சைக்கோவிடம் சிக்கும் பெண்
மலேசியாவில் நடக்கும் கதை. எப்போதும் வேலை வேலை என்று பிசியாகவே இருப்பவர் விஜய் (அகோந்திரன்). திருமண நாளுக்கு கூட வீட்டுக்கு வரமுடியாமல் போகிறது. கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவி ரேகா (மலர்மேனி) கோபித்துக் கொண்டு இரவில் காரில் தேசிய நெடுஞ்சாலை வழியாக 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அம்மா வீட்டுக்குச் செல்கிறார். போகும் வழியில் கார் பழுதாகி நிற்கிறது. கடத்தல்காரர்களும், சமூக விரோதிகளும் கடந்து செல்லும் ரோட்டில் ஓர் இளம் பெண் தனியாக சிக்கினால் என்னென்ன நிகழும் என்பதை திகிலுடன் சொல்கிறார்கள். கதை மலேசியாவில் நடந்தாலும் தமிழ்நாட்டுக்கும் அது பொருந்தும்.
கிட்டத்தட்ட மலர்மேனியின் ஒன்வுமன் ஷோதான் படம். கணவனின் அன்புக்காக ஏங்குவதில் இருந்து நடுநிசி பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் பயந்து கொண்டே கடக்கும் காட்சிகளில் நடிப்பில் மிரட்டுகிறார். அவரது கணவராக வரும் அகோந்திரனும் குறை வைக்கவில்லை. மனைவியை காணவில்லை என்று தெரிந்ததும் அவள் மீது கோபம் கொள்ளாமல் அவளை பரிதவிப்போடு தேடும்போது பரிதாப பட வைக்கிறார். போலீஸ் அதிகாரியாக வருகிறார் சசிதரன். ஆரம்பத்தில் நிறைய பில்டப் கொடுத்தாலும் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. சைக்கோ வில்லனாக வரும் காந்திபன் நடிப்பும் மிரட்டல்.
மலர்மேனியின் நடிப்புக்கு அடுத்த இடத்தை பிடிக்கிறது ரஞ்சனின் கேமரா. நெடுஞ்சாலையில் ஹெட்லைட் வெளிச்சத்திலேயே பாதி படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சைக்கோ மனிதனின் தனி அறை காட்சிகளிலும் ஒளிப்பதிவு கவர்கிறது. அடுத்து ஜெய் ராகவேந்திராவின் பின்னணி இசை, காட்சியின் பயத்தை அதிகரிக்கிறது. இரண்டு வரிக் கதையை விரல்விட்டு எண்ணக்கூடிய கேரக்டர்களை வைத்துக் கொண்டு பரபரப்பாக சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.
மகளை தேட வேண்டிய தாயின் குடும்பம், விடிய விடிய டி.வி பார்த்துக்கொண்டு கதை பேசிக்கொண்டிருப்பது ஏன்? மனைவியை தேடும் கணவன், அவளை சைக்கோ அடைத்து வைத்திருக்கும் அறைக்கே செல்வது அக்மார்க் சினிமா. சைக்கோ வில்லனுக்கு ஹீரோயினை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம் என்கிறபோது, அவன் நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஹீரோயின் கிளைமாக்சில் செய்யும் காரியத்தை முதலிலேயே செய்து விட்டு தப்பித்திருக்கலாமே. இப்படி குறைபாடுகள் இருந்தாலும் மலேசிய திரைக்கலைஞர்கள், தமிழ் சினிமா நோக்கி நெருங்கும் பயணத்தின் அடுத்த கட்டம் இது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment