பட்டத்து யானை - விமர்சனம்

No comments

எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்று விஷால் சமீபகாலமாக தீயா வேலைசெய்கிறார். ஆனால், காலம் அவரை ஏமாற்றியே வருகிறது. விஷாலின் உடல் அமைப்புக்கு ஏற்ற டைட்டில்.
பட்டத்து யானையாக விஷால் சண்டைக்காசிகளில் சக்கைபோடு போட்டாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் அது எதுவுமே பெரிய அளவில் பிரம்மிப்பை ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.


எல்லா மாஸ் ஹீரோக்களும் நடிக்கிற அதே கதைதான். கல்யாண சமையல் ஆர்டர்களை எடுத்து சமையல் வேலை பார்த்து வருபவர் சந்தானம். தன் நண்பர்களோடு சமையல் செய்யும் வேலைக்காக சந்தானத்திடம் வேலைக்கு சேர்கிறார் விஷால்.சந்தானத்திற்கு புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, அவரை ஒரு பெரிய ஹோட்டல் முதலாளி ஆக்குவதாக சொல்லி, பணத்தோடு திருச்சிக்கு செல்கிறார்கள் இந்த சமையல் பார்ட்டிகள்.



அங்கே ஒரு பெண்ணை பார்க்கிறார் விஷால். அது தான் படத்தின் ஹீரோயின் ஐஷ்வர்யா (அர்ஜுனின் மகள்). பார்ப்பதற்கு சுமாராக இருந்தாலும் சூப்பராக, அழகாக விஷால் கண்களுக்கு தெரிகிறார் ஐஷ்வர்யா.விஷால் பாட்டுக்கு ஐஷ்வர்யாவோடு டூயட் பாடிக்கொண்டு காலத்தை ஓட்ட, கொண்டுவந்த பணத்தை தொலைத்துவிட்டு நடுரோட்டில் நாயாய் அலைகிறார் சந்தானம். ஒரு பொண்ணு ரோட்டில் அழகாய் போவதைப் பார்த்தாலே அதை கூட்டிவந்து ரேப் பண்ணுகிற அளவுக்கு கொடூர வில்லன் திருச்சியில் உலா வருகிறார்.

அவர் ஐஷ்வர்யாவைப் பார்த்துவிட, அவர் வீட்டுக்கு பொண்ணுகேட்டு போய் பிரச்சனை பண்ணுகிறார். அந்த நேரத்தில் தான் பட்டத்து யானையாக ஹீரோ விஷால் சண்டைக்காட்சியில் பட்டையைக் கிளப்புகிறார்.

விஷாலின் சண்டை போடும் திறமையைப் பார்த்து ‘யாருடா இவன் என்று வில்லன் கும்பல் அசந்துபோக’... நான் மதுரை ஜெயில்ல இருந்தவன்டா... என்று உரக்கக்கத்தி பஞ்ச் டைலாக்குகளை அள்ளிவிடுகிறார் விஷால்.மதுரையில் தன் தங்கையைக் கொன்ற வில்லன் கும்பலை தீர்த்துக்கட்டி ஜெயிலுக்கு போன ஃப்ளாஷ் பேக் கதையை எடுத்துவிடுகிறார் விஷால்.
விஷால் திருச்சியில் இருப்பதை தெரிந்துகொண்ட மதுரை வில்லன்கள் திருச்சிக்கு தெரித்து ஓடிவருகிறார்கள். விஷால் தலைமறைவாக இருக்க, விஷாலின் காதலியான ஐஷ்வர்யாவுக்கு வலைவீசுகிறது வில்லன்கள் கும்பல். விஷால் ஐஷ்வர்யாவை எப்படி மீட்டார்? சந்தானம் என்ன ஆனார்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது க்ளைமாக்ஸ்.

டாட்டா சுமோக்கள் பறக்க, டமார் டமார் என வில்லன்களை விஷால் வேட்டையாடும் காட்சிகள் மாஸ்! விஷாலுக்காகவே சண்டைக்காட்சிகளை அமைக்கப்பட்டது போல, ஒவ்வொரு அடியும் சரவெடியாய் வெடிக்கிறது. அர்ஜுன் மகள் ஐஷ்வர்யா சுமாரான அழகு, அளவான நடிப்பு.
இன்னும் எத்தனை படங்களுக்கு இந்த ஹீரோக்கள் ஸ்கூல் படிக்கும் பெண்களை காதலிக்க போறாங்களோ. இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? கொஞ்சம் திருந்துங்க ஹீரோக்களே! விஷால் தன் தங்கையோடு பாசமாக இருக்கும் காட்சிகள் அழகானவை.

சந்தானத்தின் காமெடி அப்போ அப்போ சிரிப்பு வருவது என்னவொ உண்மைதான், ஆனால் பல இடங்களில் எரிச்சல். இப்படியே போனா வண்டி ரொம்ப நாளைக்குப் ஓடாது. புதுசா ஏதாவது யோசிங்க பாஸ்!

மயில்சாமி சின்ன கேரக்டரா இருந்தாலும் மனசுல நிக்கிற மாதிரி நல்ல பெர்ஃபொர்மன்ஸ். கானா பாலாவின் குரலில் அவர் பாடும் பாட்டு அசத்தல், அவர் போட்ட டான்ஸும் கலக்கல். பாடல்கள் சுமார் ரகம். தன் முந்தைய படங்களில் கிண்டிய அதே மசாலாவைக் கிண்டியிருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன். அடுத்தப் படத்துலயாவது புதுசா ஏதாவது யோசிங்க சார்...


பட்டத்து யானை - பரிதாபப் பூனை! 

நக்கீரன் 

No comments :

Post a Comment