கல்யாண சமையல் சாதம் - திரைவிமர்சனம்

No comments
லேகாவை பெண் பார்க்கச் செல்லும் பிரசன்னாவுக்கு அவரை பார்த்த உடனேயே பிடித்துவிடுகிறது. நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்துக்கு எட்டு மாதம் இருக்கிறது. அதற்கு முன் ஒரு நாள் பார்ட்டியில் இருவரும் போதையாகிவிட, ஒன்றாக தங்க நேர்கிறது. அங்கு எல்லை மீற நினைக்கிறார் பிரசன்னா. ஆனால், அவருக்கு அது முடியாமல் போகிறது. ஆண்மையில்லையோ என்று சந்தேகப்படும் பிரசன்னா, மூலிகை டாக்டரில் இருந்து லேகியம் விற்பவர் வரை பார்க்கிறார். இந்தப் பிரச்னைக்கு மன அழுத்தம்தான் காரணம் என்ற உண்மையை கண்டறிந்து அடுத்து என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை. கொஞ்சம் தடுமாறினாலும் பலான பட ரேஞ்சாக வாய்ப்பிருக்கும் கதை என்றாலும் நேர்த்தியான திரைக்கதையால் சரியாக்கி இருக்கிறார் இயக்குனர்.

அந்த பிரச்னையில் சிக்கித் தவிக்கும் கேரக்டரில் நடித்த பிரசன்னாவின் துணிச்சலை பாராட்டலாம். நடிப்பிலும், இயல்பான மேனரிசங்களிலும் கவர்கிறார். பார்ட்டி முடிந்ததும் அறையில் தன் வருங்கால மனைவியிடம் தாராளமாக நடந்துகொள்ளும் அவர், எதிர்பாராமல் பிரச்னையில் சிக்கித் தவிப்பது சிரிப்பை வரவழைத்தாலும், கொஞ்சம் சீரியசாகவும் இருக்கிறது.எப்படியாவது தன்னை வீரியமுள்ளவனாகக் காட்ட வேண்டும் என்று, பாலியல் டாக்டர்களிடம் சென்று அல்லாடும் பிரசன்னா, இறுதியில் கிரேசி மோகனிடம் மாட்டிக்கொண்டு தவிப்பது, ரகளை காமெடி. கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார் லேகா. 

தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பிரசன்னாவை முதலில் நண்பனாக்கிக் கொள்ள அவர் நினைப்பது, பிறகு, பிரசன்னாவின் முடியாத நிலையை பார்த்து, டாக்டர்ட்ட காட்டி சரி பண்ணிக்கோ என்று கேஷுவலாகச் சொல்லுவது என மாடர்ன் பெண் ஆகியிருக்கிறார். அவரது அப்பா டெல்லி கணேஷ், பிரசன்னாவின் பிரச்னையை மோப்பம் பிடித்து, தன் சைடிலும் அட்வைஸ் மழை பொழிகிறார். அவரது மனைவியாக வரும் உமா பத்மநாபன், பிரசன்னாவின் அம்மாவாக வரும் கீதா ரவிசங்கர், பாத்திரமறிந்து நடித்திருக்கின்றனர். கிருஷ்ணன் வசந்தின் கேமரா, அரோராவின் இசை படத்துக்கு தேவையான அளவு உதவியிருக்கிறது. 

அடிக்கடி வரும் இரட்டை அர்த்த வசனங்கள், அம்மாவே மகளிடம் வெளிப்படையாக அந்த விஷயத்தை பேசுவது போன்ற காட்சிகளை ஆண்கள் ரசிக்கலாம். ஆனால் கொஞ்சமல்ல, டூ மச்சாகவே இருக்கிறது.  ஒரு காட்சியில் வீல்சேரில் அமர்ந்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி, பிறகு ஜம்மென்று நின்றுகொண்டு பேசுவது எப்படி? திருமணத்துக்கு சில மணி நேரமே இருக்கும்போது, பிரசன்னா ஏதோ ஒரு தீவுக்கு படகில் சென்று திருமணம் செய்து வருவது தேவையில்லாத திருப்பம். சில காட்சிகள் டிராமா மாதிரி இருப்பது அலுப்பு.


No comments :

Post a Comment