வேலையற்ற இளைஞனும் வீராப்பு காதலும்- வருத்தப்படாமல் சொல்கிறார் இயக்குநர் பொன்ராம்

No comments
‘வின்னர்’ படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நடத்தி, ‘கைப்புள்ள’ வடிவேலு செய்த காமெடியை மறக்க முடியாது. இப்போது அதே தலைப்பில் உருவாகும் படத்தில், சத்யராஜுடன் இணைந்து லந்து பண்ணியிருக்கிறார், ‘யங் ஸ்டார்’ சிவகார்த்திகேயன். இப்படத்தின் மூலம் இயக்குநராகும் பொன்ராம், படத்தைப் பற்றி பேசினார்.


நிஜ சம்பவமா?
இல்லை. அன்றாடம் நம் வாழ்க்கையில் சந்திக்கும் பல சம்பவங்கள், பிறிதொரு நாளில் நினைவுக்கு வரும்போது, அதில் சில விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். காதல் சம்பந்தப்பட்ட விஷயம் என்றால், இன்னும் சுவையாக இருக்கும். அப்படியொரு கதையை மையப்படுத்தி, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை உருவாக்குகிறேன்.

என்ன கதை?
சிலுக்குவார்பட்டி என்ற ஊரின் பெரிய மனிதர் சிவனாண்டி என்ற கேரக்டரில் சத்யராஜ் வருகிறார். கவுரவத்துக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர். உசிலம்பட்டியில் வசிக்கும் விவசாயி சிவனாண்டி, என் பெரியப்பா. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்து, சத்யராஜின் கெட்-அப்பை உருவாக்கினேன். தனது கோஷ்டி பின்தொடர, புல்லட்டில் கம்பீரமாக வலம் வரும் அவரது அழகைப் பார்க்க வேண்டுமே... அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி. இவர்களின் மகள், தெலுங்கு வரவு ஸ்ரீதிவ்யா. அதே ஊரில் வேலைக்கு செல்வதே கவுரவக்குறைவு என்று நினைக்கும்
இளைஞன் சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர். அதன் செயலாளர் சூரி. சங்கத்துக்கு ஒரு சட்டச் சிக்கல் ஏற்படுகிறது என்றால், அதை தீர்த்து வைக்க ஓடி வரும் சுவாமிநாதன். இவர்களுக்கும், சத்யராஜ் கோஷ்டிக்கும் தீராத பகை. காரணம், ஸ்ரீதிவ்யாவை சிவகார்த்திகேயன் காதலிப்பது. இரண்டு கோஷ்டியினரிடம் சிக்கித் தவிக்கும் ஸ்ரீதிவ்யா, என்ன
செய்கிறார் என்பது கதை.

பிந்து மாதவியும் இருக்கிறாரே?
அவர் எதிர்பாராத கேரக்டர். டீச்சராக வருவார். சிறிது நேரமே என்றாலும், ரசிகர்கள் மனதில் நச்சென்று பதிவார். சூரி, ஷாலு ஜோடியின் காமெடியும் பேசப்படும். காதல் தண்டபாணி, ராஜா, கோபால், கந்தசாமி கோஷ்டியின் அலப்பறை இருக்கிறதே, அதை வெறும் வார்த்தையால் சொல்ல முடியாது. பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு, கதை நடக்கும் தேனிக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

ராஜேஷ்.எம் வசனம் எப்படி?
எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் ராஜேசும், நானும் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றினோம். பிறகு ராஜேஷ் இயக்கிய படங்களில் நான் பணியாற்றினேன். எனது வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்ட நல்ல நண்பர் என்பதால், ‘வ.வா.ச’ படத்துக்கு அவரே முன்வந்து வசனம் எழுதிக் கொடுத்தார். அது எங்களுக்கு மிகப் பெரிய பலமாக மாறிவிட்டது. நான் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறேன்.

‘பஞ்ச்’ டயலாக் இருக்கிறதாமே?
சத்யராஜும், சிவகார்த்திகேயனும் இணைகிறார்கள் என்றாலே, ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பார்கள். அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக ஒவ்வொரு காட்சியிலும், அவரை இவரும், இவரை அவரும் மிஞ்சும் அளவுக்கு நடிப்பில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ‘நாலுபேருக்கு நல்லது பண்ணணும்னு நெனச்சாலே இப்படித்தான்... பேலன்ஸ் இல்லாம போயிடுது’ என்று சிவகார்த்திகேயன் அடிக்கடி பேசும் பஞ்ச் டயலாக், படம் ரிலீசான பிறகு பேமஸ் ஆகும். ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழ் தெரியாது. ஆனால், அற்புதமாக நடித்து அசத்தி விட்டார். அவரது குடும்பப்பாங்கான தோற்றம் எல்லோரையும் வசீகரிக்கும்.

வடிவேலு நடிக்கிறாராமே?
‘வின்னர்’ படத்தில், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நடத்தியவராயிற்றே. எனவே, அவரை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கேட்டுள்ளோம். தவிர, வேறொரு இளம் ஹீரோவை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்கும் திட்டமும் இருக்கிறது.

No comments :

Post a Comment