நம்மகிராமம் - திரைவிமர்சனம்
ஆங்கிலேயர்களின் அதிகாரம் நடந்த காலத்தில், பெண்களை சாதிக்கு அடிமையாக்கி வைத்திருந்த கதை. வெளியில் ஆசை நாயகி வைத்திருக்கும் மணிசாமி அய்யர், வீட்டில் ஆச்சாரங்களை கெட்டியாகக் கடைபிடிப்பவர். சாதி வழக்கப்படி தன் தங்கை மகள் துளசிக்கு 8 வயதில் திருமணம் செய்து வைக்கிறார். திருமணமான மறுநாளே 14 வயது மாப்பிள்ளை இறந்து போக, விதவையாகிறாள் துளசி. அவளை வீட்டின் இரண்டாங்கட்டில் தள்ளிவிடுகிறார்கள். வசந்தத்தை நுகரவேண்டிய வயதில் வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள சாதி சிறையில் அடைக்கப்படுகிறாள். கதர் ஆடையும், கலைந்த கனவுகளுமாக கரைகிறது அவளது இளமை.பருவ பெண்ணாக மாறிய பிறகு ஜோதிடர் ஆலோசனைப்படி துளசியின் தலையை மொட்டையடிக்க முடிவு செய்கிறார் மணி அய்யர்.
முற்போக்கு சிந்தனையும், சுதந்திர வேட்கையும் கொண்ட மணிசாமி அய்யரின் மகன் கண்ணன், இந்த சாதி கொடுமைக்கு எதிராகவும் தந்தைக்கு எதிராகவும் நிற்கிறார். துளசிக்கு இழைக்கப்படும் அநீதியை சகிக்க முடியாமல் அவளது பாட்டி அம்மணியம்மாவும், கண்ணனும் ஆளுக்கொரு அதிரடி முடிவெடுக்கிறார்கள். அது என்ன? அதன் விளைவென்ன என்பது மீதிக் கதை.எளிமையான, வலிமையான சினிமா. கடந்த நூற்றாண்டின் கருப்பு பக்கத்தை பளிச்சென்று காட்டும் காலக் கண்ணாடியாக வந்திருக்கிறது. சாதி வெறிபிடித்த, தனிமனித ஒழுக்கம் இல்லாத மணிசாமி அய்யர் கேரக்டராகவே மாறி இருக்கிறார் இயக்குனர் மோகன் சர்மா. வார்த்தையிலும், செயலிலும் ஜாதி உணர்வையும், பணத் திமிரையும் அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரது மனைவியாக பிரியாவும், தங்கையாக ரேணுகாவும் அக்ரகாரத்து அப்பாவி பெண்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்கள். தனக்கு நடக்கும் திருமணத்தை வேடிக்கையாக அனுபவிப்பதும், அலங்காரம் களைந்து மூலையில் உட்கார வைக்கப்படும்போது புரியாமல் தவிக்கும்போதும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சிறுமி பேபி சம்ஜா.வளர்ந்த துளசியாக சம்விருதா. சாதி கட்டுப்பாட்டுக்கு பயந்து அவர் படும் அவஸ்தை மனதை பிழிகிறது.
பக்கத்து வீட்டில் நடக்கும் பாட்டு வகுப்பை, சுவருக்கு இந்தப் பக்கம் இருந்து கற்றுக் கொள்ளும் ஆர்வம், பாட்டி மீது கொண்டிருக்கும் தீராத பாசம் என சோகம் சுமந்த கன்னியாக கண்கள் பணிக்க வைக்கிறார்.அன்பு பாசம் தவிர வேறெதையும் அறியாத மனுஷியாக சுகுமாரி. முப்பது வருட விதவை வாழ்க்கை வாழ்ந்து வலி அறிந்தவள். தன் பேத்திக்கும் தன் நிலை வந்ததை எண்ணி தவிக்கும் காட்சிகள் நடிப்பின் உச்சம். ஜாதி கட்டுக்களை உடைக்க அவர் எடுக்கும் அந்த நெருப்பு முடிவு வரை, அவர் நடிப்பை பார்க்கும்போது நிஜத்தில் அவரை இழந்த வலியும் சேர்ந்து கொள்கிறது.
பேனாவில் மை தீர்ந்த மாஸ்டர் நெடுமுடி வேணுவும், அவரை கேள்வி கேட்கும் அந்த பைத்தியக்காரி கேரக்டரும் அருமையான படைப்பு. 1947க்கு முந்தைய காலகட்டத்தை திரைக்குள் கொண்டு வர நிறைய உழைத்திருக்கிறார்கள். மதுஅம்பாட்டின் ஒளிப்பதிவும், சுந்தரத்தின் இசையும் இணைந்து கதை சொல்லியிருக்கிறது. இரண்டு தேசிய விருதைகளை வென்ற படம். அதற்கு தகுதியானது என்று உணர வைக்கிறது..
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment