குண்டு சட்டிக்குள் தொடரும் சாதனை...

No comments

அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகச் சின்ன ஏரியா. மல்டி ப்ளக்ஸில் பெரும்பாலும் இந்தி, தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் படங்களே ஆக்ரமிக்கின்றன. எனவே சிங்கிள் ஸ்கிரீனில், குறிப்பாக பி, சி சென்டர்களை மட்டுமே நம்பி கன்னடப் படங்கள் தயாராகின்றன. எனவே இருக்கும் பட்ஜெட்டில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நவீனமாக படம் எடுக்க இப்போது கன்னட திரையுலகம் கற்றிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக நடைபோட்டு வரும் இந்தப் பாதையில்தான் இந்த வருடமும் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறப் போகிறது.

பிள்ளையார் சுழி, வழக்கம்போல் சுதீப். ஸ்டைல், மேக்கிங், ஆக்ஷன், மசாலா, நடிப்பு என தனது பிராண்டை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 2014ல் நம்ம கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அதையே தொடரவும் போகிறார். ஏற்கனவே கிச்சா சுதீப்புக்கு அங்கு எவரெஸ்ட் உயர மார்க்கெட் உண்டு. இப்போது கமர்ஷியல் கிங் கே.எஸ்.ரவிக்குமாருடன் கைகோர்த்திருப்பதால் எதிர்பார்ப்பு செவ்வாய் கிரகம் வரை சென்றிருக்கிறது.

இதற்கு ஈடு கொடுக்க புனித் ராஜ்குமாரும் தயாராகிவிட்டார். ராஜ்குமார் குடும்பத்து கடைசி வாரிசான இவர், தன் குடும்ப பாரம்பரியம் கொண்ட படங்களில் நடித்தபடியே பரிசோதனை முயற்சிகளிலும் இறங்கக் கூடியவர். ரசிகர்களை திருப்திப்படுத்தும் அதே நேரம், தனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் நடிகனுக்கும் தீனி போடும் வித்தை அறிந்தவர். அதனாலேயே தெலுங்கு தூகுடு ரீமேக் ஆன ராஜ்குமார் மற்றும் ரானா விக்ரமா ஆகிய இரு படங்களுக்காகவும் மாநிலமே வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறது.

இந்தப் போட்டியில் ஷிவ்ராஜ்குமாரும் தன் பங்குக்கு ஆர்யன், மனமோஹகா ஆகியப் படங்களை கொடுக்கப் போகிறார். கடந்த வருட இறுதியில் வெளியான இவரது பஜரங்கி வசூலில் இன்றும் பின்னிபெடல் எடுத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

என் வழி தனி வழி என்று அதகளம் செய்யும் உபேந்திரா, ஓம் 2, பிரம்மா, பாசுவனா ஆகியப் படங்களை கொடுக்கப் போகிறார். துனியா விஜய் கோப்ராவாக சீறப் போகிறார். கோல்டன் ஸ்டார் கணேஷ் ஷ்ரவானி சுப்ரமண்யா, தில் ரங்கீலா என வசீகரிக்கப் போகிறார். அரிவட்டா, அஸ்போட்டா என தர்ஷன் குதிக்கப் போகிறார்.

மொத்தத்தில் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக சுதீப் தலைமையில் இளம் நடிகர்கள் களம் இறங்கப் போகிறார்கள். இதற்கு மாற்றாக குடும்ப நடிகர்கள் தொடை தட்டப் போகிறார்கள். 2000க்கு பிறகு ஆண்டுதோறும் என்ன நடக்கிறதோ அதுவேதான் 2014லும் தொடரப் போகிறது. ப்ரியா மணி சலித்துவிட்ட நிலையில் தமிழ் - தெலுங்கில் விஆர்எஸ் வாங்கும் நிலையில் இருக்கும் நடிகைகளை கன்னட திரையுலகுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்கப் போகிறார்கள்.

இதிலெல்லாம் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஆனால், அதையும் மீறி தங்கள் திரையுலகை காப்பாற்றவும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் அனைவருமே முயலப் போகிறார்கள் பாருங்கள்...

அது முக்கியம். அதுதான் கன்னட திரையுலகைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசவும் காரணம். பலவீனங்களைத் தாண்டி பலம் பெற முயல்பவர்களை வாழ்த்துவதுதானே மரபு.
  

No comments :

Post a Comment