அனைவரையும் சிரிக்க வைப்பதே இனி என் கடமை: வடிவேலு
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலு கதா நாயகனாக நடித்து வரும் படம் தெனாலிராமன். இரட்டை வேடங்களில் நடிக்கும் வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி தீக்சித் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை இமானும், ஒளிப்பதிவை ராமநாத் செட்டியும் கவனிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி யுவராஜ் தயாளன் இயக்குகிறார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் வடிவேலு, படத்தின் நாயகி மீனாட்சி தீக்சித், இசையமைப்பாளர் இமான், படத்தின் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் சகோதரர்கள் மற்றும் படக்குழுவினர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் வடிவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2 வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் என்னிடம், ஏன் இந்த 2 வருட இடைவெளி என்று கேட்டனர். நடந்தது எல்லாம் உங்களுக்கே தெரியும். பிறகு புலிகேசி மாதிரியான கதைக்கு நீண்ட நாட்களாக காத்திருந்தேன். அப்போதுதான் யுவராஜ் தயாளன் எனக்கு கதை சொன்னார்.
அவருடைய கதை எனக்கு பிடித்தது அதனால்தான் நடிக்க ஒத்துக் கொண்டேன்.
தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் எனக்கு போன் செய்து நீங்கள் நடியுங்கள், நாங்கள் இப்படத்தை தயாரிக்கிறோம் என்று கூறினர். மேலும் இப்படத்தை தயாரித்தால் படம் வெளிவராது என்று தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து பலர் கூறினர். அதையும் மீறி படம் தயாரித்த ஏஜிஎஸ் சகோதர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இப்படத்தின் நாயகி தேர்வின்போது, பல நடிகைகளை தேர்வு செய்தோம்.
அப்படி தேர்வு செய்த நடிகைகளுக்கு எல்லாம், இவருடன் நடித்தால் படம் வெளிவராது, வந்தால் படம் நன்றாக ஓட விடமாட்டார்கள் என்று கூறினர். அதனாலயே பலர் நடிக்காமல் போனார்கள். ஏஜிஎஸ்.
நிறுவனம் டிக்கெட் போட்டு அழைத்து வந்தால், இங்கு உள்ளவர்கள் சொந்த செலவில் டிக்கெட் போட்டு அவர்களை ஊருக்கு அனுப்பி வைப்பார்கள்.
இவ்வளவு பிரச்சினைகளையும் கடந்து, இப்படத்தில் நடித்த நாயகி மீனாட்சி தீக்சித்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஷூட்டிங் முடிந்து செட்டைக் கலைத்தால் வடிவேலின் படம் நின்றுவிட்டது என்று கூறுவதற்காக வாடகை சைக்கிள் எடுத்து சுற்றியவர்கள் கூட உண்டு.
ஒவ்வொரு வீட்டின் ரேஷன் கார்டுகளிலும் என் பெயர் இல்லையே தவிர, அந்த குடும்பங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் எனக்கு படவாய்ப்பு கொடுக்கவே பயந்தார்கள்.
அந்த நேரத்தில் மலையாளத்தில் இருந்தும், தெலுங்கில் இருந்தும் படவாய்ப்புகள் வந்தன. அந்த மொழி படங்களில் நான் நடித்திருந்தால் வடிவேல் ஊரை காலி செய்துவிட்டு போய்விட்டான் என்று பேசியிருப்பார்கள். அதனால்தான் அந்த படங்களை ஒப்புக்கொள்ளவில்லை.
இவ்வாறு வடிவேல் கூறினார்.
மேலும், அரசியல் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? என்று அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள். நான் ஒரு காமெடி நடிகன். இனி அனைவரையும் சிரிக்க வைப்பதையே கடமையாகக் கொண்டு செயல்படுவேன் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment