இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் வாழும் சாதனையாளர்களையும் கவுரவிக்க வைரமுத்து கோரிக்கை
சென்னை : பி.வி.பி சினிமாஸ் தயாரித்துள்ள படம், ‘இரண்டாம் உலகம்’. ஆர்யா, அனுஷ்கா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ராம்ஜி. இசை, ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள், வைரமுத்து. இயக்கம், செல்வராகவன். இதன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. டிரைலரை சூர்யா வெளியிட்டார். பாடலை மணிரத்னம் வெளியிட்டார்.கே.வி.ஆனந்த், லிங்குசாமி பெற்றனர். பின்னர் வைரமுத்து பேசியதாவது: கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், செல்வராகவன் போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு வெற்றி, தோல்வி கிடையாது. அந்தப் படங்கள் ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்ட படங்கள், புரிந்துகொள்ளப்படாத படங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட உள்ளது.
நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான், மறைந்த சாதனையாளர்களை கவுரவிக்கும் அதே நேரத்தில், நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதனையாளர்களையும் கவுரவிக்க வேண்டும். மனைவியின் பொட்டை அழித்துவிட்டு மறைந்த கணவனின் படத்துக்கு பொட்டு வைப்பது போல் ஆகிவிடக்கூடாது.
சாதித்த கலைஞர்கள் தகுதி பார்த்துப் பாராட்டப்பட வேண்டும். அரசியலில் கலை இருக்கலாம். ஆனால், கலையில் அரசியல் இருக்கக் கூடாது. காலம் கொண்டாடும் கலை விழாவாகத் திரையுலக நூற்றாண்டு விழா திகழ வேண்டும் என்பதைச் சிறந்தவர்களின் செவிகளுக்கு ஒரு சேதியாகச் சொல்கிறேன். இவ்வாறு பேசினார்.
கஸ்தூரி ராஜா, ஆர்.கண்ணன், மகிழ் திருமேனி, கே.எஸ்.சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். சின்மயி தொகுத்து வழங்கினார். செல்வராகவன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment