தனியொருவனுக்கு சுதந்திரம் இல்லையெனில்...
கொஞ்சமல்ல நிறையவே இடியாப்ப சிக்கலில் அமெரிக்கா சிக்கியிருக்கிறது. பொருளாதார மந்த நிலையில் தொடங்கி, வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பின் எச்சம் வரை எந்த திசையில் திரும்பினாலும் சிக்கல்தான். கூடவே ஈராக் போர் தேவையற்றது என்று எழும் குரல், வட கொரியாவின் சவால், சீனா - இந்தியாவின் எழுச்சி... என திரும்பிய பக்கமெல்லாம் யாராவது அறைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதன் விளைவை ஹாலிவுட் படங்களிலும் பார்க்க முடிகிறது. சூப்பர் ஹீரோக்கள் இப்போது நாட்டை காப்பாற்றுவதை விட குடும்ப பிரச்னைகளை களையத்தான் அதிக நேரத்தை செலவிடு கிறார்கள். தந்தை - மகன் பாசம், ஒரு கரு பொருளாகியிருக்கிறது. தாய் - மகன், கணவன் - மனைவி நேசம் உப கதையாக வளர்ந்திருக்கிறது. வேற்று நாட்டவர்களைவிட உடன் இருப்பவர்களே அதிகம் வில்லனாக சித்தரிக்கப்படுகிறார்கள். மக்கள் பரப்பை விட பால்வெளி, நட்சத்திரங்கள், நிலா, ஆளில்லா கிரகங்கள், விண்வெளி ஆகியவற்றுக்கு கதைப் பரப்பை கொண்டு சென்று விட்டார்கள். சந்தையும் இப்போது ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என பிரிந்திருக்கிறது. ஆசிய மார்க்கெட்டில் ஓடினால் போதும் என்ற கணிப்பில் எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவையெல்லாம் கடந்த வருட சினிமா அனுபவங்கள் மட்டுமல்ல, வரும் ஆண்டுகளிலும் தொடரப் போகிறவை.
எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் என்று சொல்ல ஆரம்பித்தால் ஒரு தினகரன் வெள்ளி மலரே நிறையும் அளவுக்கு பட்டியலிட முடியும். அது சாத்தியமில்லை என்பதால் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
ரைட் அலாங், செவன்த் சன், ஐ பிராங்கென்ஸ்டீன், த மானுமென்ட்ஸ் மென், த லெகோ மூவி, ரோபோ காப், த்ரீ டேஸ் டூ கில், நான் - ஸ்டாப், 300: ரைஸ் ஆஃப் அன் எம்பயர், நீட் ஃபார் ஸ்பீட், மப்பெஸ்ட்ஸ் மோஸ்ட் வான்டட், நோவா, கேப்டன் அமெரிக்கா: த வின்டர் சோல்ஜர், ரியோ 2, சபோடேஜ், த அமேசிங் ஸ்பைடர் மேன், காட்ஸில்லா, எக்ஸ்-மென்: டேஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட், எட்ஜ் ஆஃப் டுமாரோ, 22 ஜம்ப் ஸ்ட்ரீட், டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டின்ஷன், ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7, டான் ஆஃப் த பிளானட்ஸ் ஏப்ஸ், ஜூபிடர் அசென்டிங், கார்டியன்ஸ் ஆஃப் த கேலஸி, சின் சிட்டி: எ டேம் டூ கில் ஃபார், த எக்ஸ்பென்டபிள்ஸ் 3, இன்டர்ஸ்டீலர், ஃபியூரி, பெடிங்டன், த ஹாபிட் மூன்றாவது பாகம்...
கூட்டிக் கழித்து பார்க்கும்போது ரசனையும், சுவாரஸ்யமும் கண்டிப்பாக முன்பு போலவே இருக்கும். தொழில்நுட்பங்களும் உச்சத்தை தொடும். 3டி படங்கள் சல்லீசாக வெளிவரும். 4டி படங்களுக்கான ஆயத்த விதைகள் தூவப்படும். கரம் மசாலா கமகமக்கும். ஆனால், கதையும், அது சார்ந்த நிலப்பரப்பும் வேறாக இருக்கும். என்றாலும் வழக்கம் போல் தனி மனித பிரச்னைகள்தான் திரைக் கதையின் அடிநாதமாக இருக்கும். அதுவும், அது உளவியல் சார்ந்த சிக்கல்களாக இருக்கும்.
ஏனெனில் மக்கள் கூட்டமல்ல, தனி மனித சுதந்திரமே முதலாளித்துவ நாடுகளின் பிரதான அம்சம். ஹாலிவுட் படங்களும் அதையேதான் 2014லும் எதிரொலிக்கும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment