சென்னைக்கு ஒரு சிவப்பு விளக்கு ஏரியா வேண்டும்! - இயக்குனரின் கருத்தினால் பிரஸ்மீட்டில் பரபரப்பு!
புதுமுக நடிகை சாண்ட்ரா எமி விலைமாது வேடத்தில் நடித்துள்ள படம் சிவப்பு எனக்கு பிடிக்கும். இப்படத்தை யுரேகா இயக்கியுள்ளார். ஜேஎஸ்கே கார்ப்பரேசன் இப்படத்தை வெளியிடுகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது, படத்தைப்பற்றி பேசிய இயக்குனர் யுரேகா, சமீபகாலமாக நம்மை சுற்றி நடக்கும் பாலியல் கொடுமைகள் அதிகரித்துவிட்டது. அதை தடுப்பதற்கான முயற்சிகள் நடந்தபோதும், அதில் வெற்றி கிடைக்கவில்லை.
மாறாக, வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. அதனால், சென்னை போன்ற பெரு நகரத்தில் ஒரு சிவப்பு விளக்கு ஏரியா ஆரம்பித்தால் வன்கொடுமை குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது என்ற கருத்து அடிப்படையில் இந்த படத்தை இயக்கியிருப்பதாக சொன்னார்.
மேலும். இப்படம் தொப்புள் தெரிய புடவையை கட்டிக்கொண்டு சந்துகளில் நடப்பது என்ற சித்தாந்தத்தை உடைக்கும்.
பாலியல் தொழிலாளிகளை பாலியல் போராளிகளாக மாற்றும். சென்னைக்கு சிவப்பு விளக்கு ஏரியா வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கும இப்படத்தில் திருநங்கைகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், கண்டிப்பாக இப்படம் விபச்சாரத்தை ஆதரிக்கும் படமல்ல, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான படம். இதன்மூலம் வன்கொடுமைகளை ஒழிக்க முடியாது. ஆனால் ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்று சொன்ன அவர், வியாபார நோக்கத்தை பார்க்காமல் எடுக்கப்பட்ட இந்த படத்தை பார்த்து விட்டு நாட்டுக்குத் தேவையான படம் என்று அனைவருமே பாராட்டுவார்கள் என்றார்.
ஆனால், பத்திரிகையாளர்கள் சார்பில், அவர் சொன்ன கருத்துகளுக்கு எதிர்ப்பு எழுந்தது.
பூரண மது விலக்கு வேண்டும் என்று பொதுமக்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், விபச்சார விடுதி திறக்க வேண்டும் என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதையடுத்து, நான் சொல்லும் இந்த கருத்து கேட்கும்போது தவறாகத்தான் தெரியும். அதனால் படத்தைப் பாருங்கள். அதன்பிறகு அது நியாயமா? இல்லையா? என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று யுரேகா கேட்டுக்கொண்டார். அதையடுத்து பத்திரிகையாளர்கள் அமைதியடைந்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment