ரஜினி, கமலுக்கிடையே விஜயகாந்த் வல்லரசானது எப்படி?

No comments

விஜயகாந்திற்கு இன்று 65-வது பிறந்தநாள். சினிமா, அரசியல் என தனி மனிதனாக அவரது அசுர வளர்ச்சி எல்லோருக்கும் ஆச்சர்யமூட்டும் ஒன்று. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாராயணனாகப் பிறந்த இவரை வீட்டில் எல்லாரும் விஜயராஜ் என்றே அழைத்துவந்தனர். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு தனது அப்பாவின் அரிசி ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவருக்கு, அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா வைத்த பெயர்தான் விஜயகாந்த்.

1980-ல் வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் ஓர் அதிரடி நாயகனாக விஜயகாந்த் அறியப்பட்டது 1981-ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் இருந்துதான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படமான இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இதன் இந்திப் பதிப்பில் ரஜினிகாந்தும், தெலுங்குப் பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்தனர். விஜயகாந்த்-எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி இணைந்து அதே ஆண்டில் 'சாதிக்கொரு நீதி', 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'நீதி பிழைத்தது' என மூன்று திரைப்படங்களை வெளியிட்டது. ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்பதுபோல், விஜயகாந்திற்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார். இதே போல் 'சிவப்பு மல்லி' தந்த வெற்றியால் ராம நாராயணன் இயக்கத்திலும் இவர் 17 படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனையாக உள்ளது. தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்ததால் 1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் 'புரட்சிக்கலைஞர்' என அழைக்கப்பட்டார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இத்தனைக்கும் இவரது படங்கள் சில தெலுங்கில் டப்பாகி ஆந்திர தேசத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தன. அங்கிருந்து வாய்ப்புகள் வந்தபோதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

ரஜினி-கமல் போட்டிக்கு நடுவே தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வெற்றி கண்டவர் விஜயகாந்த். 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அது ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெருகியதாலோ என்னவோ... அதன்பின்பு பல திரைப்படங்களிலும் சண்டைக்காட்சிகளில்தான் விஜயகாந்தின் அறிமுகமே இருக்கும். சுவரில் கால்களை ஊன்றி எம்பிக்குதித்து எதிரிகளை தனது கால்களால் பந்தாடுவது இவரது ட்ரேட் மார்க்காகவே இருந்தது. கிராமங்களின் ஊர்த் திருவிழாக்களில் ரஜினி-கமல் படங்களைத் திரையிட பெரிய சண்டையே நடக்கும். அந்த நேரத்தில் விஜயகாந்த் திரைப்படம் எதாவது ஒன்றைத் திரையிட்டு கிராமத்தின் மொத்தக் கூட்டத்தையும் சண்டையின்றி உட்கார வைப்பது ஒரு ட்ரிக்காகவே பயன்பட்டு வந்தது. கிராமப்புறங்களில் 'ஜ' உச்சரிப்பு சரியாக வராததால் இன்றளவும் பலருக்கு அவர் விசயகாந்த் தான்.



புதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும். ஆபாவானன் - ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்' போன்ற திரைப்படங்களும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' போன்ற வெற்றிப்படங்களை அளித்தவர் விஜயகாந்த். ஒருகாலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாந்தின் அலுவலகம்தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆக்ஷன் ஹீரோ ஆக முடியாது என்பது கோலிவுட்டில் எழுதப்படாத விதி. அந்த வகையில் போலீஸ், ராணுவம் என யூனிஃபார்ம் அணிந்து நியாயத்திற்காகப் போராடும் கதாபாத்திரத்தில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த் தான். இன்றும் போலீஸ் வேடமென்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் வந்து நிற்பது விஜயகாந்தாகத்தான் இருக்கும். தனது 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் 'கேப்டன்' ஆக ப்ரோமோசன் கிடைத்தது. ரஜினியின் 100-வது படமான 'ராகவேந்திரா', கமலின் 100-வது திரைப்படமான 'ராஜபார்வை' போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி கண்டிருந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்குத்தான். 'ஊமை விழிகள்', 'புலன் விசாரணை', 'செந்தூரப் பூவே', 'சத்ரியன்' போன்ற படங்களில், தனது நிஜ வயதைவிட அதிகமான வயதுடைய கதாபாத்திரங்களில் நடித்தார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் ஹீரோ சாவதையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றிருந்த காலகட்டத்திலேயே 'செந்தூரப் பூவே', 'வைதேகி காத்திருந்தாள்', 'ரமணா' மற்றும் பல திரைப்படங்களில் அப்படி நடித்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்.

நடிகர் சங்கத் தலைவர்:
சூப்பர்ஸ்டார், உலகநாயகன் உட்பட திரைப்படத் துறையினர் இன்றும் விஜயகாந்தை 'விஜி' என்றுதான் அழைப்பார்கள்.  1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.

அரசியல் அவதாரம்:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த். 2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு நிக்காமல் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். தனது ரசிகர்மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் கட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.

சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன்கோபத்தாலும், உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம். இதையெல்லாம் விட இன்று 'மீம்ஸ்' விஜயகாந்தாய் சித்தரிக்கப்படுவது காலத்தின் சோகமான நீட்சி.

ஆனாலும் அழுத்தமாகச் சொல்வோம்... பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்!



No comments :

Post a Comment