மகிழ்ச்சியாக வாழ கற்று தந்தவர் இளையராஜா: பிரகாஷ்ராஜ் புகழாரம்

No comments
மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. ராஜாவின் சங்கீதத் திருவிழா என்ற பெயரில் நடந்த இந்நிகழ்ச்சியை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தொடங்கி வைத்தார். இந்த இசை நிகழ்ச்சியை நடிகை சுஹாஷினி தொகுத்து வழங்கினார். ‘‘நமச்சிவாயா வாழ்க, நாதன்தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க...’’ என்ற பாடலுடன் இசை நிகழ்ச்சி தொடங்கியது.
 பின்னர் இளையராஜா ‘‘ஜனனி ... ஜனனி பரிபூரணியே...’’ என்ற பாடைலை பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றார். அதன் பிறகு, பாடகர்கள் ஹரிகரன், எஸ்.என்.சுரேந்திரன், யுவன் சங்கர் ராஜா, பாடகிகள் சித்ரா, பவதாரிணி, பிரியா உள்பட பல பாடகர், பாடகிகள் இளையராஜாவின் இசையில் பிறந்த பாடல்களை பாடி அரங்கையே அதிர வைத்தனர். இசை நிகழ்ச்சியின் இடையிடையே கார்த்திக் ராஜா, நடிகர் பிரகாஷ்ராஜ், டைரக்டர்கள் பாலா மிஷ்கின் ஆகியோர் பேசினர்.
 கார்த்திக் ராஜா பேசும்போது, ‘‘எனக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு அப்பா, தாய். இசையாக அப்பா பிறந்து இருக்கிறார். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? என்றார். டைரக்டர் பாலா பேசும்போது, ‘‘நான் அடுத்து பண்ணபோகிற படம் ‘தாளம் தப்பட்டை’ இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். இது அவருக்கு ஆயிரமாவது படமாகும். நான் மதுரைகாரன். இப்படத்தில் மதுரைகாரன் சசிகுமார் நடித்துள்ளார். 
மதுரைகாரர் இசையமைத்துள்ளார். மதுரைகாரன் நான் டைரக்ட் செய்கிறேன். இதைவிட நான் என்ன பாக்கியம் செய்து இருக்க முடியும் என்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது ‘‘அய்யாவின் (இளையராஜா) பாடலை நேரடியாக கேட்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். 
நடிகராக இருந்து டைரக்டராகியும் இருக்கிறேன். நான் ஒரு படம் எடுக்கிறேன். அதில் மதுரை மல்லிகை பூ, இட்லி பற்றி பாட்டு போட்டு இருக்கிறார். தனியாக இருக்கும்போது அவரது இசையை கேட்பேன். என் படத்துக்கு இசையமைத்து கொடுத்த அவர் எனக்கு பொறுமையையும், எனக்கு வாழ்க்கையையும், இயற்கையாக வாழும் முறையையும் கற்று தந்துள்ளார். 
இதனால்தான் நான் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்காக அவருக்கு என் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டைரக்டர் பாலா படத்திற்கு இளையராஜா ஒரு பாடலுக்கு இசையமைத்து உள்ளார். அந்த பாடலை கேட்டதும் அழுது விட்டேன். அப்படி ஒரு அற்புதமான பாடலை கொடுத்துள்ளார் என்றார்.

No comments :

Post a Comment