பிரசாத், ஜெமினியில் ஆட்குறைப்பு டிஜிட்டலுக்கு மாறியாச்சு தமிழ் சினிமா ஃபிலிமில் வெளிவரும் கடைசி படம் ஐ

No comments
டிஜிட்டல் மயம் காரணமாக பிரபல சினிமா நிறுவனங்களான பிரசாத் மற்றும் ஜெமினி லேப்பில் பிராஸசிங் ஸ்டூடியோ மூடப்படுகிறது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். ஆண்டாண்டு காலமாக நம்மை மகிழ்வித்த சினிமா பிலிம், இப்போது மலையேறப் போகிறது. புதிய தொழில்நுட்பமான டிஜிட்டல் கேமரா வந்த பின் பிராஸசிங் வேலைகள் தேவையில்லை என்பதால் லேப்கள் மூடப்படுகின்றன.

சினிமா பிலிமில் உலகம் முழுவதும் கொடி கட்டி பறந்த நிறுவனம் ஜெர்மனைச் சேர்ந்த ஆரி. இந்நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் கேமராவான ரெட் ஒன்னை உருவாக்கியது ஓக்லே என்ற அமெரிக்க நிறுவனம். இவர்கள் போட்டியின் காரணமாக, ‘டிஜிட்டல் வேஸ்ட்’ என்ற பிரசாரமும் ‘பிலிம்தான் பெஸ்ட்’ என்றும் விவாதங்கள் நடந்து வந்தன. அது பழங்கதை ஆகிவிட்டது. இப்போது பிலிமை விட்டுவிட்டு உலகம் முழுவதும் டிஜிட்டலில் படம் எடுக்க முன் வந்துவிட்டனர். இதையடுத்து ஆரி, வேறு வழியின்றி அலெக்ஷா என்ற டிஜிட்டல் கேமராவை களமிறக்கியது. 

தியேட்டர் புரொஜக்ஷனும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால் ஹாலிவுட் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அடுத்த வருடத்தோடு பிலிமுக்கு குட்பை சொல்ல முடிவு செய்துள்ளனர். 
இதையடுத்து பல்வேறு நாடுகளில் டிஜிட்டலுக்கு சினிமா மாறிவிட்டது. இங்கும் 90 சதவிகித படங்கள் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பிரசாத் லேபில் பிராஸசிங் வேலைகள் குறைந்துவிட்டதால், அங்கு பணியாற்றிய 90 ஊழியர்களுக்கு விஆர்எஸ் கொடுத்துவிட்டனர். இதே போல ஜெமினி லேப்பிலும் ஆட்குறைப்பு செய்துவருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயா லேப் மூடப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

‘பிலிமில் படம் எடுக்கப்படுவது இன்னும் குறையவில்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள ‘ஜன்னல் ஓரம்’, ‘பாண்டிய நாடு’ உட்பட பல படங்கள் பிலிமில்தான் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் படங்கள் பிலிமில் எடுக்கப்பட இருக்கின்றன. ஆனால், தியேட்டர் புரொஜக்சன் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால் இந்த படங்களும் டிஜிட்டல் பார்மெட்டுக்கு மாற்றப்படும்’ என்றார் பிராசஸிங்கில் பணியாற்றும் ஒருவர்.

இன்டஸ்ட்ரியில் உள்ள இன்னும் சிலர், ‘இனி டிஜிட்டல்தான் என்பதை சொல்லி வந்தோம். இப்போது அது உறுதியாகிவிட்டது. பிலிமில் ரிலீஸ் ஆன சமீபத்திய படம், சசி இயக்கிய ‘555’. அடுத்து ஷங்கர் இயக்கும் ‘ஐ’ தான், பிலிமில் எடுக்கப்படும் கடைசி படம்’ என்று கூறுகின்றனர். ‘டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் எடுக்க, அது தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தெரிந்துகொள்ள அச்சப்படும் அல்லது ஆர்வமில்லாதவர்கள்தான் பிலிம் சிறந்தது என்று கூறுகின்றனர். ‘கண்களால் பார்க்கப்படும் துல்லியத்தை திரையில் காட்ட முடியும்’ என்றுதான் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தது.

 அது நிறைவேறிட்டது. டிஜிட்டலுக்கு முன் சினிமா, ஒளிப்பதிவாளர் வசம் இருந்தது. இப்போது இயக்குனர் வசம் வந்திருக்கிறது. இனி டிஜிட்டல் உலகம்தான். அதற்கு புஜி உட்பட சில பிலிம் நிறுவனங்கள் மூடப்பட்டதே சாட்சி’ என்கிறார் இயக்குனர் ஒருவர்.

டிஜிட்டல் மயம் காரணமாக, வாங்கி வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான சினிமா கேமராக்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது. பிலிமில், நெகட்டிவ்வை கொடுத்து பைனான்ஸ் வாங்கும் நிலை இருந்தது. டிஜிட்டல் வந்துவிட்டதால் அதற்கு யாரும் பைனான்ஸ் கொடுக்க முன் வருவதில்லை என்கிற நிலை இப்போது இருந்து வருகிறது.

No comments :

Post a Comment