'சிவாஜியைப் பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்டுவது!' - சிலாகித்த எம்.ஜி.ஆர்

No comments

திரையுலகில் போட்டி என்பது தமிழ் சினிமாவின் முதல்நாள் காமிராவை இயக்கத் துவங்கியபோது உருவாகிவிட்டது எனலாம். ஒருவகையில் இதுநாள் வரை சினிமாவை வாழவைக்கும் ரகசியங்களில் தலையானது இதுதான். தியாகராஜ பாகவதர் - பி.யு சின்னப்பாவில் தொடங்கி இன்றைய சிம்பு- தனுஷ் வரை இந்த ரகசியத்தைப் பின்பற்றித்தான் தங்கள் ரசிகர் கூட்டத்தை பெருக்கி வந்தனர், பெருக்கி வருகின்றனர்.

இவர்களில் கிட்டதட்ட 3 தலைமுறை கடந்த பின்னரும் தங்களின் ஆதர்ச நடிகருக்காக கொடிபிடித்துவருவது எம்.ஜி.ஆர்- சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளுக்குத்தான். திரையுலகிலும் அரசியலிலும் புகழ்க்கொடி நாட்டி மறைந்தபின்னரும் இன்றும் இது தொடர்ந்து வருவது சினிமா மீதான மக்களின் நேசத்திற்கு உதாரணம். ஆனால் ஆச்சர்யமாக இந்த இருபெரும் நடிகர்களும் தொழில் ரீதியாக தங்களுக்கான போட்டியை தக்க வைத்துக்கொண்டாலும், தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தியவர்கள். எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி மறைந்த அன்று யார் யாரோ வந்து ஆறுதல் சொன்னபோது அமைதியாக நின்றார் எம்.ஜி.ஆர் . 'சிவாஜி வந்தபோது ஒரு பிரளயம் வந்ததுபோல் என்னிடம் அழுகை வெடித்து வந்தது' என சிவாஜியுடனான தன் பாசத்தை  தன் வாழ்க்கைக் கட்டுரை ஒன்றில் வடித்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது, ஒரே தாயின் வயிற்றில் உண்டு வளர்ந்த எங்களை அரசியல் பிரித்துப் பார்த்துவிட்டது என சிவாஜி கண்ணிரோடு கட்டுரை எழுதினார் சினிமா சஞ்சிகை ஒன்றுக்கு.


தம்பி என வாஞ்சையாக அழைத்தார் எம்.ஜி.ஆர். ‘ அண்ணா’ என அதை வழிமொழிந்தார் சிவாஜி. இப்படி தொழில் போட்டியை மீறி ஒருவருக்கொருவர் அன்பு காட்டிய சந்தர்ப்பங்களில் ஒன்று, சிவாஜியின் அமெரிக்க பயணத்தின்போது எம்.ஜி.ஆர் செய்த நெகிழ்வான செயல். அமெரிக்கா சென்று திரும்பிய சிவாஜிக்கு நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளித்த எம்.ஜி.ஆர், அவர் பொறுப்பாசிரியராக இருந்த ‘நடிகன் குரல்’ இதழில் சிவாஜி பற்றி அருமையானதொரு கட்டுரை எழுதினார். ஈகோவின்றி சிவாஜியை புகழ்ந்து எம்.ஜி.ஆர் எழுதிய இந்தக் கட்டுரை சிவாஜி என்ற மகாநடிகனை மட்டுமல்ல, மனிதநேயர் எம்.ஜி.ஆரின் குணத்தையும் வெளிப்படுத்துகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி  என்ற இருபெரும் ஆளுமைகளின் ஆரோக்கியமான இந்த உறவை இன்றைய இளம்தலைமுறை சினிமா நடிகர்களும் பின்பற்றலாம்.

அப்படி என்ன எழுதினார் எம்.ஜி.ஆர்...

“ தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. - இது குறள்

- நாம் எடுத்துக்கொள்ளும் பொறுப்பில் புகழோடு விளங்க வேண்டும் என்பது தான் அக்குறளின் உட்பொருள். தம்பி கணேசன் அவர்கள் இக்குறளுக்கு முற்றிலும் பொருத்தமான தகுதி பெற்றவர். இன்று புகழ் குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய் திகழும் இவர், பல்லாண்டுகளுக்கு முன்னரே, முன்னேற்றத்தின் முன்னோட்டமான அடிப்படைத்திறமைகள் பெற்றிருந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அந்த நாளில், கவியின் கனவு நாடகத்தைப் பலரும் பார்த்திருப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். அந்த நாடகத்தில் தம்பி கணேசன் ஏற்றுக்கொண்ட பாத்திரம் அனுதாபமோ, பாராட்டுதலோ பெறத்தக்க பாத்திரமல்ல. மேலும், இப்போது போல அப்போது விளம்பரம் பெற்றிருக்கவும் இல்லை. ஆயினும், நாடகத்தை பார்க்கும் மக்கள் அவரை மறக்க முடியாத நிலையில், அந்தப் பாத்திரத்தில் நடித்து, அவரது நடிப்பால் மக்கள் மனதில் நிலைநிறுத்திக் கொண்டுவிடுவார் அவர்.

மனோகரா நாடகத்தை எடுத்துக்கொள்வோம். பத்மாவதி வேடம் ஏற்றுக்கொண்டு, தாய்மையுணர்வையும், பாசத்தையும் நெஞ்சுருகப் பொழிந்து. வீறுகொண்டெழும் மகனை அடக்கி. “ஏந்தியவாளை இறக்கு; மறுப்பாயாகில், இதே வாளால் உன்னைப் பெற்றெடுத்த தாயான என்னை முதலில் வெட்டி வீழ்த்தி விட்டு உன் விருப்பம் போல் செய்” என்று அவர் கூறுகிற கட்டம் ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாது. ஆண் ‘ஆண்’ ஆக நடிப்பது இயற்கை. பத்து அல்லது பன்னிரண்டு வயதில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபடி பெண் வேடம் தாங்கி நடிப்பது, ஓரளவுக்குப் பொருத்தமாகவும் தோன்றலாம். மேலும், அலங்காரம் செய்து, பூச்சூடி, சிறுவனைச் சிறுமி போலத் தோற்றுவிப்பது இயற்கையான நடிப்புக்கு உதவி செய்ய முடியும். அதோடு இனிமையான இளங்குரலுக்கூடச் சிறுவர்களுக்கு ஒத்துழைக்கும்.

ஆனால், வாலிப வயதை அடைந்த ஓர் ஆண் ‘பெண்’ணாக நடிப்பது அவ்வளவு சுலபமல்ல. இனிமையான குரல்மாறி, கடினமான குரலாக ஆகியுள்ள பருவத்தில் இயற்கைக்கே எதிராக, இயற்கையோடு போராடி, இயற்கையாக நடித்துப் புகழ்பெற்றார் அவர் என்றால் அது மிகப்பெரிய சாதனையே ஆகுமல்லவா? அன்று நாடக மேடையில் எல்லாத்தரப்பு வேடங்களிலும் தனிச் சிறப்போடு நடித்துத் தனது நடிப்பால், ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கும், நாடகத்திற்குமே பொலிவூட்டியவர் தம்பி கணேசன். மேடையில் பயங்கரச் சண்டைக் காட்சிகளிலும் துணிந்து நடித்தவர். பெரும் புகழும், பெருமையும் எதிர்காலத்திலும் அவரை அடையப்போகின்றன என்பதற்கும் முன்னறிவிப்பான தகுதிகளாக இருந்தவை இவை.

நல்ல குணங்கள் உள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறப்படலாம். பாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரும் இடம்பெறுவது இயற்கை என்று சொல்லப்படலாம். ஆனால், மக்களால் வெறுக்கப்படும் பாத்திரத்தைத் தாங்கி, மக்கள் இதயத்தில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். ‘திரும்பிப் பார்’ என்னும் படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார்.

பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்குமளவுக்கு, ‘ஆங்கில பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

ஆங்கிலப் பாணியின் சாயல் ஆங்காங்கே இருக்குமானால், அது ஆங்கிலப் படங்களைப் பார்த்துத்தான் பிறந்ததென்று எப்படிக் கூறமுடியும். சிறப்புக்குரிய பயிற்சியாலும், உழைப்பாலும் அப்படிப் போற்றத்தக்க திறமை உண்டாயிற்று என்று உணர்வது தானே முறையும், பண்புமாகும். மேலும், நடிப்பு என்பது என்ன? கற்பனை தானே! ஏதோ ஒன்றிலிருந்து பிறந்து அல்லது பிரிந்து அதிகமாவதுதான் கற்பனை. நடிகராயினும், எழுத்தாளராயினும் புதிதாக ஒன்றைப் படைப்பவர்கள் எல்லோருமே காண்பனவற்றை ஊடுருவி நோக்கும் நுண்புலனும், காணாதவற்றைத் தோற்றுவிக்கும் செயல் திறனும் பெற்றிருப்பது இயற்கை. ஆதலால், “இது அந்தப் பாணி, இந்தப் பாணி’ என்று மேலெழுந்தவாரியாக விமர்சிப்பது தவறாகும்.

தம்பி கணேசன் நாடகத்தில் நடித்தபோது அந்த நடிப்புக்குப் பாராட்டு குவிந்தது. சினிமாவில் நடிக்கு முன்பு வேறு நடிகர்களுக்குக் குரல் கொடுத்தபோது அந்தக் குரலுக்குப் பெருமை. பிறகு சினிமாவில் நடிக்கத் துவங்கியபோதும் வெற்றிப்படிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தன. எந்த நிலையிலும் தான் ஏற்கும் கலைத் தொழிலில் தனக்கென்று ஒரு ஸ்தானத்தைப் பெறக்கூடிய தகுதி அவரிடம் வேரூன்றியிருந்தது. அமெரிக்க அரசாங்க விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி வரவேற்பும், பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்?” என்று கேள்வி கேட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை.

உண்மையைப் புரிந்துக் கொள்ளாத சிலரால் எழுப்பப்பட்ட அதுபோன்ற கேள்விகளுக்கு, ஆனந்த விகடனைப் போன்ற பத்திரிகைகள் நேர்மையான பதிலைத்தர முனைந்ததற்காக, நடிகர் சங்கத்தின் சார்பில் நன்றி செலுத்திக் கொள்கிறேன். இன்னின்னார் இப்படியிப்படிப் பேசியதாகப் பகுத்து உரையாடலின் வடிவத்திலே தம்பி கணேசனின், சிறப்புப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். எல்லோருக்கும் பொதுவில் நான் ஒன்றிரண்டு சொல்லிகொள்ள விரும்புகிறேன்.
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் அல்ல இப்போது இருப்பவர்கள்; அதாவது, மக்களின் விருப்பம், தேவை, ஆசைக் கனவுகள் இவையாவும், முன்பு இருந்ததைப் போலில்லாமல், வெவ்வேறு வகையில் மிகமிக வளர்ந்து பெருகியிருக்கின்றன. அப்படிப்பட்ட ஆசைகளில் ஒன்றுதான் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டவரும், தங்கள் தொழில் போற்றப் படவேண்டும், மற்றத்தொழில் வல்லுநர்களால் கவுரவிக்கப்பட வேண்டும் என்று கொள்ளும் ஆசையும்.


மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்று அடிப்படைகளின் மீது தோன்றி, அவற்றைச் சார்ந்ததாக விளங்குவதே நடிப்புக்கலை, நாடகத்திலோ, சினிமாவிலோ நடிக்கிற ஒருவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பாரானால், அவருக்கு வருகிற பெருமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற அத்தனை பேர்களுக்கும் வருகிற பெருமையாகும். அவர் தமிழைத்தாய் மொழியாகக் கொண்டிருக்கிறார் என்னும்போது, ‘தமிழன்’ என்ற இனத்தைச் சார்ந்தவராகிறார். தமிழ் இனத்தைச் சேர்ந்த அவருக்குக் கிடைக்கக்கூடிய பெருமைகள் யாவும் தமிழினத்திற்கு, அதாவது, நமக்கு வழிகாட்டியாக விளங்கிய முன்னோருக்கும், இன்று நம்முடன் இருந்து வாழ்வோருக்கும், இக்கலையை இனி பின்பற்றப்போகும் எதிர்காலத்தவருக்கும் உரிய பெருமையாகும்.



தமிழ்ப்பண்பாடு உலகத்திலேயே மிகச் சிறந்த பண்பாடு என நல்லோர்களாலும், வல்லோர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தகைய பண்பாட்டைத் தாய்மொழியாம் தமிழில் தமிழ் இனத்தைச் சேர்ந்த தமிழன் எடுத்துச்சொல்லி, அதற்காகப் பாராட்டப்பட்டால், அது தமிழ்மொழிக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ்ப்பண்பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு ஆகும் அல்லவா? ”இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் சிவாஜி கணேசன் யார்?” என்ற கேள்வி பிறக்கும்போது, “அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப்பண்பாடு!” என்ற பதில்தான் கிடைக்கும். அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு!

வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் கலாசாரக் குழுவினருள் தமிழர்களுக்கு ஏன் இடமளிப்பதில்லை என்றெல்லாம் பலகாலமாகவே இந்திய அரசினரிடம் கேட்டு வந்தோம். தந்திகள் கொடுத்தும் கேட்டோம். கடிதங்கள் அனுப்பியும் வினவினோம். நல்ல தரமுள்ள பல்வேறு பத்திரிகைகள் கூட இந்தக் கருத்தை வற்புறுத்தின. அவைகளுக்கெல்லாம் வெற்றியாக, உலக வல்லரசுகளுக்கிடையே முக்கியமானதெனக் குறிப்பிடத்தக்க தகுதியைப் பெற்றுள்ள அமெரிக்க அரசாங்கம், ஒரு தமிழ் மகனை, அதிலும் ஒரு நாடக சினிமா நடிப்புக் கலைஞனை அரசாங்க விருந்தினர் என்ற அந்தஸ்தோடு அழைத்துப் பெருமைப் படுத்தியது இதுவரை எந்தத் தமிழ் நடிகனுக்கும் கிடைக்காத ஒரு பெரும் பேறு. அதனைப்பெற்ற தம்பி கணேசனை வரவேற்காமல் வேறு யாரை வரவேற்பது? அவரைப் பாராட்டாமல் வேறு எவரைப் பாராட்டுவது? அவருக்குப் புகழ்மாலை சூட்டாமல் வேறு யாருக்குச் சூட்டுவது?



எதிலும் குறை காண்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். உண்மையில் அவர்கள் தான் மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறவர்கள்! அந்தத் துணைதான் இன்றைய தினம் சிவாஜி கணேசன் அவர்களை அமெரிக்கா வரை அழைத்துச் சென்றிருக்கிறது.
முன்னர் கலைவாணர் அவர்கள் முதன்முதலாக ரஷ்ய விஜயம் செய்து திரும்பியபோது, சென்னைக் கடற்கரையிலும், மற்றப் பொதுவிடங்களிலும் பெரும் பாராட்டு விழாக்கள் நடத்தி மகிழ்ந்தோம்.

அதற்குப் பிறகு அவ்வப்போது சில நடிகமணிகள் ஒருசில அயல்நாடுகளுக்குச் சென்று திரும்பிவந்த போது, பெரும் விழாக்கள் நடத்தவில்லை என்றாலும், நமது நன்மதிப்பைத் தெரிவித்தோம். இப்போது சிவாஜி கணேசன் அவர்களோ, சரித்திரத்திலேயே முதன் முறையாக அமெரிக்க அரசினரால் அழைக்கப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி மிகவும் போற்றத்தக்கதால் விசேஷமாக விழா நடத்தினோம்.

இனி அடுத்தடுத்துச் செல்பவர்களையும், பாராட்டவே விரும்புகிறேன். முதன் முறையாகச் சென்று நம்மவருக்குப் புகழ்திரட்டி வந்த காரணத்தால் தம்பி கணேசனுக்கு இப்பெரும் விழாவை நடத்தினோம். இந்த அளவுக்கு விரிவாகச் செய்யமுடியாவிடினும் இதயங்கனிந்த பாராட்டுக்களை இனிச் செல்வோருக்கு எப்போதும் வழங்கக் காத்திருக்கிறேன்.

தம்பி கணேசனுடைய புகழ் இன்னும் மேலோங்கட்டும்! அவர் நீடூழி வாழ என் அன்னையை இறைஞ்சுகின்றேன்”






No comments :

Post a Comment