பேயுடன் போராடும் குடும்பம்

No comments
தனிமையான பழைய வீடு, அதற்குள் பேய். அது பண்ணும் அட்டகாசம், பிறகு அதை விரட்டுவது என்கிற ஹாலிவுட்டின் வழக்கமான பேய் கதைதான். ஆனால் அதை சொல்லியிருக்கும் முறையும், காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் அபாரம், ஆச்சர்யம், அச்சம். ஒரு அமெரிக்க குடும்பம் கஷ்டப்பட்டு காசு சேர்த்து வீடு வாங்குகிறது. பழைய வீடு என்பதால் குறைந்த விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு போனால், வீட்டுக்குள் நாய் வர மறுக்கிறது. 

அன்று இரவு வீட்டில் உள்ள கடிகாரங்கள் அதிகாலை 3.08,க்கு நின்று விடுகிறது. இரவு முழுவதும் கதவு தட்டப்படும் ஓசை. தூங்கும் குழந்தைகளின் கால்களை ஏதோ பிடித்து இழுக்கிறது. மறுநாள் காலை வீட்டு நாய் செத்துக் கிடக்கிறது. அந்த குடும்பத் தலைவிக்கு காலில் சின்ன தழும்பு ஏற்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த பிரச்னை அதிகமாக, பேய்கள் பற்றி ஆராயும் தம்பதியின் உதவியை நாடுகிறார்கள். 

வீட்டை சுற்றிப்பார்க்கும் அவர்கள், ‘சாத்தானுக்கு தன் சொந்த மகளையே பலிகொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பேய் உலவுகிறது. இந்த வீட்டை அது இன்னும் சொந்தம் கொண்டாடுகிறது’ என்கிறார்கள். பிறகு அந்த குடும்பமும், அந்த ஆராய்ச்சி தம்பதிகளும் இணைந்து பேயை எப்படி விரட்டுகிறார்கள் என்பது மீதிக் கதை. அதிக ரத்தம் இன்றி, அகோர முகங்கள் இன்றி, வெறும் காட்சிகள், சத்தங்கள், லைட்டிங்குகளை வைத்தே பதற வைக்க முடியும் என்று நிரூபிக்கும் படம்.  

பேய் படமாக இருந்தாலும் குடும்ப பாசத்தையும், சொந்த வீட்டு லட்சியத்தையும் சொன்ன வகையில் சென்டிமென்டாகவும் டச் பண்ணுகிறது படம். வாங்கிய வீட்டை விட்டுச் செல்வதா, பேயை விரட்டுவதா, பேயுடன் வாழ்ந்து விடுவதா என்று அந்த குடும்ப தலைவனும் தலைவியும் தவிக்கிற தவிப்பு நெகிழ்ச்சி. அதேபோல பேய் விரட்டும் தம்பதிகளுக்குள் இருக்கும் அன்பு ஒருவர் உயிரை ஒருவர் காப்பாற்ற போராடும் குணம் என பேய் பயத்தோடு பாச பயணத்தையும் காட்டுகிறார்கள்.

வீட்டுக்குள் பாதாள அறை இருப்பது, அதற்குள் பேய் இருப்பது, குடும்ப தலைவி உடலுக்குள் புகுந்து அவளைக் கொண்டே அவள் மகள்களை கொல்ல வைக்க முயற்சிப்பது என ஒருபுறம் பயமுறுத்தினாலும், விஞ்ஞான ரீதியாக பேயின் குரலை பதிவு செய்வது, அதைப் புகைப்படம் எடுப்பது என புது ரூட்டிலும் கொண்டு சென்றிருக்கிறார்கள். பேய் இருக்கிறது என்பதை ஆணித்தரமாகச் சொல்லும் படம் இது.


No comments :

Post a Comment