விடியும்முன் - திரைவிமர்சனம்,

No comments
வீட்டை விட்டு ஓடிவந்து பாலியல் தொழிலாளியாக மாறிய பூஜாவை, ஒரு வேலை செய்து கொடுக்கும்படி புரோக்கர் அமரேந்திரன் மிரட்டி பணிய வைக்கிறார். அதாவது, பாலியல் உறவுக்கு சிறுமிகளை விரும்பும் ஒரு பெரும்புள்ளிக்கு ஒரு சிறுமியை ஏற்பாடு செய்து கொடுக்கும்படி சொல்கிறார். பூஜாவும் தனது முன்னாள் பாஸ் உதவியுடன் ஒரு சிறுமியை அழைத்து வருகிறார். பிறகு அந்த பெரும்புள்ளியின் பங்களாவுக்கு செல்கிறார்.மறுநாள் அந்த பெரும்புள்ளி படுகொலை செய்யப்படுகிறார்.

 பூஜாவும், சிறுமி மாளவிகாவும் ரயிலில் தப்பித்துச் செல்கின்றனர். கொல்லப்பட்ட பெரும்புள்ளியின் மகன் வினோத் கிஷன், சிறுமியை கொடுத்த பாஸ், புரோக்கர் அமரேந்திரன், உள்ளூர் தாதா ஜான் விஜய் ஆகியோர், அவர்கள் இருவரையும் ஆளுக்கொரு பக்கம் துரத்துகின்றனர். இந்த வேட்டை நாய்களிடம் இருந்து அந்த புள்ளிமான்கள் தப்பித்ததா என்பது கிளைமாக்ஸ்.குழந்தை பாலியல் தொடர்பாக, இவ்வளவு பட்டவர்த்தனமாக இப்படியொரு படம் வந்ததில்லை.

 சில கொடூர மனிதர்களின் இன்னொரு வக்கிர முகத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய வகையில், முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.பாலியல் தொழிலாளியின் உடல்மொழியையும், குரலையும் யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் பூஜா. சிறுமியை பாலியல் தொழிலுக்கு அழைத்துச் செல்லும்போது தவிப்பதும், பிறகு சிறுமியின் எதிர்காலத்துக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்க தயாராவதுமாக, நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார். சிறுமி மாளவிகாவின் நடிப்பு ஆச்சரியப்பட வைக்கிறது. 

 தான் ஒரு பெரும்புள்ளிக்கு விருந்தாக அனுப்பி வைக்கப்படுகிறோம் என்று தெரியாமல், என்னை எங்க கூட்டிகிட்டு போறீங்க, பனியன் மில்லுக்கா? தீப்பெட்டி ஆலைக்கா? என்று அப்பாவித்தனமாக கேட்கும்போது, மனசு பதறுகிறது. தன் குடும்பத்தைப் பற்றி சின்னச்சின்ன வார்த்தைகள் மூலமே புரியவைத்து விடுகிறார்.தன் தந்தையை கொன்றவர்களை பழிவாங்கப் புறப்படும் வேட்டைப்புலி வினோத் கிஷன், பார்வையிலும், மவுனத்திலும் கொடூரத்தை வெளிப்படுத்துகிறார்.

 அமரேந்திரன், ஜான் விஜய் இருவரும் கேரக்டராகவே மாறியிருக்கின்றனர். பூஜாவும், மாளவிகாவும் தப்பித்துச் செல்லும் இடத்தை ரூட்டு போட்டு கண்டுபிடிப்பது அபாரம். லட்சுமி ராமகிருஷ்ணனின் பதற்றமும் மனதில் பதிகிறது. கிரைம் திரில்லர் கதைக்கு ஒளிப்பதிவு எந்தளவு முக்கியம் என்பதற்கு சிவகுமார் விஜயனின் கேமரா சாட்சியாக இருக்கிறது. கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை, பலம்.

 பூஜா, மாளவிகா இருவரையும் வில்லன் கூட்டம் நெருங்கிவிடக் கூடாது என்ற பதட்டத்தை, படம் முழுவதும் ஏற்படுத்தி இருப்பது திரைக்கதையின் பலம்.பெரும்புள்ளி வீட்டில் என்ன நடந்தது என்பதை இன்னும் விவரமாக சொல்லியிருக்கலாம். இறுதியில் வினோத் கிஷனின் திடீர் மாற்றத்துக்கு காரணமான பிளாஷ்பேக்கிலும் குழப்பம் ஏற்படுகிறது. அத்தனை குற்றச்செயல்கள் நடக்கும்போது, ஒரு போலீஸ் கூட வராததில் லாஜிக் இடிக்கிறது

No comments :

Post a Comment