தயாரிப்பாளர்களுக்கு அக்கறை கிடையாது : பாலுமகேந்திரா தாக்கு

No comments
படங்களின் நெகடிவ்களை பாதுகாப்பதில் தயாரிப்பாளர்களுக்கு அக்கறை இல்லை என்றார் பாலுமகேந்திரா. கடந்த ஆண்டின் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. வி 4 சார்பில் நடந்த இந்த விழாவில் இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

பிறகு அவர் பேசியதாவது: இங்கு பிலிம்நியூஸ் ஆனந்தனுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. நான் சினிமாவுக்கு வந்தது முதலே அவரை எனக்கு தெரியும். உழைப்பாளி. சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களும் அவரிடம் உள்ளது. இன்றைக்கும் அந்த பணியை அவர் செய்து சினிமாவின் வரலாற்றை பாதுகாத்து வருகிறார். 

 ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்து நெகடிவ்வில் தயாரிக்கப்பட்ட பல படங்கள் இன்றைக்கு அழிந்துவிட்டது. நான் உருவாக்கிய மறுபக்கம், வீடு உள்ளிட்ட பல படங்களின் நெகடிவ் அழிந்துவிட்டது. என்னுடைய படங்கள் மட்டுமல்ல பாதுகாக்கப்படாத பல படங்கள் அழிந்துவிட்டது. டிஜிட்டல் முறை வந்துவிட்டதால் இனி வரும் காலங்களில் நெகடிவில் படம் தயாரிக்க வேண்டிய தேவை இருக்காது. 

இந்நிலையில் ஏற்கனவே தயாராகி நெகடிவாக இருக்கும் படங்களை பாதுகாப்பதில் தயாரிப்பாளர்களுக்கு அக்கறை இல்லை. இந்தநிலை நீடித்தால் ஏராளமான படங்கள் அழிந்துபோய்விடும். எனவே நெகடிவ்களை பாதுகாக்க ஆவண காப்பகம் ஒன்றை தொடங்க வேண்டும். இவ்வாறு பாலு மகேந்திரா பேசினார். நடிகர்கள் கவுதம் கார்த்திக், நடிகைகள் லட்சுமிமேனன், பிந்துமாதவி, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments :

Post a Comment