ஆரம்பம் ரிலீஸ் தமிழக விமர்சனம்

No comments
அஜீத் – நயன்தாரா ஜோடியாக நடித்த ‘ஆரம்பம்’ படம் நேற்று ரிலீசானது. இதில் ஆர்யா, டாப்சியும் இன்னொரு ஜோடியாக நடித்துள்ளனர். விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். இப்படம் நேற்று அதிகாலை 5 மணிக்கே சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டன. 

சென்னையில் 30–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அஜீத் ரசிகர்கள் நள்ளிரவே தியேட்டர்களில் கூடினார்கள். அஜீத் கட் அவுட்கள் அமைத்து கொடி தோரணங்கள் கட்டினார்கள்

 இது தமிழக விமர்சனம் 

நடிகர் : அஜீத் 
நடிகை : நயன்தாரா 
இயக்குனர் : விஷ்ணுவர்தன் 
இசை : யுவன்சங்கர் ராஜா
 ஓளிப்பதிவு : ஓம்பிரகாஷ் 

முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் கதை. மும்பையில் முக்கியமான மூன்று இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு ஒன்று நடக்கிறது. இந்த குண்டுவெடிப்பை நடத்தியவர் அஜீத். இதேவேளையில் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து முடித்த ஆர்யாவும், டிவி ரிப்போர்ட்டராக வேலை செய்யும் டாப்சியும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர். தன் காதலியை பிரிய முடியாமல் வெளிநாடுகளில் இருந்து வந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு சென்னையிலேயே வேலை செய்து வருகிறார் ஆர்யா. 

மும்பையில் நாசகார வேலைகளுக்கு ஆர்யாவின் சாப்ட்வேர் மூளையை பயன்படுத்திக் கொள்ள அவரைத் திட்டம்போட்டு மும்பைக்கு வரவழைக்கிறார் அஜீத். அங்கு வரும் ஆர்யாவுக்கு அஜீத் ஒரு தீவிரவாதி என்பது தெரியவருகிறது. இதனால் அஜீத்தின் நாசகார வேலைகளுக்கு துணைபோக மறுக்கிறார். ஆனால் அஜீத், ஆர்யாவின் காதலியான தாப்சியை கடத்தி வைத்துக் கொண்டு, அவளை கொலை செய்துவிடுவதாக மிரட்டி அந்த வேலைகளை செய்யவைக்கிறார். 

இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பித்துப் போகவேண்டும் என்று பலமுறை முயற்சிகள் எடுத்தும் தோற்றுப் போகிறார். ஒருகட்டத்தில் அவர்களிடம் இருந்து சாமர்த்தியமாக தப்பிக்கும் ஆர்யா அஜீத்தை போலீசிடம் காட்டிக் கொடுக்கிறார். காவல்துறையிடம் சிக்கிய அஜீத் என்ன ஆனார்? அவர் தீவிரவாதியாக உருவாக என்ன காரணம்? என்பதை ஆர்யாவுக்கு நயன்தாரா பிளாஸ்பேக்குடன் விவரிக்கிறார். படத்தில் ஸ்டைலிஷாக அஜீத் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் என்று சொல்லவேண்டும். 

மங்காத்தா கெட்டப்பில் வந்தாலும், மங்காத்தாவில் அஜீத்திடம் பார்த்த ஸ்டைல் இந்த படத்தில் இல்லை. இவரைவிட, இவர் நண்பராக வரும் ராணா அனைவரையும் ஈர்க்கிறார். முற்பாதியில் சீரியசாக வரும் அஜீத், பிற்பாதியில் களைகட்டுகிறார். பிற்பாதியில் இவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. ராணாவின் தங்கச்சியாக நயன்தாரா வருகிறார். படம் முழுக்க அஜீத் கூடவே வருகிறார். படத்தில் இவருக்கு செமத்தியான கதாபாத்திரம்தான். சாப்ட்வேர் இன்ஜினியராக வருகிறார் ஆர்யா. ‘ராஜாராணி’ படத்தில் நடித்த ஆர்யாவுக்கு எதிர்மறையான கதாபாத்திரம். அதை கச்சிதமாக செய்திருக்கிறார். 

இவருடைய காதலியாக வரும் தாப்சி இந்த படத்தில் கொஞ்சம் அழகாகவே இருக்கிறார். இவர் செய்தி வாசிக்கும் காட்சியைத்தான் ரசிக்க முடியவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகளாக வரும் அதுல் குல்கர்னியும், கிஷோரும் அவ்வப்போது ஒருசில சீன்களில் வந்து தலைகாட்டிக் கொண்டே இருக்கிறார்கள். உள்துறை மந்திரியாக வரும் மகேஷ் மஞ்ச்ரேக்கரின் முகபாவனையும், நடிப்பும் மிரட்ட வைக்கிறது. அஜீத்துக்கு அடுத்தப்படியாக இவருடைய நடிப்பு ரொம்பவே ரசிக்க வைக்கிறது. சுபாவின் திரைக்கதையில் விறுவிறுப்பு இருக்கிறது. 

அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை பின்னணியாக வைத்து படத்தை எடுத்ததற்காக இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு சலாம் போடலாம். பில்லா என்ற பெரிய படத்திற்கு பிறகு அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான படம் என்பதால் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் பரபரப்பான கதைக்களத்துடன் படமாக்கியிருக்கிறார் விஷ்ணுவர்தன். 

அஜீத் ரசிகர்களுக்கு உண்மையிலேயே கொண்டாட்டமான படம்தான் இது. யுவன் இசையில் ‘அடடா ஆரம்பம்’ பாடல் ஆடாதவர்களையும் ஆட்டம் போட வைக்கும். மற்ற பாடல்கள் மனதை ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் யுவன் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் மும்பை மாநகரத்தை இன்னொரு கோணத்தில் படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. மொத்தத்தில் ‘ஆரம்பம்’ அமர்க்களம்.




No comments :

Post a Comment