பகையை வெல்லும் காதல்-திரைவிமர்சனம்,

No comments
புலியூருக்கும், கிளியூருக்கும் கொட்டை பாக்கு பிரச்னையில் ஆரம்பிக்க ஊர் பகை. தலைமுறை தலைமுறையாக மாறிமாறி வெட்டிச் செத்துக் கொண்டு வாழ்கிறார்கள். புலியூரைச் சேர்ந்த விமலை எந்த நேரமும் கிளியூர்க்காரர்கள் போட்டுத் தள்ளலாம் என்ற சூழ்நிலை இருப்பதால் யாரும் பெண்கொடுக்க மறுக்கிறார்கள். இறுதியில் விமல், கிளியூர் பெரிய தலைக்கட்டு பெண்ணையே காதலிக்க, விவகாரம் வில்லங்கமாகிறது. பகை பெரிதாகிறது.

சமாதானத்தை விரும்பும் விமல், காதலை காரணமாக வைத்து இரண்டு ஊருக்கும் உள்ள பகையை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார். அதனால் பிந்து மாதவியை மனைவியாக்கி தன் ஊருக்கு அழைத்து வருகிறார்.

 பிந்து மாதவியோ விமல் குடும்பத்தை கூண்டோடு கைலாசம் அனுப்பும் திட்டத்தோடு வருகிறார். இரண்டில் யார் நினைத்தது நடந்தது என்பது மீதிக்கதை.
விமல் களவாணியில் பிடித்த டிரெண்டை இன்னும் விடாமல் வைத்திருக்கிறார். அதே பாடிலாங்குவேஜ், ஸ்லாங் என்று ஆள் மாறவே இல்லை. இருந்தாலும் இந்தக் கதையும் அவருக்கு ஏற்ற மாதிரியே இருப்பதால் பெரிதாக அந்தக்குறை தெரியவும் இல்லை.

‘சமாதானம் பேச வர்றவன், வீரனா இருக்க மாட்டானா?’ என்று தெனாவெட்டு காட்டுவது, பகையாளி குடும்பத்தை உறவாடி கவிழ்ப்பது என விமல் ஏரியா ரசனையாக இருக்கிறது. பிந்து மாதவி பாவாடை தாவணியில் அழகாக இருக்கிறார். அவரது காந்த கண்களில் நிஜமாகவே கிக். மற்றபடி நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை.

பிந்து மாதவியின் முறைமாமனாக வந்து அலப்பறைகள் பண்ணுகிறார் சூரி. அவர் வரும் காட்சியில் சிரிப்பு கண்டிப்பாக உண்டு. விமலிடம் லிப் லாக் முத்தம் வாங்கும் அந்த ஒரு காட்சி வயிற்றைப் பதம் பார்க்கும். அந்தப் பக்கம் சூரி என்றால், விமல் பக்கம் சிங்கம்புலி தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார். எல்லா தலைக்கட்டுகளும் பொசுக் பொசுக்கென்று செத்துப்போக, கடைசி வரை நின்று விளையாடுகிறார் ரவிமரியா. கடைசி வரை டெர்ரர் வில்லனாக இருந்து கடைசி 5 நிமிடம் காமெடியில் அதகளம் பண்ணுகிறார். இமான் இசையில் சில பாடல்கள் ரசிக்க வைக்கிறது. சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு காமெடி படத்துக்கு இதுபோதும் என்று மெனக்கெடவில்லை.


எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் இயக்குனருக்கு. அதனால் எந்த லாஜிக்கையும் பார்க்காமல் கதையை நகர்த்தியிருக்கிறார். இரண்டு பகை ஊர்க்காரர்களும் எத்தனை கொலை செய்தாலும் போலீசுக்கு போக மாட்டார்களாம். போலீசும் ஊருக்குள் வராதாம். விமலுக்கு பெண் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஊரே வேண்டுதல் செய்கிறது. ஏன் அவர்கள் தங்கள் பெண்ணை கொடுக்கலாமே? இப்படி கேள்விகள் இருந்தாலும் ரசிக்கலாம் இந்த ராஜாவை.


No comments :

Post a Comment