மூடர்கூடம்-திரைவிமர்சனம்

No comments
நடிப்பு: நவீன், ஓவியா, ராஜி, குபேரன், சென்ட்ராயன், ஜெயப்பிரகாஷ், அனுபமா இயக்கம்: நவீன் தயாரிப்பு: வொயிட் ஷேடோஸ் புரொடக்ஷன் இசை: நடராஜன் சங்கரன் ஒளிப்பதிவு: டோனி சான்

 சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்த நவீன். திருட்டு பட்டத்துடன் திரியும் வெள்ளை, கஞ்சா விற்கும் சென்ட்ராயன், உதவாக்கரை என புறக்கணிக்கப்பட்ட குபேரன் ஆகிய 4 பேரும் ஒருமுறை பெரிய திருட்டை நடத்திவிட்டு செட்டிலாகத் திட்டமிடுகிறார்கள். திருட அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் ஜெயப்பிரகாசின் வீடு. அவர் மனைவி அனுபமா, மகள் ஓவியா மற்றும் 2 வாண்டுகளை ஹவுஸ் அரஸ்ட் செய்து, வீட்டில் தேடினால் எதுவும் இல்லை.



பைனான்ஸ் கம்பெனி நடத்தி அந்தப் பணத்தை வெளிநாட்டு வங்கியில் போட்டுவிட்டு திவால் நோட்டீஸ் கொடுத்து வெளிநாடு செல்ல ஜெயப்பிரகாஷ் திட்டமிட்டிருப்பது தெரிகிறது. நம்மை விட அவர் பெரிய திருடராக இருப்பதை அறிந்து கொள்ளும் நான்கு பேரும் அடுத்து என்ன செய்கிறார்கள் என்பது மீதி கதை. வரிசை கட்டும் காமெடி படங்களில் இது வித்தியாசமான படம். நான்கு பேரில் படித்தவர் நவீன்.

அவர்தான் கேப்டன். மற்ற மூவரிடமும் அப்பாவித்தனமாக கேள்வி கேட்டு அப்பாவித் தனமாக அவரே பதில் சொல்லிக் கொண்டு திரிவதும், முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு காமெடி செய்வதெல்லாம் ரசிக்க வைக்கிறது. வெள்ளை கொஞ்சம் சோக திருடன், கடைசியில் மாமன் மகள் காதலுக்கே பரம்பரை தாலியை கழற்றி கொடுத்து சென்டிமென்ட் டச் கொடுக்கும்போது நெகிழ வைக்கிறார். முட்டாள் என்று சொன்னாலே கோபம் வரும் குபேரனின் தோற்றமும் நடிப்பும் கச்சிதம்.


ஜெயப்பிரகாசின் குண்டு பையனுக்கு பொறுப்பு கொடுத்து, ஜெயப்பிரகாசுக்கு அவர் கிளாஸ் எடுக்கும் இடம் அபாரம். சென்ட்ராயன்தான் பின்னுகிறார். கிரிக்கெட் பேட்டை வைத்துக் கொண்டு அவர் செய்யும் காமெடி அட்டகாசங்கள் கலகல ரகம். ஓவியாவுக்கு நடிக்க வாய்ப்பில்லை. நான்கு பேரின் பிளாஷ்பேக்குகளை தேவைப்படும் இடங்களில் காட்டியிருப்பது அழகான திரைக்கதை. படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பொம்மைக்கு கூட பிளாஷ்பேக் வைத்திருப்பது புதுமை.


நடராஜன் சங்கரனின் இசை ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் டோனி சான், வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளுக்கு மெனக்கெடவில்லை. திருடர்களிடம் அகப்பட்டு அடைபடும் ஒரு குடும்பத்தின் பதைபதைப்போ தப்பிக்க வேண்டும் என்கிற தவிப்போ ஜெயப்பிரகாஷ் குடும்பத்தில் இல்லை. ‘எவனோ ஒருத்தன் எழுதி வச்சபடி வாழ, நாம கம்ப்யூட்டர் புரோக்ராம் இல்லை’ என்பது போன்ற வசனங்கள் படத்தின் பலம். இருந்தாலும் அதை ஆளாளுக்கு பேசி தள்ளுவது எரிச்சல்.
ஜெயப்பிரகாஷ் நண்பருக்கு போன் செய்யும்போது அவர்களின் குழந்தை எதிர்முனையிலிருந்து இவரை படாதபாடு படுத்துவதும், வில்லன் செய்யும் சேட்டைகளும் நான் ஸ்டாப் காமெடி. புதிய களம், புதிய வியூகத்தில் படம் தந்து கவனிக்க வைத்திருக்கிறார் நவீன்.

No comments :

Post a Comment