கடலில் தவிக்கும் அகதிகள்
இலங்கையில் யுத்தம் நடந்தபோது அங்கிருந்த தமிழர்கள் கடல் வழியே அகதிகளாக பல நாடுகளுக்குச் சென்றார்கள். அப்படிச் செல்லும்போது, நடுக்கடலில் நடக்கும் சம்பவம் ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அஜெய் இலங்கை தமிழ் இளைஞன். ராணுவத்துக்கும், போராளிகளுக்குமான சண்டையில் இருந்து விலகி இருப்பவன். அகதிகளாக வெளியேறத் துடிக்கும் மக்களை போட் பிடித்து அனுப்பி வைப்பதை சேவையாகச் செய்கிறான். காதலி ஜெனிபரின் மானம் காக்க ராணுவத்தினரை தாக்குவதால் இவனை ராணுவம் தேடுகிறது.
அதனால் அவனே சிலரை அழைத்துக் கொண்டு சிறு படகில் ராமேஸ்வரம் வருகிறான். வரும் வழியில் படகு திசைமாறி செல்கிறது. நடுக்கடலில் தத்தளிக்கும் அவர்களின் வலியையும், மரணத்தையும் உண்மைக்கு நெருக்கமாகச் சொல்கிறது திரைக்கதை. கேரக்டருக்கு சரியாகப் பொருந்துகிறார் அஜெய். அவரது முரட்டு முகமும் தாடியும் அந்த பாத்திரத்துக்கு இயல்பாகவே பொருந்துகிறது. பாவாடை, ஆண்கள் சட்டை என்று அசல் இலங்கை தமிழ் பெண்ணாகவே மாறி இருக்கிறார் ஜெனிபர். அஜெய்யை காதலிக்கும்போது உற்சாகமும், கர்ப்பம் கலைந்து சத்தமே வராமல் கதறும்போது பாராட்டும் நடிப்பையும் தந்திருக்கிறார் ஜெனிபர்.
திகிலூட்டும் கடல் பயணத்தில் கூட சுயநல மனிதன் திருந்துவது, ஒரு குழந்தைக்காக தாயின் போராட்டம், ஓர் இளைஞனின் சாதிக்கத் துடிக்கும் வெறி, பசியின் கொடுமை, காணாமல் போன மகனை பார்க்கத் துடிக்கும் பெற்றோர் என அவர்களின் அன்பை, தவிப்பை, கண்ணீரை யதார்த்தமாக காட்சியாக்கி அந்த பயணத்தில் நம்மையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
கடல் தண்ணீரை குடிக்கும் தாயை ஜெனிபர் தடுக்க, தாகம் தீர்ந்தால்தான் பால்சுரக்கும் என்று சொல்லும் காட்சி கல்நெஞ்சையும் கரைய வைத்து விடும். கடலில் கிடைக்கும் ஒரே இளநீரை குழந்தைக்கு கொடுக்க முயலும்போது, அதை தடுத்து தான் அருந்தும் சுயநலக்காரன் அடுத்த நிமிடமே வருந்தி அந்த குழந்தையிடம் மன்னிப்பு கேட்பது நெகிழ்ச்சி. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.
படத்தின் முன்பகுதியில் வரும் காட்சிகள் இலங்கையின் நிலவரத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் நாடகத்தனமாக கையாளப்பட்டிருக்கிறது. போராளிகளின் தலைவன் பற்றிய காட்சி (அது கனவாகவே இருந்தாலும்) தேவையில்லாத திணிப்பு. கேரக்டர்கள் இலங்கை தமிழ் வழக்கையும் சாதாரண தமிழையும் சேர்த்து பேசுவது படத்தின் யதார்த்தத்தை குறைக்கிறது. மரணத்தை நோக்கிய ஒரு கடல் பயணத்தை சொன்ன வகையில் கவனம் ஈர்க்கிறது படம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment