காதல் கண்ணாமூச்சி - திரைவிமர்சனம்
நாற்பதை நெருங்கும் அண்ணன்கள், கல்யாணமாகாமல் இருக்கும் வீட்டில், நஸ்ரியாவை ரகசிய கல்யாணம் செய்துகொள்கிறார் தம்பி தனுஷ். வீட்டில் ஏற்க மாட்டார்கள் என நினைக்கும் தனுஷ், நஸ்ரியாவை வேலைகாரியாக வீட்டுக்குள் நுழைய விடுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை கலாட்டாவாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
கிராமத்து வெட்டி ஆபீசர் கேரக்டருக்கு கச்சித மாகப் பொருந்துகிறார் தனுஷ். நஸ்ரியாவின் காதலுக்காக மரத்திலிருந்து மரம் தாவுவது திடீரென்று தாலி கட்டிவிட்டு, வீட்டுக்கு எப்படி செல்வது என்று தடுமாறுவது, பின் நஸ்ரியாவை விரட்டி, விரட்டி ரொமான்ஸ் செய்வது என தனுஷ் ஏரியா ஓகே. ஆனால் காமெடி என்கிற பெயரில் சில காட்சிகளில் அவர் செய்யும் சேட்டைகள் எரிச்சல்.
முதலில் வெறுப்பு, பிறகு காதல் என்கிற பார்முலாவில் நஸ்ரியா. தன்னை தனுஷ் பின்தொடர்வது தெரிந்து முறைப்பதும் பிறகு காரணமே இல்லாமல் காதல் வந்து தொலைத்தபின் தவிப்பதும் அழகு. தனுஷின் அண்ணன்களின் லவ் டார்ச்சர்களை எதிர்கொள்ளும்போது சிரிப்பு. பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார். தம்பி மனைவி என்று தெரியாமல் ஸ்ரீமன், நஸ்ரியாவுக்கு நூல் விடுவது, அவள் பெயரைக்கேட்டாலே தொப்பை வயிற்றை எக்குவது, ஒருகாட்சியில் துண்டு அவிழ்ந்து விழுவது என காமெடிமேன் ஆகியிருக்கிறார் ஸ்ரீமன். சத்யனும் தன் பங்குக்கு காமெடி பண்ணுகிறார்.
தனுஷின் நண்பர்களாக வரும் சூரி, சதீஷ், கும்கி அஸ்வின், இமான் அண்ணாச்சி கோஷ்டி சிரிக்க வைக்க பெரும்பாடு படுகிறது. தனுஷை, ‘அவன் பச்ச மண்ணுடா’ என்று சர்ட்டிபிகேட் கொடுக்கும் பிரமிட் நடராஜன், பார்க்கிற பெண்களை எல்லாம், ‘என் பெரிய பையனுக்கு நல்லாயிருப்பாளே’ என்று கேட்கும் மீரா கிருஷ்ணன், மகளுக்காக உருகும் நரேன், வில்லன் வம்சி கிருஷ்ணா ஆகியோர் தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு, கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. ஜிப்ரானின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. திருமணமாகாத பையன்கள், வீட்டில் இருக்கும்போது, இளம் பெண்ணை அவ்வளவு ஈசியாக தங்க வைப்பார்களா? நஸ்ரியாவின் கழுத்தில் இருக்கும் தாலி மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் தனுஷின் அம்மாவுக்கு தெரியாதது எப்படி என்பது உட்பட ஏகப்பட்ட கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. கலகலப்பான காதல் கதையை சுவாரஸ்யமாக சொல்ல நினைத்த இயக்குனர், அதில் பாதி தாண்டியிருக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment