முதன்முதலாக ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப்படத்தின் இயக்குநர் இவர்! ------ஏ.சி.திருலோகச்சந்தர் நினைவலைகள்

No comments






'அவருக்கு பதில் இவர்' என்று டிவி சீரியல்களில் சர்வ சதாரணமாக கதாபாத்திரங்களுக்கு ஃபிரேம் போட்டு மாட்டிவிடுகிறார்கள் இன்று. ஆனாலும் அது கதையோட்டத்தில் சிறு கீறலையாவது ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால் சுமார் 35 வருடங்களுக்கு முன் திரைப்படம் ஒன்றில் அந்த விஷப்பரீட்சையை நிகழ்த்தவேண்டிய நிர்பந்தம் ஒரு பிரபல இயக்குனருக்கு உருவானது. அந்த திரைப்படம்தான் 'அவருக்கு பதில் இவர் ' கலாச்சாரத்தை துவக்கி வைத்த முதல் திரைப்படம்.

பெரிய இயக்குனரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான அந்தத் திரைப்படம் முக்கால் பாகம் முடிந்திருந்த நிலையில், வெளிநாட்டிற்குக் கலைநிகழ்ச்சி ஒன்றிற்கு புறப்பட்டுச் சென்ற கதாநாயகி மறுநாள் விமான விபத்தில் மரணமடைந்த தகவல் வந்து சேர்ந்தது. பழகிய ஒரு பெண் மரணமடைந்த சோகம் ஒரு பக்கம். இனி படத்தின் நிலை என்ன என்ற குழப்பம் ஒரு பக்கம்.  லட்சங்களில் படமெடுத்துவந்த அந்தக்காலத்தில் பல லட்சம் முதலீடு முடங்கிப்போனால் அது ஒரு தயாரிப்பாளரின் வாழ்வை முடித்துவிடும். சோர்ந்து உட்கார்ந்தார் இயக்குனர்.

சில மாத ஓய்வுக்குப்பின் படத்தின் கதாநாயகன் சிவகுமார் அந்த இயக்குனரை தேடி வந்தார். தான் ஒரு நடனக்குழு பெண்ணைக் கண்டதாகவும் அவர் ஒரு சாயலில்  கதாநாயகிபோல இருப்பதாகச் சொல்ல நிமிர்ந்து உட்கார்ந்தார் இயக்குனர். அந்தப் பெண்ணை வைத்து மீதிப்படத்தை முடித்தார். படத்தைப் பார்த்தவர்கள் இரண்டு பெண்களுக்கும் இடையே குறைந்தபட்சம் 6 வித்தியாசங்களைக் காணக் கூடத் திணறினர். அத்தனை தத்ரூபம். பாராட்டு முழுவதும் அந்த இயக்குனரை போய்சேர்ந்தது. காரணம் வித்தியாசம் தெரியாதபடி திட்டமிட்ட கேமிரா கோணங்கள், வசன பாணி, நடை, உடை பாவனை என அத்தனையும் மாற்றி பழைய கதாநாயகியாகவே அந்தப் பெண்ணை உலவ விட்டிருந்தார் திரையில்.
அந்த இயக்குனர் ஏ.சி திருலோகசந்தர். ஆற்காடு செங்கல்வராய முதலியார் திருலோகசந்தர்தான், ஏ.சி.டி என அந்நாளில் அழைக்கப்பட்ட ஏ.சி.திருலோகசந்தர். நெடுநெடு உயரம், கம்பீரத் தோற்றம், பின்னோக்கி வாரப்பட்ட படர்ந்த தலைமுடி, இதுதான் ஏ.சி.டி.



தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் 60 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஏ.சி திருலோகசந்தர் தனது 86 வயதில் நேற்று காலமானார்.

சென்னை புரசைவாக்கத்தில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த திருலோகசந்தரை ஐ.ஏ.எஸ். ஆக்க விரும்பியது அவரது குடும்பம். ஆனால் விதி வேறுவிதமாக அவரது வாழ்க்கையை மாற்றியது. ஆங்கில நாவல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்ட அவரது தாயார் சிறுவயதில் ஏ.சி.டியை படிக்கச் சொல்லிகேட்பது வழக்கம். இந்த பழக்கம் திருலோகசந்தரையும் வாசிப்பு பழக்கத்திற்கு அடிமையாக்கியிருந்தது. படிக்க ஆரம்பித்தவர் எழுத ஆர்வம் கொண்டார். பள்ளிவயதிலேயே சந்திரா என்ற புனை பெயரில் பத்திரிகைகளுக்குக் கதை, கட்டுரை எழுத ஆரம்பித்தார். அந்நாளில் எழுதி அகில இந்திய வானொலியில் அவர் பெற்ற சம்பளம் பத்து ரூபாய். அன்று இதில் சில சவரன் நகைகளை வாங்கிவிடலாம்.

எழுத்தார்வத்தோடு படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்தார் ஏ.சி.டி. பள்ளிப்படிப்புக்குப்பின் கல்லுாரிப்படிப்பை முடித்து  ஐ.ஏ.எஸ் தயாரானவருக்கு வயது காரணமாக அந்த வருடம்  ஐ.ஏ.எஸ் எழுத முடியவில்லை.
பக்கத்து தெருவில் வசித்துவந்த பள்ளி நண்பன் ராஜகோபாலின் வீட்டிற்கு அவர் அடிக்கடி செல்வது வழக்கம். அவரது தந்தை பத்மநாப ஐயர் அப்போது திரைப்படம் தயாரித்துவந்தார். குமாரி என்ற அந்த படம் துவங்கும் தருவாயில் இருந்தது. படத்தின் இயக்குனரும் அவரேதான். எழுத்தார்வம் உள்ள தன் நண்பனை பற்றி ராஜகோபால் தன் தந்தையிடம் ஏற்கனவே சொல்லிவைத்திருந்ததால் ஒருநாள், 'என் படத்தில் பணியாற்றச்சொல்' என அவர் கூப்பிட்டனுப்பினார். தனக்கு ஐ.ஏ.எஸ் படிக்கவே ஆசை என அந்த வாய்ப்பை மறுத்தார் ஏ.சி.டி. 'இன்னும் ஒரு வருடம் இருக்கிறதல்லவா அதற்குள் படம் முடிந்துவிடும். பிறகு படிக்கப்போகலாம்' என நண்பன் வற்புறுத்த,  படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவராக சேர்ந்தார் ஏ.சி.டி.

பெயருக்குதான் உதவி இயக்குனர் வேலை. ஆனால் படத்தின் எல்லா வேலைகளையும் அவர் செய்யவேண்டியிருந்தது. திரைப்படம் என்ற கவர்ச்சி மீடியத்தை அவர் புரிந்துகொள்ள அந்த பணிகள் உதவியாக இருந்தது அவருக்கு.

படத்தின் கதாநாயகன் அப்போது வளர்ந்துவந்துகொண்டிருந்த நடிகர் எம்.ஜி.ராம்சந்தர். ஆம் அப்போது எம்.ஜி.ஆரின் பெயர் அதுதான். படப்பிடிப்பில் ராஜ உடையில் நடிக்கவேண்டிய எம்.ஜி.ஆர் தன் வழக்கமான உடை மற்றும் தான் அணிந்திருந்த நகைகளை ஏ.சி.டியிடம்தான் கழற்றிகொடுப்பார். ஏ.சிடியின் ஏதோ ஒரு குணம் எம்.ஜி.ஆரை கவர்ந்திருந்தது. ஓய்வின்போது ஏ.சி.டியின் வாசிப்பு ஆர்வத்தை கேட்டு ஆச்சர்யமாவார் எம்.ஜி.ஆர். பின்னாளில் ஏ.வி.எம் மின் 50 வது படமாக, குறிப்பாக அந்நிறுவனத்தின் முதல் கலர்ப்படமாக வெளிவரப்போகும் படத்தின் இயக்குனர் ஏ.சி.டி என்பதும் கதாநாயகன் எம்.ஜி.ஆர் என்பதும் இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் இருவருக்கும் அது ஆரம்பகாலம். அதுதானே வாழ்வின் சுவாரஸ்யம்.



குமாரி படத்திற்குப்பின் ஏ.சி.டிக்கு சினிமா மீது ஆர்வம் அதிகமாகியிருந்தது. இப்போது ஐ.ஏ.எஸ் கனவை மூட்டை கட்டி வைத்திருந்தார். பத்மநாப ஐயர் படத்தயாரிப்பை நிறுத்தியபின் சற்று இடைவெளியில் ஏ.சி.டி, பச்சையப்பன் கல்லுாரியில் முதுகலை முடித்திருந்தார். திரைத்துறையில் இன்னொரு நண்பரான அபிபுல்லா மூலம் மீண்டும் சினிமா வாய்ப்பு கதவைத் தட்டியது. அபிபுல்லா பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜூபிடர் பிக்சர்ஸ் நிர்வாகியின் மகன். ஏ.சி.டிக்கு நெருங்கிய நண்பன். ஏற்கனவே குமாரி அனுபவத்தை கேள்வியுற்றிருந்த அபிபுல்லா தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற ஏ.சி.டிக்கு அழைப்பு விடுத்தார்.

பெரிய நிறுவனம், நண்பனின் அழைப்பு... தட்டாமல் வேலைக்கு சேர்ந்தார் ஏ.சி.டி...கதை விவாதக்குழுவில் வேலை. அக்காலத்தில் பிரபல நிறுவனங்கள் கதை விவாதத்திற்காக தேர்ந்த கதை ஞானமுள்ளவர்களை கொண்ட குழுவை வைத்திருந்தது. தொடர்ந்து அந்நிறுவனங்களில் படங்களில் பணியாற்றி தன் இயக்குனர் ஆர்வத்திற்கு தேவையான அடிப்படைய விஷயங்களை கற்றுத்தேர்ந்த ஏ.சி.டி, சினிமா தொழில்நுட்பம் தொடர்பான நுால்களை தேடித்தேடிப் படித்து அதிலும் தனது அறிவை வளர்த்துக்கொண்டார்.


இயல்பில் நல்ல பின்னணி, மெத்தப்படிப்பு இந்த குணங்களால் சினிமாவில் சில விஷயங்களில் தனித்த குணத்துடன் இயங்கினார் ஏ.சி.டி. அவரது குணத்தை சோதிக்கும்படி, ஜூபிடர் பிக்சர்ஸின் படமொன்றின் தயாரிப்பின்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. அது உண்மையிலேயே அவரது வாழ்க்கையை முடிவு செய்கிற விஷயமும் கூட. படம் துவங்கி நடந்துவந்த நிலையில் பிரபலமான அந்த இயக்குனருக்கும் நிறுவனத்திற்கும் முட்டல் மோதல் எழுந்தது. நவீனத்தை விரும்பும் அந்த இயக்குனரின் சில காட்சியமைப்புகளை நிறுவனம் விரும்பவில்லை. இயக்குனரும் விடாப்பிடியாக நின்றார் தன் விஷயத்தில். பனிப்போர் முற்றிய நிலையில் இயக்குனர் சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அதிருப்தியடைந்த தயாரிப்பாளர்கள் ஏ.சி.டியிடம் வந்தனர். “இனி அவருடன் ஒத்துபோகமுடியாது.  தொடர்ந்து இந்த படத்தை நீங்களே இயக்குங்கள்” எனக் கூறினர்.

உண்மையிலேயே இப்படி ஒரு சந்தர்ப்பம் உதவி இயக்குனர் வாழ்வில் பெரும் அதிர்ஷ்டம். பிரபல நிறுவனம், பெரிய பட்ஜெட் படம் நல்ல கதை...வேறுயாராக இருந்தாலும் ஒப்புக்கொண்டு படத்தை தொடர்ந்திருப்பர். ஆனால் ஏ.சி.டி நிதானத்துடன் அதை மறுத்துவிட்டார். 'இது நாகரிகமில்லை. உங்களுக்குள்ள பிரச்னையில் நான் இப்படி வாய்ப்பு பெற்றால் நம்பிக்கையுடன் சென்றுள்ள அவர் எத்தனை வேதனைப்படுவார். அவருடன் கலந்துபேசி படத்தை இயக்கவையுங்கள். நான் உதவியாளராகவே தொடர்கிறேன்' -தீர்க்கமான சொன்னார் ஏ.சி.டி.

சினிமாத்துறையில் அரிதான இந்த குணம் கண்டுபிரமித்துப் போனார்கள் தயாரிப்பாளர்கள். முடியும் தருவாயில் இந்த விஷயம் தெரியவந்து ஏ.சி.டியை சந்தித்து கட்டித்தழுவி உருகினார் அந்த பிரபல இயக்குனர். 'நீ நல்லா வருவே திருலோக்...சினிமாவில் உனக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு' என ஆசிர்வதித்தார் அந்த மேதை. அடுத்த 10 ஆண்டுகளில் அது நிகழ்ந்தது. நிற்க நேரமின்றி  தமிழ் தெலுங்கு மலையாளம், இந்தி என அத்தனை மொழி கதாநாயகர்களை ஆட்டுவித்தார் ஏ.சி.டி

இத்தனை இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் பணிபுரிந்தாலும் ஏ.சி.டி பிரமித்து மிரண்டுபோயிருந்தது அந்நாளில் பிரபல இயக்குனரான எல்.வி. பிரசாத்த்தின் இயக்கத்தை பார்த்துதான். சினிமாத்துறையில் சில வருட அனுபவங்களோடு அவரது வீட்டுக்கதவை தட்டினார் ஒருநாள். நான் உங்களிடம் உதவியாளராக சேரவேண்டும்...அது என் பாக்கியம் என்றார். 'என்னிடம் தேவையான ஆட்கள் இருக்கிறார்கள் தம்பி. உன்னை வேலைக்கு எடுத்துக்கொண்டால் இன்னொருவர் வேலை இழக்கவேண்டிவருமே... பரவாயில்லையா' என்றார் எல்.வி. பிரசாத் வழக்கம்போல் தன் சன்னமான குரலில்.

‘சரி.. ஆனால் என்றைக்கும் நீங்கள்தான் என் துரோணாச்சாரியார். நான் உங்கள் ஏகலைவன். நன்றி வருகிறேன்” என்று கிளம்பிவிட்டார் ஏ.சி.டி.  இதுதான் அந்நாளைய தமிழ்சினிமா. நேர்மை, நம்பிக்கை, நாணயம் என இயங்கிவர்கள் நிரம்பியிருந்த காலகட்டம்!

ஏ.சி.டியின் தன்னம்பிக்கை வழிந்த அந்த வார்த்தைகள் பின்னாளில் பலித்தது. தன் படப்பிடிப்பிற்கு அருகே ஏ.சி.டியின் படப்பிடிப்பு நடந்தால் எல்.வி பிரசாத் மறக்காமல் அங்கு வந்து ஏ.சி.டியின் இயக்கத்தை பார்த்து ரசிப்பார். 'சொன்னதை நிரூபிச்சிட்டியே' என தட்டிக்கொடுத்துவிட்டு செல்வார்.



ஜூபிடர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின் நடிகர் அசோகனின் நட்பு கிடைத்தது ஏ.சி.டிக்கு. அசோகனும் அந்நாளில் டிகிரி படித்தவர். மணிக்கணக்கில் உலக விஷயங்களை பேசும் நட்பு அவர்களுடையது. அறிவாளிகளை அணைத்துக்கொள்ளும் சுபாவம் கொண்ட ஏ.வி.எம் சரவணனுக்கு ஏ.சி.டியை அசோகன் அறிமுகப்படுத்தி வைக்க ஏ.வி.எம் பேனரில் ஏ.சி.டியின் முதல்படம் விஜயபுரிவீரன் வெளிவந்தது. வாள்வீச்சில் எம்.ஜி.ஆருக்கு இணையான திறமைபெற்ற ஆனந்தன் கதாநாயகன்.
விஜயபுரிவீரன் வெற்றிக்குப்பின் திரையுலகில் ஏ.சி.டி காலம் தொடங்கியது. ஏ.வி.எம் பேனரில் தொடர்ந்து ஏ.சி.டியின் படங்கள் வெளியாகி சக்கைபோடு போட்டன. குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் பெயர் பெற்றவரானார் ஏ.சி திருலோகசந்தர். 'உருக்கமான சம்பவங்கள்', 'நேர்த்தியான திரைக்கதை, திறமையான கலைஞர்கள், விரசமில்லாத காட்சியமைப்புகள் இவற்றின் ஒரு கலவையாக ரசிகர்களுக்கு படங்களை தந்தார் ஏ.சி.டி.

வீரத்திருமகன் விஜயபுரிவீரன், நானும் ஒரு பெண், தெய்வ மகன், எங்கிருந்தோ வந்தாள், இருமலர்கள், பாபு, பாரதவிலாஸ், அன்பே வா, பத்ரகாளி, எங்க மாமா போன்ற அவரது படங்கள் தமிழ் ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாதவை. ஏ.வி.எம் பேனரில் முதல் கலர்ப்படம் எடுக்க நினைத்தபோது மெய்யப்ப செட்டியாருக்கு நினைவுக்கு வந்த கதாநாயகன் எம்.ஜி.ஆர். இயக்குனராக நினைவுக்கு வந்தவர் ஏ.சி.டி...எம்.ஜி.ஆருக்கான கதை ஏ.சி.டி யிடமே கைவசம் இருக்க எம்.ஜி.ஆர் பாணி படங்களுக்கான எந்த அடையாளங்களுமின்றி அன்பே வா வெளியானது.



படத்தின் கதாநாயகி கதாநாயகனை தேடிவந்து காதலிக்கவில்லை...கதாநாயகன்தான் கதாநாயகியை துரத்தி துரத்தி காதலித்து உருகுகிறான். அம்மா...என்ற உரக்க குரலெடுத்து சுவரில் சாய்ந்து கதாநாயகன் கண்ணீர் விட்டு கதறவில்லை. அப்பாவை கொன்றவனை பழிவாங்க புறப்படவில்லை.மொத்தத்தில் இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு அப்பா அம்மா கதாபாத்திரங்களே இல்லை. படத்தில் வரிசைகட்டி எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாடவில்லை...மாறாக திட்டிப் பாடினர்.

இதைவிட அதிசயம் இதில் கதாநாயகன் ஏழை எளியவர்களுக்கு குரல்கொடுக்கும் ஏழைப்பங்காளன் இல்லை; பெரும்பணக்காரன்! எம்.ஜி.ஆர் ஃபார்மூலாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட  விஷயங்கள் இருந்தும் படம் சூப்பர் ஹிட்.

தனது படங்களின் வெற்றி ஃபார்முலா எதுவும் இல்லாதபோதும் எம்.ஜி.ஆர் இந்த படத்தினை ஒப்புக்கொள்ள ஒரே காரணம் ஏ.சி.திருலோகசந்தர் என்ற திறமையாளர். படத்தின் வெற்றி அதை உறுதிப்படுத்தியது. படத்தின் வெற்றிவிழாவில் பேசிய எம்.ஜி.ஆர், 'என்னை நான் ஏ.சி.டியிடம் ஒப்படைத்துவிட்டேன். அவர் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடத்தயாராக இருந்தேன்' என மனம்விட்டு பாராட்டினார்.

ஏ.வி.எம் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின் அடுத்தடுத்து வெளிப்படங்களின் வாய்ப்பு வந்தன. சிவாஜி படங்களை தொடர்ந்து இயக்கி புகழடைந்தார் ஏ.சி.டி. அத்தனையும் ரசிகர்களை கட்டிப்போட்ட வெற்றிப்படங்கள். தெய்வமகன் படத்தில் மூன்று சிவாஜிகளைப் பேச வைத்து ரசிகர்களை உருக வைத்திருப்பார் ஏ.சி.டி.

சிவாஜி பத்மினி நடித்து வெளியான இருமலர்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லையென்றாலும் மூன்று கதாபாத்திரங்களால் ரசிகர்களை நெக்குருக வைத்திருப்பார். 'காக்கும் கரங்கள்' படத்தின்மூலம் கோவையைச் சேர்ந்த ஓர் ஓவியக்கலைஞனை, நாயகனாக அறிமுகப்படுத்தினார். அவர்தான் பின்னாளில் சிவகுமார் எனப் புகழ்பெற்ற நடிகரானார். நகைச்சுவை நடிகை 'சச்சு'வை கதாநாயகியாக்கியதும் ஏ.சி.டிதான்.
குடும்பப்பாங்கான திரைப்படங்களை எடுத்து புகழ்பெற்ற ஏ.சி.டி, 60 களின் இறுதியில் ஹிட்ச்சாக் பாணியில் த்ரில்லர் கதை ஒன்றை இயக்கினார். அதே கண்கள் என்ற அப்படம் தமிழின் சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று.



ஏ.சி.டியின் திரைப்பட பட்டியலில் இன்னுமொரு முக்கியமான படம் பத்ரகாளி. தமிழ் பிராமண பெண்ணிற்கும் அவளது கணவனுக்குமிடையேயான பந்தத்தை உருக்கத்துடன் சொன்ன படம். எதிர்பாராதவிதமாக மனப்பிறழ்வு அடையும் அவள் அதற்குப்பின்னால் நடந்துகொள்ளும் முறையினால் தன் குழந்தையையே இழக்க நேரிடுகிறது. விவாகரத்து வரை சென்றபின்னுமான தம்பதிகளின் அழுத்தமான உறவை  உணர்ச்சிகரமான குடும்ப வாழ்வைச் சொன்ன பத்ரகாளி படத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வுதான் கட்டுரையின் முதலில் குறிப்பிட்ட நிகழ்ச்சி. அந்தப்படத்தின் வெற்றி ஏ.சி.டியின் தன்னம்பிக்கையை மட்டுமல்ல, அவரது சினிமா தொழில்நுட்ப திறமையையும் நிரூபித்தது தமிழ்த்திரைலகில்.

தன் விருப்பத்திற்கு எதிராக உள்ள படங்களை ஏ.சி.டி எத்தகைய விலைகொடுத்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டார். ஏ.சி.டியிடம் இருந்த அரிய குணம் இது. தன்னை வளர்த்தெடுத்த ஏ.வி.எம். நிறுவனத்திடமே இப்படி ஒரு விஷயத்தில் முரண்பட்டார் அவர். அந்தக்கதையை ஏ.சி.டி எடுத்தால் சிறப்பாக இருக்கும் என ஏ.வி.எம் நிறுவனம் விருப்பம் தெரிவிக்க அது தன்னால் முடியாது என திட்டவட்டமாக மறுத்தவர் ஏ.சி.டி.

80களின் மத்தியில் படம் எடுப்பதை குறைத்துக்கொண்ட ஏ.சி.டி தொலைக்காட்சி தொடர்கள் சிலவற்றை இயக்கினார். வயதும் உடல்நிலையும் இடம்கொடுக்காதபோது கண்ணியமாக திரையுலகிலிருந்து ஓய்வு பெற்றார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில் தனது இறுதிக்காலத்தை கழித்தார். சில வருடங்களுக்கு முன் அவரது மனைவி இறந்துவிட துக்கத்தில் இறுதிநாட்களை கழித்து வந்தார். கடந்த வாரத்திற்கு முன் அவரது மூத்த மகன் அமெரிக்காவில் மரணமடைந்தார். மிகுந்த உடல்நல பாதிப்பில் இருந்த ஏ.சி.டிக்கு இந்த தகவல் சொல்லப்படவில்லை. அந்தளவிற்கு நினைவு தவறியிருந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் நினைவு திரும்பாமலேயே மரணமடைந்தார். தெய்வமாகிவிட்ட தனது செல்ல மகனை பார்க்க நேரிலேயே சென்றுவிட்டாரோ என்னவோ இந்த தெய்வ மகன்.

ஏ.சி.டிக்கு இன்னொரு பெருமையும் உண்டு. தமிழகத்திலிருந்து முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் அவர் இயக்கத்தில் வெளியான தெய்வமகன் திரைப்படம்தான்! தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ஏ.சி.டி அண்ணாவிடம் தமிழகத்தின் ராஜா சாண்டோ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'ரசிகர்கள் கேட்கிறார்கள் கொடுக்கிறோம்'...என ஒழுக்கக்கேடான விஷயங்களை திரையிட்டு காரணம் சொல்லும் இன்றைய இயக்குனர்கள் மத்தியில் 'ரசிகர்களுக்கு இதைத்தான் கொடுப்பேன்' என்ற சினிமாவையும் ரசிகர்களையும் கண்ணியமாக அணுகிய இயக்குனர் ஏ.சி திருலோகசந்தர் என்றும் திரையுலகில் மறக்கமுடியாதவர் !

No comments :

Post a Comment