எம்.ஜி.ஆர் இறந்தபோது சிறப்பு மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா?

No comments

எம்.ஜி.ஆர் மறைவில் சந்தேகம் இருப்பதாகவும் தனி நீதிபதி அமைத்து விசாரிக்க இருப்பதாகவும் கூறிய ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆரின் சிறப்பு மருத்துவர் பி.ஆர்.எஸ் சுப்ரமணியம் விரிவான விளக்கம் அளித்திருந்தார்.
எம்.ஜி.ஆர் மறைவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை மோரில் விஷம் வைத்து கொன்று விட்டதாகவும் கடந்த 1988 ஆம் ஆண்டு ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புரட்சித்தலைவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. அதற்கு முன் அவர் யார் யார் வீட்டுக்கெல்லாம் சென்றார். அங்கு அவருக்கு உணவில் என்ன கலந்துகொடுக்கப்பட்டது. அதை கொடுத்தவர்கள் யார் என பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் சிறப்பு மருத்துவர் பி.ஆர்.எஸ் சுப்ரமணியம் தனியார் பத்திரிகைக்கு விரிவான விளக்கம் ஒன்றை அளித்தார், எம்.ஜி.ஆர் இரண்டாவது முறை அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்காக சென்றுவந்தபின் அவரை தொடர்ந்து கண்காணிக்க 8 மணிநேரத்துக்கு ஒரு மருத்துவர் என முத்துசாமி, சந்திரமோகன், மகாலிங்கம் என 3 மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர். வீட்டிலேயே ஒரு மருத்துவமனைக்குரிய அத்தனை உபகரணங்களும் பராமரிக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர் இறப்பதற்கு முன்தினமான 23-ம் திகதி வழக்கம்போல் அவரை பரிசோதிக்கச் சென்றேன். எல்லாம் நார்மலாக இருந்தது. என்னுடன் எம்.ஜி.ஆர் உற்சாகமாக சிரித்துப் பேசினார். பிறகு வீட்டுக்குத் திரும்பிவந்துவிட்டேன்.

அன்று மாலை 5 மணிக்கு பாத்ரூம் சென்ற எம்.ஜி.ஆருக்கு சோர்வு ஏற்பட்டு என்னை வரச்சொன்னதாக போன் வந்தது. போனேன். நான் போவதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் இதயத்துடிப்பை சரிபார்த்தபோது அது வழக்கத்தும் குறைவாக இருந்தது. ரத்தஓட்டமும் குறைந்திருந்ததாக டாக்டர் முத்துசாமி சொன்னார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் இருக்கிறேன். எம்.ஜி.ஆருக்கு அதுவரை இதயக்கோளாறு வந்ததில்லை. முதல்முறை அப்போலோவில் சேர்க்கப்பட்டபோதே அவருக்கு இதயக்கோளாறு என்றதை மறுத்தேன். பரிசோதனையிலும் அது உறுதியானது.
இந்த முறை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்தபோது, எனக்கு வியர்க்கிறதா என்ன அதெல்லாம் வேண்டாம் என மறுத்துவிட்டார். பின்னர் சகஜமாகி இரவு 10 மணிவரை எங்களுடன் சிரித்துப் பேசியபடி இருந்தார்.

நடுவே 8 மணிக்கு கஞ்சி குடித்தார். 10 மணிக்கு மோர் வாங்கி குடித்தார். இடையே அறைக்குள் இருந்த பாத்ரூமில் சிறுநீர் கழித்தார். பின்னர் நீங்கள் போய்ப் படுங்கள் என்றார். கிளம்பிவந்துவிட்டோம். அப்போது முத்துசாமி, கல்யாண்சிங் என்ற 2 மருத்துவர்கள் அவருடன் இருந்தனர்.
நள்ளிரவு 12-30 மணிக்கு முத்துசாமி ஓடிவந்து எம்.ஜி.ஆருக்கு ஈ.சி.ஜி முறையாக இல்லை என்றார்.

பதறியபடி ஓடினேன். நாங்கள் மேலே செல்வதற்குள் எம்.ஜி.ஆரின் இடதுபக்க இதய அறையில் துடிப்பு சீராக இல்லாமல் போய் துடிப்பு நின்றுவிட்டது. ஒரு கணம் உறைந்துபோனோம் நாங்கள்.
ஆனாலும் மாரடைப்பு உள்ளவர்களை காக்கும் இறுதி வாய்ப்பாக அவரது மார்பை டாக்டர்கள் இருவரும் பிசைந்து இதயத்தை இயங்க வைக்க முயன்றனர்.

இடையில் இருமுறை பலனளித்தது. ஆனால் 3 மணிக்கு நிரந்தரமாக இதயம் நின்றுபோனது. அதன்பின்னரே அதிகாரபூர்வமாக எம்.ஜி.ஆரின் மரணத்தை அறிவித்தோம். இவ்வாறு மருத்துவர் பி.ஆர்.எஸ் சுப்ரமணியம் பதிலளித்திருந்தார்.

No comments :

Post a Comment