ஜில்லா-திரைவிமர்சனம்
சிவனும், சக்தியும் மோதினால் என்னனென்ன பிரளயங்கள் நடக்கும் என்பதையே சொல்லியிருக்கிறார் இயக்குனர் நேசன்.
இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லாலின் அசத்தலான நடிப்பில் வெளியான ஜில்லா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளதா?
மதுரை ஜில்லாவையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் மோகன்லால், இந்நிலையில் தனக்காக அடியாள் ஒருவன் உயிரைவிட, அவனின் பிள்ளையான விஜய்யை தத்தெடுத்து சொந்தப் பையன்போல் வளர்க்கிறார்.
விஜய்யோடு பக்கபலத்துல அடிதடி, வெட்டுக்குத்து, கட்டப்பஞ்சாயத்துனு என்று இருவரும் ஜில்லாவையே கலக்கிவருகிறார்கள்.
தன் அப்பாவைக் கொன்றது ஒரு பொலிஸ் என்பதால், பொலிசைக் கண்டால் ‘காக்கி’யை கழட்டி ஓடவிட்டு விரட்டி அடிக்கும் அளவுக்கு கோபத்துடன் வலம் வருகிறார் விஜய்.
ஆனால், பொலிஸ் என்பது தெரியாமலேயே அந்த ஊர் சப்-இன்ஸ்பெக்டரான காஜலிடம் மனதைப் பறிகொடுக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, திடீரென ஒரு நல்ல பொலிஸ் மதுரைக்குள் நுழைய, செய்வதறியாது நிலைகுலைகிறார் மோகன்லால். தனக்கு கீழே எல்லாம் இருக்கணும்னா, தன்னோட ஒரு ஆள் பொலிஸ் டிபார்ட்மென்டுக்குள்ள இருக்கணும்னு முடிவு பண்ணி, விஜய்யை பொலிசாக்குகிறார்.
தனக்குப் பிடிக்கவே பிடிக்காத பொலிஸ் உடையை அணிந்ததும் மனம் திருந்தும் சக்தி, ஒரு கட்டத்தில் சிவனையே எதிர்க்கத் தொடங்குகிறார். சிவனும், சக்தியும் எதிரும் புதிருமாக நிற்க, ‘ஜெயிச்சது யாரு’ங்கிறதுதான் க்ளைமேக்ஸ்.
விஜய் என்ற ஒரு ‘மாஸ்’ ஹீரோ, மோகன்லால் என்ற ஒரு ‘கம்ப்ளீட் ஆக்டர்’ என இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு, எப்படிப்பட்ட திரைப்படத்தை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கலாம்?.
ஆனால், ரொம்பவும் சாதாரணமான ஒரு கதைக்கு, நீளமான திரைக்கதை ஒன்றை அமைத்து ‘வளவள’வென நீட்டி முழக்கியிருக்கிறார் இயக்குனர்!
வழக்கம்போல் அதே துறு துறு விஜய். கொஞ்சம் ‘போக்கிரி’ ஸ்டைல் பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரியோடு சக்தியாக தனது ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.
‘இளையதளபதி’யின் டான்ஸ், ஃபைட் பற்றி சொல்லவே வேண்டாம். இதிலும் அடித்துத் தூள் பறக்கவிட்டிருக்கிறார். ஆனாலும், என்னமோ மிஸ்ஸிங்.
கமலுக்கு எதிராக நின்று ஒருவர் நடிக்க வேண்டும் என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகரை படம் முழுக்க ‘நான் சிவன்டா...’, ‘நான் சிவன்டா...’ன்னு இப்படி படம் முழுக்க ‘பஞ்ச்’ வசனம் பேசவிட்டிருப்பது கொஞ்சம் இடிக்கிறது.
கேரள ரசிகர்கள் மோகன் லாலை இது மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் பார்த்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் அந்த ‘சிவன்’ கதாபாத்திரத்தில் மோகன்லாலைத் தவிர வேறொவரை யோசிக்க முடியவில்லை. வீணடிக்கப்பட்ட தனது பாத்திரத்தையும், தன் நடிப்பால் காப்பாற்றியிருக்கிறார் கேரள சூப்பர் ஸ்டார்!
ஹீரோயின் காஜல் அகர்வாலுக்கு லைஃப் டைம் கதாபாத்திரம். மூணு பாடல்களில் விஜய்யுடன் ஆட அற்புதமான வாய்ப்பு அவருக்கு, அவருக்கு கொடுத்துள்ள பகுதியை செவ்வனே செய்திருக்கிறார்.
சூரி, கிடைத்த கேப்பில் கொமடி செய்திருக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ், மகத், நிவேதா தாமஸ், ஆர்.கே., பிரதீப் ராவத், ரவி மரியா என ஆளாளுக்கு படம் நெடுக வந்து போகிறார்கள்.
பாடல்களை கேட்க முடிந்தளவுக்கு படத்தில் ரசிக்க முடியவில்லை. ‘கண்டாங்கி... கண்டாங்கி’ பாடல் மட்டுமே கேட்பதற்கும் பார்ப்பதற்கும் குளிர்ச்சி. ‘மாமா... எப்போ ட்ரீட்’ பாடலில் நடன அமைப்பு கவர்ந்திருக்கிறது.
படம் முழுக்க ‘ஜில்லா’ தீம் மியூசிக்கை ஓடவிட்டே பின்னணியை ஒப்பேத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். ஒளிப்பதிவு நன்றாக உள்ளது, ஆனால் எடிட்டிங்கில் நிறைய கோட்டை விட்டிருக்கிறார்கள்.
படத்தில் பல நீளமான காட்சிகளையும், தேவையில்லாத காட்சிகளையும் கொஞ்சம் வெட்டி, சுருக்கியிருந்தால் படம் இன்னும் ‘சுறுசுறு’ப்பு பெற்றிருக்கும்.
பெரிய ‘ஸ்டார் வேல்யூ’ இருந்தும் ,சுவாரஸ்யமில்லாத முதல் பாதி, எதிர்பார்த்த காட்சிகளோடு நகரும் இரண்டாம் பாதி, பொறுமையை சோதிக்கும் 3 மணி நேர திரைக்கதை என நிறைய தடுமாற்றங்கள் ‘ஜில்லா’வில்!
விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இப்படம் சர்க்கரை பொங்கலாக இருக்கலாம். ஆனால் பொதுவான ரசிகனைப் பொறுத்தவரை இப்படம் வெண்பாங்கல்.
நடிகர்கள் - விஜய், மோகன்லால்
நடிகைகள் - காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ்
இசை - டி.இமான்
இயக்கம் - ஆர்.டி.நேசன்
தயாரிப்பு - ஆர்.பி.சௌத்ரி
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment