இரண்டாம் உலகம்- திரைவிமர்சனம்

No comments
கற்பனைகளுக்கு எல்லையில்லை. வரைமுறையில்லை. அது வானம் தாண்டி வாய்க்கால் வெட்டும் வசிய கருவி. அப்படியொரு கற்பனையில் எல்லோருக்குள்ளும் இருக்கிறது ஓர் உலகம். அதில் வழக்கமாக பார்த்திராத வண்ணப்பூக்களும் யாரும் கண்டிராத புது வாழ்க்கையும் அழகாக நகர்ந்துகொண்டிருக்கிறது. அது போலான ஒரு காதல் உலகத்தை, கிராபிக்ஸ் மாவு கொண்டு பிசைந்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

முதல் உலகத்தில், ஆர்யாவை வலிய காதலிக்கிறார் வசீகர அனுஷ்கா. மறுக்கிறார் ஆர்யா. பிறகு பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு அனுஷ்கா ஓகே சொல்ல, அவர் மீது காதல் வருகிறது ஆர்யாவுக்கு. தன் காதலை சொல்லும்போது, இப்போது நோ என்கிறார் அனுஷ்கா. பிறகு தேடி தேடி விரட்ட, காதலில் விழும் அனுஷ்கா, ஓர் அதிகாலையில் அதிரடியாகச் செத்துப் போகிறார்.

இரண்டாம் உலகத்தில், மன்னர் ராஜ்ஜியம். ஆண்களுக்கு இணையாக வாள் சண்டை போடுகிறார் அனுஷ்கா. காதல் இல்லாத அந்த உலகத்தில் ஆர்யா, அனுஷ்காவை விரும்ப, அவர் வெறுக்கிறார். கட்டாய திருமணம் நடக்கிறது. தன் சுதந்திரத்தை பறித்துவிட்டதாக கருதும் அனுஷ்கா, தற்கொலைக்கு முயல்கிறார். பிறகு காட்டுக்குள் வசிக்கிறார். ராஜாவின் சொல்லை மீறியதால் அவர் ஊருக்குள் நுழைய தடை. இந்த உலகத்துக்குள் மயங்கிய நிலையில் வருகிறார், முதல் உலக ஆர்யா. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படம்.படத்தின் பெரிய பிளஸ், விஷுவல்ஸ். ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உழைப்பு இரண்டு உலகத்திலும் விரவி கிடக்கிறது. 

ஒவ்வொரு ஷாட்டும் வண்ணங்களும் கண்ணுக்குள் கர்சிப் போட்டு உட்கார்ந்துகொள்கின்றன. ஆனால், அந்த உழைப்பை, அவரசமாகக் காலி செய்கிறது வித்தியாசமில்லாத கதையும் விறுவிறுப்பில்லாத திரைக்கதையும்.முதல் உலகத்தில் சாந்தம், இரண்டாம் உலகத்தில் ஆக்ஷன் என ஏஞ்சலாக வந்து போகிறார் அனுஷ்கா. ஆர்யாவிடம் காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும் பிறகு அவர் தோழிகள் ஆர்யாவிடம் மிரட்டுவதும் செல்வா பிராண்ட் காட்சிகள்.கண்ணாடி டாக்டர், கட்டுமஸ்தான ஆள் என இரண்டு கேரக்டரில் ஆர்யா பிரமாதம். 

அனுஷ்காவின் காதலை மறுத்துவிட்டு பிறகு அவரைத் தேடித்தேடி அலைவது, நாட்டு நடப்பு தெரியாம இருக்கியேடா? ஒரு மாசமாச்சா, அப்ப இந்நேரம் வேற எவனையாவது பிக்கப் பண்ணியிருப்பாடா என்பது போல நண்பன் வெங்கடேஷ் ஹரிநாதன் சொல்லும் ஆலோசனைகளால் அல்லாடும்போதும் வயதான புரொபசரிடம், ஐயோ நான் உங்களைதான் காதலிக்கிறேன்’ என்று தடாலடியாக தாக்கும்போதும் ரசிக்க வைக்கிறார்.ஊரே அம்மா என்று கொண்டாடும் அந்த வெள்ளைக்கார இளம் பெண், நம்மூர் கோடங்கி மாதிரி எதிர்கால புதிர் போட்டுக்கொண்டே இருக்கிறார். அவரை கடத்திப் போக இன்னொரு ஊரில் இருந்து வீரர்கள் வருகிறார்கள் என்று கதையில் என்னென்னமோ நடக்கிறது.

ஆனால் ஆங்காங்கே தெறித்து விழும் சின்ன சின்ன வசனங்களைத் தவிர, படத்தின் காதல் காட்சிகள் கூட நம்மோடு ஒன்ற மறுக்கின்றன. இருந்தாலும் அழகழகான அந்த லொகேஷன்கள் அசத்தல் ஆர்யா அப்பாவாக வரும் அசோக் குமார், கடவுளாக வரும் டினா, அனுஷ்காவின் அந்த தோழி அனைவரும் சிறப்பான தேர்வு.ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் தாலாட்டுகின்றன. அனிருத், சில ஆங்கில படங்களின் பின்னணி இசையை அச்சடித்திருக்கிறார்.ஹாலிவுட்டுக்கு இணையாக, ஒரு படத்தை உருவாக்க நினைத்த இயக்குனர் செல்வராகவனின் ஃபேன்டசி முயற்சிக்கு வாழ்த்துகள். ஆனால், இன்னொரு உலகத்துக்குள்ளும் சாதாரண காதலை சடுகுடு ஆட விட்டிருப்பதும் அந்த காதல், பார்வையாளனுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதும் மைனஸ்

No comments :

Post a Comment