மீண்டும் சூப்பர் ஹீரோக்கள்
அதேதான். எதன் காரணமாக ஹாலிவுட் திரைப்படங்கள் பிரபஞ்சம் எங்கும் தன் நெட் ஒர்க்கை விரிவுபடுத்தியதோ, எதை மையமாக வைத்து கல்லாவை நிரப்பியதோஅந்த காலம் மீண்டும் திரும்பியிருக்கிறது. யெஸ், சூப்பர் ஹீரோக்கள்தான் இந்த ஆண்டும் ஹாலிவுட் வசூலை பால் வெளியைத் தாண்டி உயர்த்தி இருக்கிறார்கள்.
வரலாறு திரும்பி இருக்கிறது. ஆனால், லேசான மாறுதலுடன். முந்தைய சூப்பர் ஹீரோ படம் போல் இன்று ஹீரோயிச படங்கள் எடுக்கப் படுவதில்லை. கதைகளிலும், காட்சிகளிலும், ஆக்ஷனிலும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சூப்பர் ஹீரோவுக்கும் மனது உண்டு. அவனும் குற்ற உணர்ச்சியால் தவிப்பான். இயலாமையால் தத்தளிப்பான். அவ்வளவு ஏன் வில்லனிடம் தோற்கவும் செய்வான்... என்ற எதார்த்தத்தை அடிநாதமாக சூப்பர் ஹீரோ சப்ஜெக்டுக்குள் நுழைத்து இருக்கிறார்கள்.
வெற்றிப் பெற்ற அயர்ன் மேன் 3, தோர்: த டார்க் வோல்ட், மேன் ஆஃப் ஸ்டீல் ஆகியப் படங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன. வேறு வழியில்லை. இதற்கு மேல் யாரைத்தான் சூப்பர் ஹீரோக்கள் எதிர்ப்பார்கள்? கம்யூனிச நாடுகள் இன்று அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இல்லை. ஓசாமா பின்லேடன் மறைந்த இடத்தில் புல் முளைத்துவிட்டது. சதாம் ஹுசேன் ஈராக் மக்களின் நினைவுகளில் கூட இல்லை. ஊதிப் பெருக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொற்றொடரும் பல்லிளித்துவிட்டது. அனைத்துக்கும் மேல் அமெரிக்க பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு வீழ்ந்துவிட்டது. இந்நிலையில் நரம்பு புடைக்க, முஷ்டியை மடக்கி யாரை நோக்கி கர்ஜிப்பது?
பெட்டிப் பாம்பாக அடங்கி விஞ்ஞானிகளையும், நிதிமூலதன நிறுவனங்களையும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தவிர, இப்போது ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களும் வெறும் அமெரிக்காவை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படுவதில்லை. ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, ஐரோப்பா... என பிராந்திய மார்க்கெட்டை மனதில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஸோ, கதையின் தன்மைகளும், காட்சிகளின் உருவாக்கவும் அதற்கு ஏற்பவே அமைக்கப்படுகின்றன. இந்த உண்மைகளைத்தான் இந்த ஆண்டு வெளியான வெற்றிப் பெற்ற மண்ணைக் கவ்விய அனைத்து ஹாலிவுட் படங்களும் வெளிச்சமிட்டு காட்டி இருக்கின்றன. இந்த மாற்றம் நல்லதா கெட்டதா என்பதை
இப்போது சொல்ல முடியாது. காலம்தான் அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால், மெல்ல மெல்ல மாற்றம் நிகழ்ந்து வருவது மட்டும் நிஜம்.
அதே போல் பல நாவல்கள் இந்த ஆண்டும் திரை வடிவம் கண்டிருக்கின்றன. ஆனால், இரண்டே இரண்டு மட்டும்தான் பட்டையை கிளப்பி இருக்கின்றன. அவை, த ஹங்கர் கேம்ஸ்: கேட்சிங் ஃபயர். ஹங்கர் கேம்ஸ் டிரையாலஜி நாவல்களின் இரண்டாம் பாகம் இது. முந்தைய முதல் பார்ட் போலவே இந்த இரண்டாவதும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. போலவே வோல்ட் வார் இசட் நாவலும் அதே பெயரில் வெளியாகி கல்லாவை டாலர்களால் நிரப்பியிருக்கின்றன.
இந்த இரு நாவல்களுமே பசி, பஞ்சம் அதற்காக நடக்கும் வன்முறை போராட்டம், செல்வந்தர்களின் வக்கிரம்... ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. கிட்டத்தட்ட இன்றைய உலக மக்கள் எதிர்கொள்ளும் இருத்தலியல் சிக்கல் இவைகள்தான். எனவே அந்த உணர்வுகளுக்கு இந்த இரு படங்களும் தீனி போட்டன.
போலவே முந்தைய வருடங்கள் போல் இந்த வருடமும் அனிமேஷன் படங்கள் கோதாவில் இறங்கி அனைவரையும் மிரட்டியிருக்கின்றன. டிஸ்பிகபுள் மீ 2, மான்ஸ்ட்ரஸ் யூனிவர்சிட்டி, த க்ரூட்ஸ் ஆகிய மூன்று படங்களும் பம்பர் ஹிட் ஆகியிருப்பது நல்ல விஷயம். பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கும், குழந்தைகளுக்குள் இருக்கும் குதூகலத்துக்கும் தீனி தேவை. அதை இந்த மூன்றுப் படங்களும் பூர்த்தி செய்திருக்கின்றன.
பல ஆக்ஷன் படங்கள் ரிலீசாகி இருந்தாலும் ஒன்றே ஒன்றுதான் சக்சஸ். அது, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6. ஆனால், முழுக்க முழுக்க வெர்சுவல் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட கிராவிட்டி அனைவரையும் நடுங்க வைக்கும் அளவுக்கு வசூலில் மிரட்டியிருக்கிறது. ஒருவகையில் இது ஆரோக்கியமான விஷயம். ஏனெனில் இனி வரும் காலங்களில் பலப் படங்கள் வெர்சுவல் ஸ்டூடியோக்களில்தான் தயாராகப் போகின்றன. அதற்கான அஸ்திவாரத்தை இந்தப் படம் போட்டிருக்கிறது.
மண்ணைக் கவ்விய படங்களுக்கும் குறைச்சலில்லை. குறிப்பாக மெகா பட்ஜெட்டில் தயாராகி, ஆர்ப்பாட்டத்துடன் வெளியான த ஃபிஃப்த் எஸ்டேட், புல்லட் டூ த ஹெட், பார்க்கர், ப்ரோக்கன் சிட்டி, பேட்டில் ஆஃப் த இயர், கெட்டவே, ஆர்.ஐ.பி.டி., த பிக் வெட்டிங், த லோன்
ரேன்ஜர், ஜாக் த ஜெயின்ட் ஸ்லேயர் ஆகியவை இந்தப் பட்டியலில் இணைந்திருக்கும் வைரங்களாக கருதப்பட்ட கண்ணாடி துகள்கள்.
ஆண்டு இறுதியில் வெளிவரவிருக்கும் ஹாபிட் இரண்டாம் பாகம், ஃப்ரோசன் உள்ளிட்ட படங்கள் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மொத்தத்தில் கதைத் தன்மையில் கொஞ்சூண்டு எதார்த்தத்துக்கு ஹாலிவுட் மாறி இருக்கிறது. இதுதான் 2013 ஹாலிவுட்டின் நிலைமை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment