ஜெ.சி.டேனியல்

No comments
இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர், ஜெ.சி.டேனியல். சினிமா ஆர்வத்தால், மும்பையில் பால்கேவையும், சென்னையில் நடராஜ முதலியாரையும் சந்தித்து, படம் எடுப்பது பற்றிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். பிறகு சொத்துகளை விற்று, கேமரா வாங்கி, ஒரு ஸ்டுடியோவை நிர்மாணித்து படப்பிடிப்பு நடத்தினார்.

புராண, இதிகாச சம்பவங்களே படங்களாக உருவாக்கப்பட்ட அந்த காலத்தில், சமூக கதையைப் படமாக்க முயன்றார். விகதகுமாரன் என்ற முதல் மலையாள மவுனப் படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்தார். தாழ்த்தப்பட்ட பெண்ணான ரோசம்மா என்ற கூத்துக்கலைஞரை ஹீரோயினாக்கி உயர்சாதிப் பெண்ணாக நடிக்க வைத்தார். படம் ரிலீஸ் ஆனபோது உயர் சாதிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டு, படத்தை ஓடவிடாமல் செய்தனர். இதனால் படம் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டது.

பொருளாதார ரீதியிலும் நலிவுற்ற டேனியல், அனைத்து சொத்துகளும் பறிபோன நிலையில், பாளையங்கோட்டைக்கு திரும்பி, வறுமை காரணமாகவும், உடல் நலிவடைந்ததாலும் 1975ல் காலமானார்.மலையாளப் படவுலகின் தந்தை என்ற சிறப்புக்குரிய ஜெ.சி.டேனியல், ஒரு தமிழர் என்ற காரணத்தினாலும், அவர் இயக்கிய விகதகுமாரன் படத்தின் பிரதி கிடைக்காததாலும், கேரள அரசு அவருக்கான அங்கீகாரத்தை தர மறுத்தது. பிறகு ஒரு பத்திரிகையாளரின் விடாமுயற்சியால், சாதனையாளர்களில் ஒருவராக கண்டறியப்பட்டார். அவரது வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் செல்லுலாய்ட் என்ற பெயரில் ரிலீசாகி விருதுகளைப் பெற்றது. இந்தப் படம், இப்போது தமிழில் ஜெ.சி.டேனியல் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.டேனியல் வேடத்தில் பிருத்விராஜ் வாழ்ந்திருக்கிறார். 

படத்தை வெளியிடும் உற்சாகம், உயர்சாதிக்காரர்களின் கலவரத்தால் படம் ஓடாதபோது வெளிப்படும் சோகம், எல்லாம் இழந்த நிலையில்  நோயாளியாக தன் வாழ்க்கையை பத்திரிகையாளரிடம் சொல்லும் தருணம் என, ஆழமாகப் பதிகின்ற காட்சிகள் பல. அவை எல்லாமே பிருத்விராஜின் நடிப்பில், கண்முன் நடக்கும் சம்பவங்களாக விரிகின்றன.டேனியல் மனைவி ஜானெட் வேடத்தில் மம்தா மோகன்தாஸ், கச்சிதம். கணவரின் சினிமா கனவுகளை தன் தோளில் சுமக்கிறார். ஹீரோயின் ரோசம்மாவிடம் காட்டும் அன்பு, கருணை, பரிவு, பாசம் எல்லாமே யதார்த்தம். ரோசம்மாவாக வரும் சாந்தினி, அட்டகாசமான தேர்வு. அகன்ற விழிகளில் நவரச நடிப்பை வெளிப்படுத்துகிறார். 

சினிமாவில் உயர்சாதிப் பெண்ணாக எப்படி நடிக்கப் போகிறோம் என்று தவிப்பதும், ஏங்குவதும் பரிதாபப்பட வைக்கிறது. சினிமாவிலாவது சாதி, மதம் பார்க்காமல் இருப்போமே என்று டேனியல் சொல்வது, நெற்றிப்பொட்டில் அறைகிறது.நடராஜ முதலியாராக தலைவாசல் விஜய், பி.யு.சின்னப்பாவாக மதன்பாப், டேனியலின் சாதனையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பத்திரிகையாளராக சீனிவாசன், நடிப்பில் பிரமாதப்படுத்துகின்றனர்.வேணுவின் ஒளிப்பதிவும், ஜெயச்சந்திரனின் இசையும், இந்த சாதனை சரித்திரம் தடம்புரளாமல் ஓட உதவியிருக்கின்றன.சாதனையாளர்களை உயிருடன் இருக்கும்போதே கொண்டாடுங்கள் என்ற அற்புதமான மெசேஜை சொன்னதற்காக, இயக்குனர் கமலுக்கு ஒரு பூங்கொத்து.

No comments :

Post a Comment