காவியத் தலைவன்: கிட்டப்பா, சுந்தராம்பாள் கதை அல்ல: வசந்தபாலன்
அரவான் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் படம் காவியத் தலைவன், சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா ஷெட்டி நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரிலையன்ஸ் மீடியாவும், ஒய்நாட் ஸ்டூடியோவும் இணைந்து தயாரிக்கிறது. பலகோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை ஓசைப்படாமல் எடுத்து வருகிறார் வசந்தபாலன். இந்தப் படம் பழம்பெரும் நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாளின் கதை என்று கூறப்பட்டது.
இதுகுறித்து வசந்தபாலன் எதுவும் சொல்லாமல் மவுனம் சாதித்து வந்தார். இப்போது முதன் முறையாக படம் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: அங்காடி தெரு படப்பிடிப்பின் போது எழுத்தாளர் ஜெயமோகன் என்னிடம் நாடக கலைஞர்களின் வாழ்க்கை பற்றி நிறைய பேசினார்.
மேக்-அப், நாட்டியம், நாடகம், நடிப்பு, கைதட்டல் என அவர்கள் ஒரு வித்தியாசமான உலகத்தில் வாழ்ந்திருந்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை பதிவு செய்ய முடிவு செய்திருந்தேன். அதுதான் காவியத் தலைவன். அரவான் படத்திற்கு முன்பே இந்த படத்தை இயக்க இருந்தேன். இது பெரிய பட்ஜெட் படம். அந்த அளவுக்கு தயாரிப்பாளர் கிடைக்காததால் ஒதுக்கி வைத்திருந்தேன். கிடைத்த உடன் ஆரம்பித்து விட்டேன்.
இது மேடை நாடக கலைஞர்களை பற்றிய கதை. தனிப்பட்ட யாருடைய கதையையும் சொல்லவில்லை. கிட்டப்பாவின் நேரடி வாரிசுகள் இதுபற்றி என்னிடம் கேட்டார்கள். இது அவர்களின் காதல் கதை இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டேன். மொத்த ஆயுளையும் நாடகத்துக்காக அர்ப்பணித்த ஏழைக் கலைஞர்களின் கதை. அதற்குள்ளும் காதல், ஏக்கம், வறுமை, நம்பிக்கை நிறைந்திருக்கிறது. கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் நாடக வாழ்க்கையும், காதலும் சின்ன இன்ஸ்பிரேசன்னு சொல்லிக்கலாம். சித்தார்த்திடம் கொஞ்சம் கிட்டப்பாவின் சாயல் இருக்கும் அதனால் அவரை தேர்வு செய்தேன்.
முக்கிய கேரக்டரில் பிருத்விராஜை கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டார். இசைக்கு முக்கியத்தும் மிக்க படம் என்பதால் ரகுமானும் இசை அமைக்க ஒப்புக் கொண்டார். படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு வசந்தபாலன் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment