இது கதிர்வேலன் காதல்

No comments
காதலர் தினத்தன்று காதலை மையப்படுத்தி வெளிவந்துள்ள படமே ‘இது கதிர்வேலன் காதல்’. தங்களது முதல் படைப்பான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சுந்தர பாண்டியன்’ படங்களின் வெற்றியை இப்படத்திலும் தக்க வைத்திருக்கிறார்களா நடிகர் உதயநிதியும், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனும்? படத்தின் ஆரம்பத்தில் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்ட நிலையில் ஒரு நபரை மருத்துவமனையின் ஐ.சி.யு வார்டுக்கு அவசர அவசரமாக கொண்டு செல்கிறார்கள்.
 உள்ளே போனவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரின் உறவினர்கள் படபடப்புடன் வெளியில் காத்துக் கொண்டிருக்க.... ‘ஆறு மாதங்களுக்க முன்பு...’ என ஃப்ளாஷ்பேக் காட்சிகள் நகர்கின்றன. காதலித்து கல்யாணம் செய்துகொண்ட கதிர்வேலனின் அக்கா சாயாசிங், வீட்டுக்காரருடன் சண்டை போட்டுக்கொண்டு கோயம்புத்தூரிலிருந்து மதுரையிலிருக்கும் புகுந்தவீட்டிற்கு வருகிறார். மாமாவை சமாதானப்படுத்தி அக்காவை சேர்த்து வைப்பதற்காக மதுரையிலிருந்து கோயம்புத்தூருக்கு கிளம்புகிறான் உதயநிதி ஸ்டாலின். அங்கே போனதும் தன் பழைய நண்பன் சந்தானத்தை சந்திக்கிறார். கூடவே பக்கத்து வீட்டில் இருக்கும் நயன்தாராவையும் பார்க்கிறார். பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத ஆஞ்சநேய பக்தனான கதிர்வேலனுக்கு நயன்தாராவைப் பார்த்ததும் காதல் வர, அதற்காக சந்தானத்திடம் ஐடியா கேட்கிறான். எல்லாம் கைகூடி நயன்தாராவிடம் காதலைச் சொல்ல உதயநிதி நினைக்கும் நேரத்தில், தன் நண்பன் கௌதமை காதலிப்பதாக நயன்தாரா அதிர்ச்சி தருகிறாள். இதன் பிறகு உதயநிதி காதல் என்னவாகிறது? முதல் காட்சியில் காட்டப்பட்ட அந்த ஸ்ட்ரெச்சர் பேஷன்ட் யார்? என்பதற்கான விடை படத்தின் க்ளைமேக்ஸில்! கதைக்காகவும், திரைக்கதைக்காகவும் ரொம்பவும் மெனக்கெடாமல் காலம் காலமாக நாம் பார்த்துப் பழக்கப்பட்ட விடயங்களை அப்படியே இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்
இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். ஆனாலும், இரண்டரை மணி நேரத்தை எந்த சலிப்பும் இல்லாமல் பார்க்க வைத்ததில் ஜெயித்திருக்கிறார். முதல் பாதி சந்தானத்தின் கொமடியோடு கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் கொமடியையும், சென்டிமென்ட்டையும் சரிவிகிதத்தில் கலந்து சிரிக்கவும், நெகிழவும் வைத்து க்ளைமேக்ஸ் ட்விஸ்டோடு படத்தை ரசிக்கும்படி முடித்து ரசிகர்களை திருப்தியோடு அனுப்பி வைக்கிறது ‘இது கதிர்வேலன் காதல்’ படம். முதல் படத்தில் இருந்த தயக்கம் மறைந்து யதார்த்தமான நடிகராக மிளிர்கிறார் உதயநிதி ஸ்டாலின். தனக்கு எந்தக் கதை சரியாக வரும், தான் எப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொறுமையாக யோசித்து கதையை தெரிவு செய்திருக்கிறார் ஹீரோ உதய். தேவையில்லாத சண்டைக் காட்சிகளோ, ஹீரோ பில்டப்களோ இல்லாதவரை அவருக்கு ஹீரோவாகவும் எதிர்காலம் காத்திருக்கிறது. அதேபோல் ஒரு காட்சியில் சந்தானம் உதயநிதியைப் பார்த்து ‘உன்கிட்டலாம் நான் எக்ஸ்பிரஷன்ஸ் எதிர்பார்த்தது என் தப்புதான். கண்ணாடியைப் போட்டு மேனேஜ் பண்ணு.’ என கொமடி செய்வார். ரசிகர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் அந்த வசனத்தை வைக்க ஒப்புக்கொண்ட உதயநிதியின் தைரியத்திற்கு ஒரு சபாஷ். நயன்தாராவைப் பொறுத்தவரை அவருக்கான கேரக்டர் இப்படத்தில் இல்லை என்பது உண்மை. ஆனாலும் பவித்ரா கேரக்டரில் நயன்தாரா வரும் ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்கில் விசில் பறக்கிறது. ‘யாரடி நீ மோகினி’யில் பார்த்த அதே பழைய நயன்தாராவை மீண்டும் காட்டியிருக்கிறார்கள். சுடிதார், புடவை, தாவணி என பொண்ணு எந்த உடையில் வந்தாலும் செம அழகு. தன்னை நம்பி கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்து இப்படத்திலும் டபுள் ‘ஓகே ஓகே’ வாங்குகிறார் சந்தானம்! இருந்தாலும் காட்சிக்கு காட்சி ‘பொண்ணுங்கிறது....’, ‘காதல்ங்கிறது...’ என எதற்கெடுத்தாலும் ஒரு உதாரணம் சொல்வது கொஞ்சம் போரடிக்கிறது. கொஞ்ச காட்சியில் வந்தாலும் மொத்த திரையரங்கையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்துவிட்டுப் போகிறார் நடிகர் மயில்சாமி. ஜென்மப் பகையோடு சுற்றிக் கொண்டிருக்கும் இரண்டு பேரை மயில்சாமியின் மிமிக்ரி மூலம் சேர்த்து வைக்கும் அந்த கொமடிக் காட்சி அருமை. சுந்தர் ராம், சாயா சிங், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ஜெயபிரகாஷ் என படத்தில் அவரவர்களுக்கான காட்சியில் ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
 அதில் ‘அப்பா கேரக்டருக்கு தன்னை மிஞ்ச ஆளில்லை’ என்பது போல் நெகிழ வைத்திருக்கிறார் நரேன். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்கு பாடல்கள் எப்படி ப்ளஸாக அமைந்ததோ, அதற்கு நேர்எதிராக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தின் பாடல்கள் அமைய, பெரிய பிரேக்காக அமைந்திருக்கிறது. ‘மேலே மேலே...’ பாடல் கேட்பதற்கும், ‘அன்பே அன்பே...’ மான்டேஜ் பாடல் பார்ப்தற்கும் ஓகே. பின்னணிக்கும் ஹாரிஸ் பெரிதாக உழைக்கவில்லையோ என்றே தோன்றுகிறது. பாலசுப்ரமணியத்தின் கமெரா கண்களுக்கு குளிர்ச்சி. ஆங்காங்கே போரடிக்கும் ஒன்றிரண்டு காட்சிகளை யோசிக்காமல் வெட்டியிருக்கலாமே எடிட்டர், தன் கைவண்ணத்தில் உதயநிதியை ஓரளவு ஆடவும் வைத்திருக்கிறார் நடன இயக்குனர் தினேஷ். தயக்கத்தை விட்டுவிட்டால் அடுத்த படத்தில் ஸோலோவாகவும் உதய்யால் ஆட முடியும் என்றே தோன்றுகிறது. ஆங்காங்கே கொஞ்சம் நாடகத்தனமும், ஏற்கெனவே நாம் பார்த்த பழைய படங்களின் பாதிப்பும் இப்படத்தில் இருந்தாலும் கதிர்வேலனின் காதல் நமக்கு போரடிக்காது. மொத்தத்தில் குடும்பத்துடன் ஜாலியாக பார்க்க ஏற்ற படம் இந்த ‘இது கதிர்வேலன் காதல்’. இது கதிர்வேலன் காதல்
 மொத்தத்தில் கொமடி காதல்! நடிகர்: உதயநிதி ஸ்டாலின் நடிகை: நயன்தாரா ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியம் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் இயக்குனர்: எஸ்.ஆர்.பிரபாகரன்

No comments :

Post a Comment