இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா-திரைவிமர்சனம்

No comments
சுமார் மூஞ்சி குமாருக்கு (விஜய் சேதுபதி) எதிர் வீட்டு சூப்பர் மூஞ்சி குமுதா (நந்திதா) மீது காதல். குமார் டார்ச்சர் தாங்காமல் குமுதாவின் அப்பா ராஜா, சுகர் பேஷன்ட் அண்ணாச்சியிடம் புகார் சொல்கிறார். அஸ்வின் தனியார் பைனான்ஸ் கம்பெனி எக்ஸிகியூட்டிவ். அவருக்கு ஸ்வாதி மீது காதல். நிறைய அலப்பறை, நிறைய அன்பு என செல்கிறது வாழ்க்கை.

தாதா மனைவி பேபிக்கு 2 பேர் மீது கள்ளக் காதல். அவர்களை வைத்தே புருஷனை போட்டுத்தள்ளுகிறார். ,இப்படி 2 நல்ல காதலையும், ஒரு கள்ளக்காதலையும் கடைசியில் எப்படி இணைக்கிறார்கள் என்பதுதான் கதை.  விஜய் சேதுபதி வரும் காட்சியெல்லாம் சிரிப்பு வெடிப்புதான். அண்ணாச்சி பசுபதியிடம் தன் காதல் கதையை பிளாஷ் பேக்காக சொல்லிவிட்டு, ‘குமுதா ஹேப்பி...’ என்று முடிக்கும்போதெல்லாம் பசுபதி சிக்கி சின்னாபின்னமாவது மாஸ் காமெடி.

ஆஃப் சரக்குக்காக விடிய விடிய அலைவதும் ஓர் உயிரைக் காப்பாற்ற விஜய் சேதுபதியை தேடி அஸ்வின் அலைவதுமான பின்பாதி சென்டிமென்ட் காமெடி. அஸ்வின் புதுமுகம் என்பதை நம்பமுடியாத அளவு நடித்திருக்கிறார். ஸ்வாதியிடம் பொய் சொல்லி மாட்டுவது, தன்னால் ஒரு பெண் விபத்துக்குள்ளாகி விட்டாளே என்று தவிப்பதுமாக ஸ்கோர் பண்ணுகிறார்.

நடுத்தர குடும்பத்து பெண்ணை அப்படியே பிரதிபலிக்கிறார் நந்திதா. விஜய் சேதுபதியிடம் முறைப்பும், வீராப்பும் காட்டுவதும் கடைசியில் வெட்கக் காதல் பூப்பதுமாக அவர் நடிப்பு கச்சிதம். ஸ்வாதி இன்னும் அழகாக இருக்கிறார். சூரி, திடீர் கேரக்டர். கொலை செய்யப்பட்ட தாதாவின் தம்பியாக வந்து இஷ்டத்துக்கு எகிறி குதித்து பிறகு பேபியிடமே பீஸாவது ஏ டைப்பாக இருந்தாலும் ஓகே. சுகர் பேஷன்ட் பசுபதி காமெடி கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். 

3 கதைகளும் தனித்தனியாக அழகாகவும், அழுத்தமாகவும் இருக்கிறது. அதை இணைப்பதற்காக இயக்குனர் தடுமாறியதில்தான் படமும் கொஞ்சம் தள்ளாடுகிறது. முன்பாதியில் கலகலவென போகும் கதை, பின் பாதியில் டல் அடிப்பதற்கு அதுதான் காரணம். மானேஜர் எம்.எஸ்.பாஸ்கரின் மலையாளமும், அவரது சிடுசிடுப்புக்கு பின்னால் இருக்கிற சென்டிமென்டும் அருமை.

சித்தார்த் விபினின் இசையில், லலிதானந்தின், ‘என் வீட்டில் நான் இருந்தேனே...’ பாடல் பசங்களின் காலர் ட்யூன். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு இரவில் நடக்கும் கதையை உறுத்தாமல் பார்க்க உதவியிருக்கிறது. ‘லவ் மேட்டரு, பீல் ஆகிட்டாப்ல, ஆஃப் அடிச்சா கூல் ஆயிடுவாப்ல’ என்ற ரிபீட் டயலாக் வெவ்வேறு இடங்கில் வெவ்வேறு டோனில் வருவது பின்பகுதியின் சுவாரஸ்ய அம்சம்.

கர்ப்பிணி பெண் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் காதலன் மீது ஸ்வாதி கோபப்படாமல் இருப்பது, ரத்ததானம் செய்வோர் லிஸ்ட்டில் இருக்கும் விஜய் சேதுபதி, ‘ஊசிக்குத்துனா வலிக்குமா?’ என்று கேட்பது, கொலை செய்த கொலையாளிகள் எந்த பதட்டமும் இல்லாமல் அலைவது போன்ற லாஜிக் கேள்விகளை காமெடி கொண்டு சமாளிக்கிறார்கள். ‘குடிக்காதீங்கப்பா’ என்ற மெசேஜை டாஸ்மாக் டாஸ்மாக்காக சரக்கடிக்க வைத்து சொல்கிறார் இயக்குனர். ஆனால், அதில் ஆஃப்தான் தாண்டியிருக்கிறார். 



No comments :

Post a Comment