விழா - திரைவிமர்சனம்
சுந்தரம் சாவு வீட்டில் பறையடிப்பவன். ராக்கம்மா ஒப்பாரி பாடுகிறவள். சாவு வீடுகளில் தொழில் நிமித்தமாகச் சந்தித்துக் கொள்ளும் இவர்களுக்குள் மலர்கிறது காதல். மற்றவர்களுக்குத் துயரத்தை கொடுக்கும் இறுதி சடங்குகள் இவர்களுக்கு மங்கல நிகழ்ச்சியாகிறது. காதல் கனிந்து வரும் நேரத்தில், அந்த காதலுக்கு ஊர் பெரிய வீட்டு பெண்ணின் ஈகோ ஒன்று வில்லனாக வருகிறது. இறுதியில் காதல் எப்படி வெல்கிறது என்பது மீதிக் கதை.கதையும், காதலும் பழசுதான் என்றாலும் சொல்லியிருக்கும் விதமும், சொல்லப்பட்டிருக்கும் களமும் புதிதாக இருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மாஸ்டர் மகேந்திரன் இதில் கதையின் நாயகனாக புரமோஷனாகியிருக்கிறார்.
பறையடித்து பிழைக்கும் எளிய மனிதனை அப்படியே பிரதிபலிக்கிறார். அழுக்கு லுங்கி, சட்டை, அரிதாரம் பூசாத முகம் இவற்றின் மூலமே காதலை சுலபமாக கொண்டு வருகிறார். காதலித்தவளை யுகேந்திரனுக்கு பேசி முடித்த பிறகு அதைத் தட்டிக் கேட்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் தவித்து தன் பறையொலி மூலமே அதை வெளிப்படுத்துவது அற்புதமான நடிப்பு.
ராக்கம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா நம்பிக்கையான வரவு. அவருக்கு பெரிதாக வேலை இல்லை. புருவம் சுருக்கி, கண்களை இறுக்கி அவர் காதலை வெளிப்படுத்துவது அழகு.
பேச்சில் குரூரத்தையும், வார்த்தையில் வஞ்சத்தையும் வைத்திருக்கும் பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி கிராமத்து சொர்ணாக்காவாக பின்னியெடுக்கிறார். பொசுக்கென்ற அவர் மரணம் கூட தியேட்டரில் சிரிப்பை கொண்டு வருகிறதென்றால் அவர் நடிப்பு அப்படி. வில்லன்போல வந்து கடைசியில் ஒரு மனிதனாக நடந்து கொள்கிற யுகேந்திரன் கேரக்டர் யதார்த்தம்
.சீரியசான விஷங்களையும்கூட காமெடியாகச் சொல்லியிருப்பது பிரச்னையின் தீவிரத்தை குறைக்கிறது. தன்னை உயர்ஜாதியாக கருதிக் கொள்கிற வில்லி, தன் மகன் தாழ்ந்த ஜாதி பெண்ணை காதலிப்பதை இவ்வளவு மென்மையாகவா கையாள்வார்?
சுந்தரம் மீது வில்லி அத்தனை கோபம் கொள்வதற்கு போதிய காரணம் இல்லை.
அதேபோல சுந்தரம் மீது ராக்கம்மா காதல் கொள்ள வைக்கிற அளவிற்கான அழுத்தமான காட்சிகள் இல்லை.ஜேம்ஸ் வசந்தனின் இசையில் மண்ணின் மணம். யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு நேர்மையாக அமைந்திருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment