சீனியர் நடிகைகளை ஒதுக்கும் ஹீரோக்கள் மாடல் அழகிகளுக்கு கிராக்கி

No comments
சீனியர் நடிகைகளை ஒதுக்கும் ஹீரோக்கள் தங்களுக்கு ஜோடியாக இளம் மாடல் அழகிகளை ஒப்பந்தம் செய்கின்றனர். சில மாதங்களுக்கு முன் டோலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க காஜலிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

 மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். இது சீனியர் நடிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ரகசியமாக சந்தித்த மூத்த நடிகர்கள் காஜல் போன்ற சீனியர் ஹீரோயின்களை தங்கள் படங்களில் ஜோடியாக்குவதற்கு பதிலாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு தருவது என்று முடிவு செய்தனர். இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தின் ஸ்கிரிப்ட் புதுமுகத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டது. 

மும்பை மாடல் அழகி கிரிதி சனான் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் ஒரு சில விளம்பர படங்களில் நடித்திருப்பதுடன் அழகிபோட்டிகளில் பங்கேற்று பூனை நடை நடந்திருக்கிறார். அதேபோல் இந்தியில் உருவான பேண்ட் பாஜா பாரத் படம் தமிழ் தெலுங்கில் ஆஹா கல்யாணம் என்ற பெயரில் உருவாகிறது. இந்தியில் ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா நடித்திருந்தனர்.

 ரீமேக்கில் நடிக்க நான் ஈ பட ஹீரோ நானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அனுஷ்கா சர்மா போல் பிரபலமான நடிகைக்கு பதிலாக வாணி கபூர் என்ற மாடல் அழகி தமிழ், தெலுங்கு இருமொழியிலும் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதேபோல் நாக சைதன்யா நடிக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் 2010ம் ஆண்டு மிஸ் இந்திய போட்டியில் 2வது இடம் பிடித்தவர். ஏற்கனவே தமிழில் முகமூடி படத்தில் இவர் நடித்திருக்கிறார். டோலிவுட் நடிகர்களின் இந்த திடீர் நடவடிக்கையால் டாப் ஹீரோயின்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஜல் இந்தியில் கவனம் செலுத்துகிறார்.

 த்ரிஷா, அனுஷ்கா, பிரியாமணி போன்றவர்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் நடிகைகளில் சமந்தா, சமீபத்தில் மகேஷ்பாபு படம் பற்றி பகிரங்கமாக எதிர்கருத்து கூறியதால் அவருக்கு வரவிருந்த பட வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment