அப்பா படம் விமர்சனம்

No comments
‘சின்னஞ்சிறு ஆத்மாவுக்கும் கனவுகள் இருக்கும். உங்க கனவை அதன் மேல் திணிக்காதீங்க’ என்பதுதான் படம் அழுத்தமாகச் சொல்லும் கரு.
மகன்/மகள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் பிரச்சனையைப் பெற்றோர்கள் காது கொடுக்கக் கேட்க வேண்டிய அவசியத்தையும் படம் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்துகிறது. இல்லையெனில், மேலும் பல வினுப்ரியாக்களை சமூகம் இழக்கக்கூடும். அப்பா – மிகவும் அவசியமான காலத்தில் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளின் மீது வீசிய சாட்டையை, அதனினும் வலுவாகத் தனியார் பள்ளிகளின் மீது வீசியுள்ளார் தயாளன்.

ஒரு லட்சிய தந்தைக்கு எடுத்துக்காட்டாக தயாளன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள சமுத்திரக்கனி. “நாம் இணைந்து நம் மகனை உயர்த்துவோம்” எனக் குழந்தையின் தொப்புள் கொடி மேல் எல்லாம் சபதம் எடுத்துக் கொஞ்சம் கிலியைக் கிளப்புகிறார். பார்வையாளர்களுக்குப் பாடமெடுத்துப் புத்தி புகட்டுவது, நன்னெறியை எடுத்தியம்புவது என்ற அவரது அக்கறை உடல் மொழியிலும், வசன உச்சரிப்பிலும் துருத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால், சில பாடங்களை இப்படி நேரடியாகச் சொன்னால்தான், சிலரையேணும் அது போய்ச் சேரும். பெற்றோர்களின் மனதில் எங்குப் பதியாமல் போய் விடுமோ என, சசிகுமாரை வைத்தும் ஒருமுறை ரிவிஷன் செய்து விடுகிறார் சமுத்திரக்கனி.

‘சின்னஞ்சிறு ஆத்மாவுக்கும் கனவுகள் இருக்கும். உங்க கனவை அதன் மேல் திணிக்காதீங்க’ என்பதுதான் படம் அழுத்தமாகச் சொல்லும் கரு.

பெரிய காக்கா முட்டை விக்னேஷ் சமுத்திரக்கனியின் மகனாக வெற்றீஸ்வரன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மனிதர்கள் மீது நம்பிக்கை வை; மனிதர்களை நேசி’ எனச் சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் வெற்றீஸ்வரன், நீண்ட நாள் கழித்துப் பேசும் தன் உறவினர்களிடம் எடுத்தெறிந்து பேசுகிறான். ‘உறவினர்களை ஒதுக்கி வை’ என சமுத்திரக்கனியும் தன் நண்பனிடம் சொல்வார் (போராளி படத்திலும் இத்தகைய வசனம் வரும்). உறவினர்களை மட்டும் மனிதர்களாகப் பாவிக்க வேண்டாம் போல்.

பசங்க ஒன்று கூடும் இடமாகக் காட்டப்படும் சமுத்திரக்கனியின் வீட்டுத் தோட்டத்தில், மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் நூலகமும், அமர்ந்து பேச அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகளும் கலை இயக்குநர் ஜாக்கியின் கைவண்ணத்தில் பிரமாதமாய் உள்ளன. பதின்மத்தில் இருக்கும் வெற்றீஸ்வரனுக்கு, சஹிரா பானுவிடம் பேச வேண்டுமென்ற ஆவலெழும். ஆனால், அவன் உள்ளமும் கால்களும் பதற்றமுறும். அதை அவன் தந்தையிடம் சொல்வான். சமுத்திரக்கனி அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து மகனிடம் பேச வைப்பார். இது வரை கவித்துவமாகப் போகும் அந்தக் காட்சி முடிந்ததும், சமுத்திரக்கனி தன் மகனிடம், “மனதில் சேரும் அழுக்குகளை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு மனதை ஃப்ரீயா வச்சுக்கணும். இல்லைன்னா முகத்தில் ஆசிட் வீசணும்னு தோணும்” எனச் சொல்வார். படத்தில் இப்படி யதார்த்தம் வழுவி பிரச்சாரம் தூக்கலாகும் கணங்கள் அதிகம். இதை பிரச்சாரம் என்று கூட சொல்ல இயலாது. பதின்மத்தில் ஏற்படும் குறுகுறுப்பை வெளிக்காட்ட இயலாமல் அப்பருவத்தினர் தவிப்பது இயல்பே! அதிலிருந்து மீள, தோளில் கை போட்டு மீள வழிகாட்டுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையே! ஆனால், அவ்வியல்பான விஷயத்தை ஏதோ கொலைக்குற்றம் போல் ஒரு கற்பிதத்தை உருவாக்கிப் பயமுறுத்தும் தொனியில் யோசனை சொல்வதெல்லாம் ஓவர்.

சஹிரா பானுவாக கேப்ரியலா நடித்துள்ளார். “இவன் தான் அங்கிள் பேசவே மாட்டேங்கிறான்” எனச் சொல்லும் பொழுது முகத்தில் தெரியும் குழந்தைத்தனம் அற்புதமாக உள்ளது. படத்தைக் கலகலப்பாக்கி இருப்பது மயில்வாகனமாக நடித்திருக்கும் நசாத். நகரத்துக்குக் கிராமத்துக்கான வேறுபாடென்ன என்ற கேள்விக்கு, ‘மனிதனை நாய் பாதுகாத்தால் அது கிராமம்; நாயை மனிதன் பாதுகாத்தால் அது நகரம்’ என்றெழுதி பரீட்சையில் முட்டை (சுழியம் மதிப்பெண்) வாங்குகிறான் மயில்வாகனம். அவனது விடையைப் பார்த்து அதிசியப்படும், அவனது பரீட்சைத் தாள்கள் அனைத்தையும் வாங்கி, சுழியத்திலிருந்து “எது உயரம்?” என்ற கவிதைத் தொகுப்பைத் தொகுத்து வெளியிட உதவுகிறார். மயில்வாகனம், பத்தாவதில் தேற மாட்டானென ஆசிரியரால் பள்ளியை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் மாணவன். காரணம், அவனது தந்தையான நடுநிலையான் தனது தாழ்வு மனப்பான்மையையும் பயத்தையும் மயில்வாகனத்திற்குப் புகுத்தி விடுவதே! நடுநிலையானாக சமுத்திரக்கனியின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான நமோ நாராயண் நடித்துள்ளார் (சமூக வலைத்தளங்களில் நடுநிலையாளர்கள் எனப் பரவலாகக் கலாய்க்கப்படுபவர்கள் பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதன் குறியீடோ என்னவோ?)

இளையராஜாவிற்கு, ‘இசையின் அப்பா’ என்று படத்தின் தலைப்போடு பொருந்துமாறு அடைமொழி கொடுத்துள்ளார் சமுத்திரக்கனி. அம்மா கணக்கு படத்தில் கலக்கிய யுவஸ்ரீ, இப்படத்தில் தான் நீலநந்தினி எனும் பாத்திரத்தில் யுவலட்சுமியாக அறிமுகம் ஆகியுள்ளார். அம்மாவின் கணக்கோ அப்பாவை முந்திவிட்டது. ஆனால், 4 பேர் புழங்கும் சமூகத்தைப் பார்த்து வெற்றீஸ்வரனின் அம்மா போடும் கணக்கெல்லாம் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளும் கதையெனத் தெளிவாக இடித்துரைத்துள்ளார் சமுத்திரக்கனி. வீட்டுக்குள் நுழையும் விளம்பரங்கள், மனிதனைப் பகட்டை நோக்கி எப்படித் தள்ளுகின்றன என அருமையாகக் காட்டியுள்ளார். அதை எதிர்கொள்ள திணறும் சமுத்திரக்கனியின் இயலாமையும் யதார்த்தத்தின் உச்சம்.

மகனையோ/மகளையோ இஷ்டப்படி விளையாட விட வேண்டும், மனிதர்களை நேசிக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டும், படிப்பைப் பெருஞ்சுமையாக்கித் தலையில் ஏற்றக் கூடாதென முதற்பாகத்திலேயே சொல்ல வேண்டிய அனைத்தையும் வரிசை கிரமமாகச் சொல்லி முடித்து விடுகிறார். அப்படியில்லாவிட்டால், என்ன விபரீதங்கள் நிகழுமென விறுவிறுப்புடன் செல்லும் இரண்டாம் பாதி மனதைக் கவ்வுகிறது. கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படமாய் முடிகிறது.

இப்படம், மூன்று வகை பெற்றோர்களுக்கும், அவர்களது மகன்களுக்கும், மகன்களின் தோழிகளுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களாக நீள்கிறது. நம்பிக்கையை வளர்க்கும் ரோல் மாடல் தந்தை சமுத்திரக்கனி, தாழ்வு மனப்பான்மையைக் கடத்தும் தந்தை நமோ நாராயண்; தன் கனவைத் திணித்து மதிப்பெண்கள் மட்டுமே வாழ்வின் குறியென நம்பும் தந்தை சிங்கபெருமாளாக தம்பி ராமைய்யா. அவரது அதீத நடிப்பையும் மீறி, படத்தின் முடிவில் மனதில் நிற்கும் கதாபாத்திரமாக உள்ளார். மூன்று குடும்பத்திலுமே, கணவன் மட்டுமே வேலைக்குச் சென்று மனைவிமார்கள் வீட்டின் பொறுப்பை நிர்வகிப்பவராக இருக்கின்றனர். கதைக்களமும் நெய்வேலியில் நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் பெருநகரத்தினருக்கு இப்படம் சற்றே அந்நியமாகத் தெரியலாம்.

எனினும், மகன்/மகள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் பிரச்சனையைப் பெற்றோர்கள் காது கொடுக்கக் கேட்க வேண்டிய அவசியத்தையும் படம் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்துகிறது. இல்லையெனில், மேலும் பல வினுப்ரியாக்களை சமூகம் இழக்கக்கூடும். அப்பா – மிகவும் அவசியமான காலத்தில் வெளியாகியுள்ளது.


No comments :

Post a Comment