மீண்டும் இணையும் ’முள்ளும் மலரும்’ மகேந்திரன் - இளையராஜா!

No comments
முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ ‘மெட்டி’ என நம் மனதிலிருந்து நீங்காத பல தரமான படங்களை தந்தவர் இயக்குனர் மகேந்திரன். கடைசியாக அவர் சாசனம் என்ற படத்தோடு படம் இயக்குவதை நிறுத்திக் கொண்டார். தவறு… இந்த கமர்ஷியல் சினிமா உலகம் அவரை நிறுத்திவிட்டது. தற்போது பழைய உற்சாகத்துடன் புது புராஜெக்ட் ஒன்றை அவர் தொடங்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். 
இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டதால்தான் படமே துவங்க முடிவு செய்துள்ளேன் என்று கூறுகிறார் மகேந்திரன். புதிய ஒரு கதைக்களத்துடன் புது முகங்களை வைத்து இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.லோகநாதனின் மகன் பி.சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பொறுப்பை காசி விஸ்வநாதன் ஏற்றிருக்கிறார். 
மூவேந்தர் மூவீஸ் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் (மார்ச்) முதல் வார்த்தில் துவங்கி, மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குனர் மகேந்திரன். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பாடல் கம்போசிங் வேலைகளை இந்த மாத கடைசியில் துவங்கவிருக்கிறார்கள். 
1980-களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்த கூட்டணி மகேந்திரன் - இளையராஜா. தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைவது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments :

Post a Comment