுமாக ஸ்கோர் பண்ணுகிறார்.அறிமுக நடிகைபோலவே பிரஷ்சாக இருக்கிறார் த்ரிஷா.
தலைமுடி பறக்க அவர் நடந்து வரும் அழகே தனிதான்.சந்தானத்தின் காமெடிதான் படத்துக்கு பலம்.
போனில் மனைவியிடம் சாப்பிட என்ன வச்சிருக்க? என்று சந்தானம் கேட்க, பதிலுக்கு மனைவி, ‘ஒரு கிளாஸ் விஷம் வச்சிருக்கேன்’ என்று கோபப்பட, அப்ப நீ சாப்பிட்டுட்டு படுத்துக்கோ. நான் வரலேட்டாகும் என்று இவர் சொல்ல, அள்ளு கிறது தியேட்டர்.
நண்பன் வினய், மகனின் அன்புக்கு ஏங்கும் தந்தை நாசர் இருவருமே சரியான நடிப்பை தந்திருக்கிறார்கள்.எப்போதும் குடி குடி என்று நண்பர்கள் கழிப்பது ஒரு கட்டத்தில் வெறுப்படைய வைக்கிறது. அப்பாவுடன் ஜீவா பேசாமல் இருப்பதற்கான காரணத்தில் அழுத்தம் இல்லை.மதியின் ஒளிப்பதிவு, சுவிட்சர்லாந்தின் அழகை அள்ளி வந்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களில் அவரது முந்தைய படப் பாடல்களின் வாசனை. - தினகரன் விமர்சனக்குழு.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment