சினிமாவில் அதிகரிக்கும் பெண் இயக்குனர்கள்

No comments
 தமிழ் சினிமாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெண் இயக்குனர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பெண்கள் இயக்குனராவது புதிதில்லை. தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலட்சுமி, முதல் பெண் இயக்குனராகி இதை தொடங்கி வைத்தார். பிறகு பானுமதி, லட்சுமி, சுஹாசினி, ஜெயதேவி, ஸ்ரீப்ரியா என நிறைய பெண் இயக்குனர்கள் வந்தார்கள். விஜயநிர்மலா 40 படங்களுக்கு மேல் இயக்கி இந்தியாவிலேயே அதிக படங்கள் இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்றார். இப்படி அவ்வப்போது பெண் இயக்குனர்கள் வந்தார்கள்.

ஆனால் தற்போது அதிக அளவில் பெண் இயக்குனர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சவுந்தர்யா (கோச்சடையான்), ஐஸ்வர்யா தனுஷ் (வை ராஜா வை), கிருத்திகா உதயநிதி (வணக்கம் சென்னை), ரோகிணி (அப்பாவின் மீசை), ஜே.எஸ்.நந்தினி (கொலை நோக்குப் பார்வை), அம்பிகா (நிழல்), ஷகிலா (நீலத்தாமர பூத்து), ஜானகி விஸ்வநாதன் (ஓம் ஒபாமா), ரூபா அய்யர் (சந்த்ரா), சாரதா ராமநாதன் (புதிய திருப்பங்கள்) ஆகியோர் தற்போது படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தவிர ‘சட்டம் ஒரு இருட்டறை’யை ரீமேக் செய்த சினேகா பிரிட்டோ, ‘ஆரோகணம்’ படத்தை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன், ‘வெப்பம்’ படத்தை இயக்கிய அஞ்சனா, ‘துரோகி’யை இயக்கிய சுதா, ‘கண்டநாள் முதல்’ படத்தை இயக்கிய ப்ரியா.வி. 17 படங்கள் வரை இயக்கிய ஜெயதேவி, ‘நர்த்தகி’யை இயக்கிய விஜயபத்மா, இந்தி மற்றும் ஆங்கில படங்களை இயக்கிய ரேவதி ஆகியோர் அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.

நடிகைகள் காவ்யா மாதவன், ஷோபனா, ஜோதிர்மயி, விஜயலட்சுமி, சாயாசிங், பத்மப்ரியா, லேகா வாஷிங்டன், கவியரசர் கண்ணதாசன் பேத்தி டாக்டர் விஜயலட்சுமி ஆகியோர் படம் இயக்கும் ஆசையை வெளிப்படுத்தி உள்ளனர். நடிகை ஷாம்லி சிங்கப்பூரில் சினிமா இயக்கம் கற்றுத் திரும்பி இருக்கிறார். கமல் மகள் அக்ஷரா இந்தி படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

சத்யராஜ் மகள் திவ்யா குறும்படங்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார். விஷ்ணு மனைவி ரஜினி துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர் சந்திரா துணை இயக்குனராக பணியாற்றி முடித்துள்ளார். இவர்கள் விரைவில் படம் இயக்க உள்ளனர். எனவே இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் நிறைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.No comments :

Post a Comment