ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்று சினிமாவுக்கு வந்த நெடுஞ்சாலை நாயகன் ஆரி

No comments
முன்பெல்லாம் நாடகங்களில் நடித்து நடிப்பு பயிற்சி பெற்ற பிறகே திரைப்படங்களில் நடிக்க வருவார்கள். எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் சினிமாவுக்கு வந்தது அப்படித்தான். இன்றைக்கு காலம் மாறிப்போச்சு. யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம் என்ற நிலை. ஆனாலும், நாடகங்களில் நடித்து முறையாக ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்று சினிமாவுக்கு வந்துள்ளார் நெடுஞ்சாலை படதத்தின் நாயகனான ஆரி. மேஜிக் லாந்தர்ன், தியேட்டர் நிஷா மற்றும் இன்லேன்ட் தியேட்டர்ஸ் போன்ற நாடகக் குழுக்களில் நடித்த இவர், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கத்தில் 2010-ல் ரெட்டைச் சுழி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். 
இந்திய சினிமாவின் சிகரங்களான பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவுடன் நடித்த பெருமைக்குரியவர். பிரகாஷ் ராஜ் தயாரித்த இனிது இனிது காதல் இனிது படத்தில் நடித்த புதுமுகங்களுக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்தவர் ஆரிதான். இதுபோல பல புதுமுகங்களுக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார். இவர் ஒரு ஃபிட்னஸ் பயிற்சியாளரும் கூட.
 நடிகர்களை வயதுக்கேற்ற தோற்றத்துக்குக் கொண்டு வருவதில் ஸ்பெஷலிஸ்ட். கற்றது தமிழில் ஜீவா, மிருகம் படத்தில் ஆதி, சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமார், ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபன், யோகியில் அமீர் ஆகியோருக்கு இந்த ஃபிட்னெஸ் மற்றும் வயதுக்கேற்ற தோற்றம் கொண்டு வந்தவர் ஆரிதான். இதுதவிர ஆடும் கூத்து படத்திலும் ஆரி நடித்துள்ளார்.
 2011-ல் மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தில் நாயகனாக நடித்தார் ஆரி. அடுத்து அவர் நடித்த படம்தான் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகியுள்ள நெடுஞ்சாலை. ஆரியின் நடிப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையுலகில் ஆரி எதிர்ப்பார்த்த அவருக்கான இடத்தை இந்த நெடுஞ்சாலை பெற்றுத் தந்துள்ளதாகவே இயக்குநர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

No comments :

Post a Comment