சேரன் மகள் தாமினியை இன்று ஆஜர்படுத்த உத்தரவு
சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஈஸ்வரியம்மாள் (58) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: எனது மகன் சந்துருவும் இயக்குனர் சேரன் மகள் தாமினியும் காதலித்து வருகின்றன. இதற்கு சேரன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தற்போது தாமினியை அழைத்துச்செல்லக்கூடாது என்று சந்துருவை மிரட்டுகிறார். தாமினியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு நீதிபதிகள் தனபாலன் மற்றும் சி.டி.செல்வத்திடம் வக்கீல் சங்கரசுப்பு கோரிக்கை விடுத்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், வழக்கு மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மனுதாரர், எதிர்மனுதாரர், தாமினி ஆகியோர் ஆஜராக வேண்டும் என்றனர். தொடர்ந்து சேரன், மனைவி செல்வ ராணி, மற்றொரு மகளுடன் ஆஜரானார். ஈஸ்வரியம்மாளும் ஆஜர் ஆனார். வாத விவரம்:
வக்கீல் சங்கரசுப்பு: தாமினியை சட்ட விரோதமாக காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். அவர் விருப்பப்படி வாழ கோர்ட் அனுமதி கொடுக்க வேண்டும். காதலனை மறக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் தாமினியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இயக்குனர் சேரன் தரப்பு வக்கீல்கள் என்ஆர் இளங்கோ, ராஜா செந்தூரபாண்டியன்: பெண் ணின் எதிர்காலம் கருதி, வழக்கு விசாரணையை ரகசிய விசாரணையாக நடத்த வேண்டும்.
மேலும் சேரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிபதியிடம் சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகின்றனர் என்றனர். இதையடுத்து நீதிபதிகள் முன் ஆஜரான சேரனும் அவரது மனைவியும் கோர்ட்டில் கதறி அழுதனர். மகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து தாமினி, மனுதாரர், எதிர்மனுதாரர் தரப்பு வக்கீல்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், தாமினி, சந்துருவை திருமணம் செய்துகொள்வேன் என்கிறார். அவர் மேஜர் என்பதால் அவரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கு நாளை (இன்று) மதியம் 2.00 மணிக்கு விசாரிக்கப்படும். அப்போது தாமினி, மனுதாரர், எதிர் மனுதாரர் ஆஜராக வேண்டும் என்றனர்.
இதைக்கேட்ட வக்கீல் சங்கரசுப்பு, தாமினி தற்போது காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு தங்கவைக்கப்படக்கூடாது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஒரு நாள் இரவு மட்டும் உயர் நீதிமன்ற மூத்த வக்கீல் என்.ஜி.ஆர் பிரசாத் வீட்டில் தங்கலாம். நாளை வழக்கு விசாரணையின்போது அவர், தாமினியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து தாமினியை வக்கீல் பிரசாத் தனது அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார். வழக்கு விசாரணையின்போது சேரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அடிக்கடி கதறி அழுதனர். ஆனால் தாமினி கடைசி வரை எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. முகத்தில் சோகத்தையும் காட்டவில்லை. மவுனமாக இருந்தார்.
என் பாச போராட்டத்துக்கு வெற்றி கிடைக்கும்: சேரன்
சேரன் தனது மனைவியுடன் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் காதலை எதிர்க்கவில்லை. எனது மகள் காதலிக்கும் சந்துரு நல்லவர் இல்லை. மகளின் எதிர்காலம் எனக்கு கவலை அளிக்கிறது. நீதிமன்றம் எனக்கு நியாயம் வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன். மகளின் எதிர்காலத்தை நீதிமன்றம் கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன். எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நான் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளேன். அப்பொழுது எல்லாம் எனக்கு பல போன்கால்கள் வரும். அதை விட அதிகமாக தற்போது எனக்கு போன்கால்கள் வருகிறது. இது எனக்கு ஆறுதலாக உள்ளது. பெற்றோர்களின் மனநிலைக்கு தற்போது ஆதரவுகள் பெருகி வருகிறது. சந்துருவின் தாய் எனது மருமகன் என்று வழக்கில் கூறுகிறார். இதுவரை அவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை. அதற்குள் அவர் இப்படி கருத்து கூறுகிறார். எனவே இதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று கண்ணீருடன் கூறி கொள்கிறேன். நான் பாச போராட்டம் நடத்துகிறேன். இதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment