கானாபாலா காட்டில் அடைமழை!
வடசென்னையை சேர்ந்த பாலமுருகன் என்கிற கானாபால ஒரு வழக்கறிஞர். கானா பாடுவது அவரது பொழுதுபோக்கு. மெல்லிசை கச்சேரி மேடைகளில் பாடிக் கொண்டிருந்தவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. 2007ம் ஆண்டு பிறகு என்ற படத்தில் ஸ்ரீகாந்த் தேவா வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்தில் இரண்டு பாடல்களை பாடினார். அதன் பிறகு தொடக்கம், வேதா படங்களிலும் பாடினார். ஆனால் அந்த படங்கள் ஹிட்டாகததால் பாடல்களும் மக்கள் காதுக்கு சென்று சேராமலேயே போய்விட்டது.
2012ம் ஆண்டு வெளிவந்த அட்டக்கத்தி, கானா பாலாவின் சினிமா கதவை விரிய திறந்து விட்டது. "ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி..."யும், "நடுக்கடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா..." பாடலும் ஹிட்டாக கானாபாலா கண்டு கொள்ளப்பட்டார்.
அன்றிலிருந்து இன்று வரை 50 படங்களில் சுமார் 75 பாடல்கள் வரை பாடிவிட்டார். 2014ம் ஆண்டில் மட்டும் இதுவரை 30 படங்களில் பாடியிருக்கிறார் சில படங்கள் ரிலீசாக வேண்டியது இருக்கிறது. அதுமட்டுமல்ல பாரீஸ் கார்னர் என்ற படத்தின் ஹீரோவாகவும் ஆகிவிட்டார்.
பாட்டு, ஹீரோ என்று கானாபாலாவின் கேரியர் வேகமாக உயர்ந்து கொண்டிருந்தாலும், அவர் பாடிய பாடல்களுக்கு அவரே ஆட வேண்டும் என்கிற அழைப்புகளும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி பத்து பாடல்களுக்கு குத்தாட்டம் போடுகிறார். பாட்டு எழுதுவதற்கு, பாடுவதற்கு ஆடுவதற்கு என்று பேக்கேஜாக சம்பளம் வாங்கிக் கொள்கிறார்.
அது நியாயமான சம்பளமாக இருப்பதால் வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் "படத்துல கானாபாலா பாட்டு இருக்கா?"ன்னு கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
நண்பர்களின் பைக்கில் பின் சீட்டில் உட்கார்ந்து இதுவரை படப்பிடிப்புக்கும், ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கும் வந்து கொண்டிருந்த பாலா தற்போது விலை உயர்ந்த கார் ஒன்று வாங்க பதிவு செய்திருக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment