பி.வாசு இயக்கும் அனிமேஷன் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்!

No comments
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கோச்சடையான் உருவாகி வரும் அதே அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் பி.வாசு ஒரு படம் இயக்க இருக்கிறார். படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறவர் ஐஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியும், "இருவர், ஜீன்ஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்தவருமான ஐஸ்வர்யா, இந்தியிலும், பிரபலமான நடிகையாக திகழ்ந்தார். நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார். குழந்தை பிறந்ததும், நடிப்புக்கு, தற்காலிகமாக முழுக்கு போட்டார். இந்தி, தெலுங்கு, தமிழ் பட உலகை சேர்ந்த இயக்குனர்கள் பலர், வற்புறுத்தியும், மீண்டும் நடிக்க மறுத்து விட்டார். 
 இந்நிலையில் "சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு, சமீபத்தில், ஐஸ்வர்யாவை சந்தித்து, "ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் தலைப்பில், ஒரு கதையை சொல்லியுள்ளார். கதையும், தலைப்பும் பிடித்ததால், இந்த படத்தில் நடிக்க, அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஐஸ்வர்யாராவுக்கு ஜோடியாக நடிக்க, முன்னணி நடிகர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. குளோபல் ஒன் ஸடூடியோஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கில் படத்தை தயாரிக்க இருக்கிறது. ஹீரோ இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
 வட இந்தியாவின் பிரபலமான மலைப் பிரதேசங்களிலும், கம்போடியா நாட்டிலும் பிரமாண்ட செட்டுகள் அமைத்து படமாக்கப்பட இருக்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனிமேட்ரானிக்ஸ் நிபுணர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த தகவலை வெளியிட்ட இயக்குனர் பி.வாசு படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார் (அருகில் உள்ள படம் தான் அது). விரைவில் படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது.

No comments :

Post a Comment